எப்படியெல்லாம் ஐடியா கொடுக்கிறாங்கய்யா…..
கண்மணியும், கண்மணி அப்பாவும் விளையாடி கொண்டிருந்தார்கள். கண்மணி திடீரென்று மூச்சு வாங்க என்னிடம் வந்தாள்.
”அம்மா…. அப்பா என்னுடைய முட்டை ஒடச்சிட்டாரு…. போச்சு… என் காலு போச்சு…. பாரு இன்னும் five டேஸ்ல இன்னொரு காலையும் ஒடைக்க போறாரு… ஆமா … அதனால சீக்கிரமா ஒண்ணு பண்ணு”
“என்ன பண்ணனும்”
“இன்னும் five டேஸ்ல அப்பாவை மாத்திடு”
*******************************************
காலையில் இருந்தே கண்மணி எதற்கெடுத்தாலும் பிடிவாதம் பிடித்து கொண்டிருந்தாள். சாப்பிடுவதற்கு ஒரு அடம், குளிப்பதற்க்கு ஒரு அழுகை என்று ஒரே அமர்களம். அது போதாதென்று டிஷ்யூ பேப்பரை எடுத்து வேண்டுமென்று வாயில் வைத்து கொண்டு மகா ஆனந்தத்தோடு அவங்க அப்பாவை கடுப்பேற்றி கொண்டிருந்தாள்.
சாப்பிட வயிற்றில் இடமே இல்லை என்று சாதித்து விட்டு, வீட்டில் இருந்த இனிப்பு பலகாரங்களை எல்லாம் காலி செய்து கொண்டிருந்ததால், மூட்டை கட்டி வைத்திருந்த கோபத்தை எல்லாம் கொட்ட ஆரம்பித்துவிட்டார் கண்மணி அப்பா. “!@$# !#@$%# %$^*& %^&*^&” என்று ஒரு பத்து நிமிஷம் சத்தம் போட்டதை எல்லாம் பேசாமல் அம்மையார் கேட்டுகொண்டிருந்தார்கள்.
மண்டகப்படி எல்லாம் குறையில்லாமல் வாங்கியபிறகு, என்னிடம் திரும்பி, “அம்மா, இந்த அப்பா சின்ன பிள்ளையா இருக்கும் போது நான் தான் அவருக்கு அம்மாவா இருந்தேன். என்னமா… சேட்டை பண்ணுவாரு தெரியுமா? டிஸ்யு எடுத்து சாப்பிடுவாரு….. பால் குடிக்க மாட்டாரு……. சொல்பேச்சு ஒண்ணும் கேட்க மாட்டாரு. ஒரே இனிப்பா சாப்பிடுவாரு…..இப்ப என்னிய சொல்றாரு…ஹா….ஹா….ஹா…… ” (எப்பூடி….)
**************************************************
12 comments பெப்ரவரி 7, 2010
ஒரு நிமிட கதை.
13 comments ஜனவரி 14, 2010
குருவி
இங்கு(குவைத்தில்) இப்போது குளிர் காலம். மத்தியானம் நல்ல வெயில் இருந்ததால் மெள்ள கண்மணியை அழைத்து கொண்டு சால்மியாவை(நாங்க இருக்கும் ஊர்) சுற்ற ஆரம்பித்தேன். கொஞ்சம் பயம் மனதில் இருந்தாலும், கூடவே ஒரு பெரிய மணுஷி வர்றாங்களேன்னு ஒரு தைரியத்தில் கிளம்பிட்டேன்.
தெரு ரெம்பவே அமைதியா இருந்ததால் கண்மணியின் சத்தம் மாதிரம் high pitch யில் கேட்டது. கேள்வி பதில் என்று கொஞ்ச நேரம் பேசிவிட்டு பிறகு அமைதியாக வாய் பார்த்துகொண்டே வந்தாள்.
அந்த கேப்பில் அங்கு பறந்துகொண்டிருந்த சிட்டு குருவிகளையும், புறாக்களையும் பார்த்து திடீரென்று என் மனதிலும் பலவிதமான எண்ணங்கள். இந்த மனுசங்களுக்குத்தான் எத்தனை விதமான கட்டாயங்கள்.
சின்ன பிள்ளைங்களை கேட்டா, “எப்ப பாரு அங்க போகாத இத செய்யாதன்னு ஒரே போர்” என்று புலம்புவார்கள்.
கொஞ்சம் பெரியவங்களானா நிறைய படிக்கணும் , கோச்சிங் கிளாஸ் போகணும், முதல்லா வரணும் என்று ஒரு போராட்டம்.
படிச்சி முடிச்சபிறகு, அவன் இவ்வளவு சம்பளம் வாங்குறான், இவன் காம்பஸ் இன்டர்வியூவில் செலக்ட் ஆயிட்டானாம் என்று துரத்துவதில், நாமளும் மூணு நாலு கம்பெனி தாவி ஒரு வழியா ஒரு வழியா நல்ல வேலையில் உக்காந்தா விடணுமே. அதான் நடக்காது, ம்… எப்ப கல்யாணம் பண்ணுகிற மாதிரி ஐடியா? என்று அடுத்த ஆயுதத்தை பிடித்திருப்பார்கள்.
அப்புறம் என்ன குடும்பம், குணம், படிப்பு, வேலை எல்லாத்தையும் அலசி ஆராஞ்சி கல்யாணம் முடிஞ்சி அப்படான்னு உக்காந்தா அப்புறம் தான் நமக்கே பெரிய பிரச்சனைக்கு நாம அடிக்கல் நாட்டியிருப்பது தெரியும்.
கல்யாணம் முடிஞ்சா அடுத்த பத்தாவது மாசத்தில் பிள்ளை இருக்கணும் இல்லைன்னா “என்ன ஆச்சு? “அங்க போய் பாருங்க” “இங்க போய் பாருங்க” அப்படீன்னு குடம் குடமா எண்ணை ஊத்தி நம்ம வேதனையை வளப்பாங்க ….. ஓ மை காட்….
”கெக்கே பிக்கேன்னு..” கண்மணியின் சிரிப்பு என்னை நிகழ்காலத்திற்க்கு கொண்டு வந்தது.
” கண்மணி இந்த சிட்டு குருவி மாதிரி ஜாலியா பறந்துகிட்டு இருந்தா எவ்வளவு ஜாலியா இருக்கும்?”
“ஐயே… அப்புறம் யாராச்சும் நம்மள ஸூட் பண்ணிடுவாங்க. உங்களுக்கு தெரியாதா? பாருங்க, இந்த குருவியெல்லாம் நம்மள பாத்து எப்படி பயப்படுதுன்னு”
தலைப்ப பாத்து ஏதோ குருவி படத்தை எல்லாம் எதிப்பாத்து வந்திருக்க மாட்டீங்கன்னு எனக்கு தெரியும்.
16 comments ஜனவரி 6, 2010
கவித… கவிதன்னு… சொல்லமாட்டேன்.
அழுகை.
காலையில் நடந்த சண்டையில்
அண்ணா கொடுத்த அடிக்கு,
மாலையில் அம்மா வீட்டை நெருங்கும் போது
வெடித்து சிதறி
வட்டியும் முதலுமாக
வாங்கி கொடுத்த பிறகு தான் நிற்கும்.
வார்த்தைகளை மடக்கி மடக்கி எழுதினால் கவித வந்திரும் என்று ஒருத்தங்க சொன்னதால் நானும் எழுதி பாத்திட்டேன். அதுக்காக இனிமேல் இங்க வரமாட்டேன் என்றெல்லாம் கோச்சிக்க கூடாது.
அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.
27 comments December 31, 2009
குழந்தை அம்மா….
அம்மா… உலகத்திலே மிகவும் அற்புதமான வார்த்தை. தினம் தினம் அம்மாவின் நினைவு வந்து என்னை ஆக்கிரமித்தாலும்…. இன்று ஏனோ ரெம்பவே மனது அலைபாய்கிறது.
“அம்மா உங்களுக்கு தான் சுகர் ஆச்சே, அதனால எங்களுக்கும் பலாப்பழம் வேண்டாம்.”
” எனக்காக எல்லாம் நீங்க விரதம் இருக்காண்டாம்”, அப்பாவை பார்த்து ,” நம்ம தோப்பில்லுள்ள பலா மரத்தில் ஒரு பலா நல்ல வெளஞ்சி இருக்காம். இந்த பிள்ளைங்க இப்படி தான் சொல்லுவாங்க, நீங்க பறிச்சிட்டு வாங்க”
என்று பலாப்பழத்தை வீட்டுக்கு வரவழைத்து, இரண்டு நாட்களில் பழுப்பதை, சமையம் கிடைக்கும் போதெல்லாம் அதை அமுக்கி… அமுக்கியே…. ஒரே நாளில் பழுக்க வைத்து, முதல் ஆளாக கையெல்லாம் தேங்காய் எண்ணை தடவி…. வெட்டி…., “நல்லாயிருக்கா” என்று ருசிபார்த்து….. ருசிபார்த்து….. பாதி பழத்தை குழந்தை போல் ஆசையாக அபேஸ்பண்ணும் அம்மா….
வெயிற்காலங்களில், வயலில் உளுந்தும் ஊடு பயிறாக எள்ளும் போடுவார்கள். எள்ளு உடம்புக்கு ரெம்ப நல்லது என்று பாடம் நடத்தும் போதே எங்களுக்கு புரிந்து விடும். அதை இடித்து சாப்பிட்டால் தான் ருசி என்று ஆரம்பித்துவிடுவார்கள். முறைத்து கொண்டு இடிக்க ஆரம்பிப்பேன்.
பக்கத்தில் ஒரு குட்டி பலகையை போட்டு அருகில் அடக்க ஒடுக்கமாக உட்காந்து கொள்வார்கள். அது இடிபட்டு எண்ணை வெளிவர ஆரம்பிக்கும் போது தேங்காய் சேர்த்து, சிறிது நேரம் களித்து கருப்பட்டி சேர்ப்பார்கள். அதுவரை பவ்வியமாக இருப்பவர்கள், அப்புறம்
” நிப்பாட்டு…. கருப்பட்டி சரியாண்ணு பாக்கிறேன்”,
” நல்ல இடிபட்டிருக்காண்ணு பாக்கிறேன்”
என்று தொடர்ந்து ஏதாவது காரணத்தை சொல்லி டேஸ்ட் பண்ணி….. டேஸ்ட் பண்ணி…… ஒரு வழியா இடித்து முடிப்பதற்குள்…. பாதி எள்ளு காணாமல் போயிருக்கும். “அம்மா…..” என்று நாம் கோபப்படும் முன்னே குழந்தை போல் ஒரே சிரிப்பில் அதையும் காணடித்து விடுவார்கள்.
மாம்பழ சீசனில் கேட்கவே வேண்டாம்…. பெரிய பையை தூக்கி கொண்டு சந்தைக்கு கிளம்பும் போதே,
”அம்மா ரெம்ப வாங்க வேண்டாம்” என்போம்.
“நான் காய் தான் வாங்கப்போறேன். பழம் ரெம்ப நல்லாயிருந்துச்சுன்னா கொஞ்சூண்டு வாங்குவேன்…அதுவும் உங்களுக்குத்தான்” என்று பயங்கர பில்டப் கொடுப்பார்கள்.
வந்தப்பின் பையை பார்த்தால் மருந்துக்கு கூட காய் இருக்காது. சின்ன பாப்பா போல் முகத்தை வைத்து கொண்டு “பழம் ரெம்ப நல்லாயிருந்துச்சா…. இனிமேல் இப்படி கிடைக்குமோ என்னமோ என்று வாங்கிவிட்டேன்” என்று சொல்பவர்களிடம் எப்படி கோபப்படுவது.
பொதுவாக, எல்லாவற்றையும் பத்திரமாக வைப்பாங்க எங்கம்மா, ஆனா தினமும் பள்ளிக்கூடம் கிளம்பும் போது வைத்த இடத்தை தவறாமல் மறந்துவிடுவார்கள். அப்புறம் என்ன “அம்மா தினம் தினம் உங்க திங்ஸ தேடி தேடியே… எங்க பாதி வாழ் நாளும் வீணா போகுதம்மா” என்று அலுத்து கொண்டாலும்…. அவங்கள நேரத்துக்கு அனுப்பிவிடுறதுக்குள்ள…..
அம்மா… எனக்கு உன்னை பார்க்கவேண்டும் போல் இருக்கிறதே….ப்ளீஸ் எனக்கு குழந்தையாக பிறந்து வாயேன்……
28 comments December 17, 2009
பிறந்த நாள் – 4.
இப்பதான் நடந்தது மாதிரி இருந்தது அதற்குள் நாலு வருஷம் ஆயிடுச்சி.இன்று (நவம்பர் 28) பிறந்த நாள் கொண்டாடும் கண்மணிக்கு , கடவுளின் அருளால் என்றும் நல்லமாக வாழ பிரார்த்தனை செய்வதோடு,அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துகொள்கிறேன்.
இந்த நாலு வருஷத்தில் என்னை பாசத்தால் நிரப்பி,எனக்கு நிறைய விஷயங்கள் கற்று கொடுத்த கண்மணிக்கு நன்றி.
கண்மணி ” நான் தான் உனக்கு அம்மா, என்னிய அம்மாண்ணு தான் கூப்பிடனும்”
“சரி அம்மா”
“அம்மாண்ணா ஏதாவது செய்து கொடுக்க வேண்டுமே? செய்து தரட்டுமா?”
“சரி செய்யுங்க”
“நூடுல்ஸ் பண்ணப்போறேன்”
“எப்படி செய்வ?”
“நூடுல்ஸ் போட்டு, கொஞ்சம் மஞ்சப்பொடி போட்டு, அப்புறம் உப்பு போட்டு, சீனி போட்டு, கிண்டுவேன்… அதான் நோடுல்ஸ்”
“ஐயோ பாப்பா… உன்னோட ரெசிப்பிய கேட்டவுடனே அம்மாவுக்கு வயிறு ரொம்பிடுச்சு… அதனால எதுவும் செய்யவேண்டாம்” என்று சமாதானபடுத்துவதற்குள் ஒரு வழியாகிவிட்டேன்.
30 comments நவம்பர் 28, 2009
நளபாகமா?… பழிபாவமா?
இத்தனை வருஷம் ஆனப்பிறகும் நான் சாப்பிட கூப்பிட்டால் போதும் ஏதோ அனக்கோண்டாவுடன் விருந்திர்க்கு அழைப்புவிடுக்கிற மாதிரி என் வீட்டுக்காரர் ரெம்பவே பயப்படுவார். எல்லாம் என் சமையலை நினைத்து தான்.
அதுக்காக எனக்கு சமையலே தெரியாது என்று நினைத்து விடாதீங்க. என் அம்மாவும் டீச்சராக இருந்ததால், நான் சிறு வயதிலேயே , அம்மாவுக்கு சிறு சிறு வேலைகள் செய்துகொடுப்பேன். அப்புறம்… எட்டாம் வகுப்பு படிக்கும் போதே, பொரியல், அவியல் என்று சின்ன சின்ன சமையலையும் செய்வேன். அப்புறம் அடையாறில் வேலை பார்க்கும் போது ஓரளவுக்கு சமையலையும் செய்திருக்கிறேன். இவ்வளவு முன் அனுபவம் இருக்கும் போது திருமணம் ஆன பிறகு எவ்வளவு முன்னேறியிருக்கவேண்டும்.
ஆனா பாருங்க ஒரு முன்னேற்றமும் கிடையாது. என்னுடைய தோழிகள் எல்லாருமே வாயில் நுழைவதற்க்கே கஷ்டப்படும் (பதார்த்தங்களை அல்ல)பெயருடைய அறுசுவை பதார்த்தங்களை எல்லாம் அசால்ட்டா செய்து அசத்தும் போது … நான் மாத்திரம் அதே சாம்பார், பருப்பு, பொரியல் என்று அல்லாடும்போது ரெம்பவே அவஸ்த்தையாக இருக்கும்(அது கூட அப்பப்ப காலைவாரிவிடும்).
முயற்ச்சி பண்ணுவது தானே என்று நீங்கள் எண்ணலாம். முயற்ச்சிபண்ணினேனே. நான் முதலில் ஒரு ஜவ்வரிசி வடை செய்து , அந்த அனுபவத்தை ஏற்கனவே எழுதியிருக்கிறேன். அதுபோல் சுசியம் செய்ய ஆரம்பித்து பொங்கலாகி… பின் பாயாசம் ஆனாது, கேக் செய்ய ஆரம்பித்து பிஸ்கட் செய்தது, பிரியாணி செய்ய ஆரம்பித்து வெஜிட்டபிள் பொங்கலாய் முடித்தது என்று … ஏகப்பட்ட அழிச்சாட்டியம் பண்ணி என் வீட்டுக்காரரை எலியாக்கி கிலியை அதிகப்படுத்தியதுதான் மிச்சம்.
அதை விட கொடுமை என்னவென்றால் என் தோழி(?) என் புலம்பலை கேட்டு விட்டு “எதுக்கு இப்படி கவலைபடுறீங்க… எவ்வளவு நல்லா சாம்பார் வைக்கிறீங்க… ஆம்லெட் போடுறீங்க… கடலை வறுக்குறீங்க… சுடு தண்ணி வைக்கிறீங்க….” என்று ஆறுதல் சொல்லுறாங்க. என்னுடைய reaction னை பார்த்துவிட்டு “he .. he… நல்லப் பண்ணுறதை தானே சொல்லமுடியும்” என்று சிரிப்பு வேற.
எனக்கு மாத்திரம் ஏன் இப்படி நடக்குது(அதுவும் திருமணமான பிறகு) என்று நிறைய நாள் , கிச்சன் எல்லைக்கே சென்று யோசித்துபார்த்தும்…. பதில் இல்லை. இப்படியே விட்டால் என்னாகிறது என்று கொஞ்சம் தீவிரமாக விசாரித்ததில் , அவங்க வீட்டில் கிடைத்த தகவல் இது.
சிறிய கொசுவர்த்தி.
******************
“அம்மா இதென்ன புதுசா செய்திருக்கீங்க”
“ஆமாப்பா உனக்கு பிடிக்குமேன்னு காலிப்ளவர் பஜ்ஜி செய்தேன் பிடிச்சிருக்கா”
“ம்…. ஆனா கொஞ்சம் காராம் அதிகமோன்னு தோணுது”
” உனக்கு காரமே பிடிக்காது என்று நான் காரமே போடல. அப்புறம் எப்படிடா காரம் வரும்” அம்மா காரமாக கேட்க ….
அதற்கு பதிலே இல்லை .
—–
”உனக்கு பிடிக்குமேன்னு நார்த்தைங்கா ஊருகாய் பண்ணினேன், சாப்பிட்டு பாரேன்”
சாப்பிட்டு பார்த்துவிட்டு, “ம்… கொஞ்சம் சீரகம் அதிகமாயிருக்குமோ”
”சீரகம் எப்படி இருக்கும் என்றாவது உனக்கு தெரியுமாப்பா” என்று நொந்து போய் கேட்க
, “he….he….” என்ற சிரிப்பு தான் பதில்
. —–
இப்படி ஏதாவது ஒரு குறையை கண்டிப்பாக சொல்லவேண்டும் என்ற தீவிரமான கொள்கையால் , ரெம்பவே டென்ஷனான அம்மா ஒரு நாள்,
“டேய் (அம்மா கூப்பிட்டாங்க, நான் கூப்பிடுவேனா?) உனக்கு சமையலே வராத பொண்ணு தான் வந்து வாய்க்கபோறா பாரு” என்று சாபம் கொடுத்துவிட்டார்.
****************************
அந்த வரத்தை வாங்கியவர் வேறு யாருமில்லை என் வீட்டுக்காரர் தான் என்று நீங்கள் சரியாக கணித்திருப்பீர்கள். இப்படியெல்லாம் வரம் வாங்கி… எனக்கு தெரிந்த சமையலைகூட என்னிடமிருந்து விரட்டிய புண்ணியம் பண்ணிவிட்டு , என்னிடம் அறுசுவை சமையலை எப்படி எதிர்பார்க்கலாம் ? நீங்களே சொல்லுங்க.
அதனால அம்மா சமையலை சும்மா சும்மா கேலி பண்ணாம ஒழுங்கா சாப்பிடீங்கன்னா, நளபாகம் செய்கிற நல்ல மனைவி கிடைப்பாங்க இல்லாட்டி…. என்னை மாதிரி அப்பாவி பொண்ணுங்களை இம்சை பண்ணுகிற பழி பாவம் தான் கிடைக்கும். உஷாரா இருந்துக்கோங்க..
17 comments நவம்பர் 12, 2009
ஒருவழியா திறந்துட்டாங்க….
அப்பாடி ஒரு வழியா கண்மணிக்கு ஸ்கூல் ஆரம்பிச்சிட்டாங்க. கண்மணிக்கே விடுமுறை பயங்கர போர் அடித்துவிட்டது, முகமெல்லாம் சிரிப்பாக கிளம்பிட்டாங்க.

நீண்ட விடுமுறைக்கு அப்புறம் பள்ளிக்கூடத்துக்கு கிளம்புறாங்களே என்று விடுப்பு சொல்லிவிட்டு நானும் கூடப்போனால்,
”அம்மா நீங்க எதுக்கு என் கூட வர்றீங்க? நான் தனியா போயிக்குவேன்.” என்று கேள்வி கேட்கிறாங்க.
”பாப்பா, முதல் நாளு இல்ல… அதான் ,அப்படியே உங்க டீச்சரிடமும் பேசலாமே என்று தான்”
”நான் ஒண்ணும் பாப்பா இல்ல. ” Big girl”. பெரிய அக்கவாயிட்டேன். இனிமே அக்கான்னு தான் கூப்பிடணும்” பயங்கர கண்டிப்புடன்.
”ஓ…. சரி சுண்’டக்கா’ “
*************
கண்மணி பள்ளிக்கூடத்துக்கு போயிற்று வீட்டுக்கு வந்தால் மணி ஒன்பதுதான் ஆகியிருந்தது. என்ன செய்யலாம் என்று யோசித்தபோது, எங்களுடைய கடிதம் (திருமணத்திற்க்கு முன்னால் எழுதியது)நியாபகம் வந்தது. முன்னாடியெல்லாம், என் வீட்டுகாரருடன் அடிக்கடி சண்டை போடுவேன்( வேறு பொழுதுபோக்கு?). அப்புறம் அவருக்கு ரெம்ப கோபம் வந்துவிட்டால் போதும், உடனே அந்த கடிதங்களை எடுத்து சத்தம் போட்டு வாசிக்க தொடங்கிவிடுவேன். (கல்யாணத்துக்கு முன்னாடி எழுதின கடிதம் எப்படி இருக்கும் என்று நான் தனியாக சொல்லவேண்டியதில்லை)
ரெம்ப நாள் ஆகிவிட்டது… அந்த கடிதங்களை எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். எப்போதும் அவர் எழுதிய கடிதத்தை தான் வாசிப்பேன், இன்று நான் எழுதிய கடிதங்களையும் சேர்த்து வாசிக்க ஆரம்பித்தேன்.
ஆனாலும் எனக்கு ரெம்பவே தைரியம் தான். என்னுடைய எல்லா கெட்ட பழக்கங்களையும் ஒரு கடிதத்தில் பட்டியல் போட்டு கொடுத்திருக்கிறேன். ம்… அன்று அந்த விஷயங்கள் எல்லாமே விளையாட்டாக இருந்தது , திருமணமானபிறகு அதெல்லாம் சீரியஸ்(!) விஷயமாகிவிட்டது. அப்படி நினைத்து கொண்டேனே தவிர… (இன்றும் அந்த கெட்ட பழக்கங்கள் எல்லாம் மாறாமல் அப்படியே தான் இருக்கின்றது).
ரெம்ப நேரம் தனியாக சிரித்துகொண்டே இருந்தேன். என்ன தான் இமெயில், தொலைபேசி என்று வந்தாலும், கடிதங்களுக்கு இணையாகாது. நம்மையே புதுபித்துகொள்ள வைக்கும் சுவையான அனுபவம்
18 comments நவம்பர் 8, 2009
கோபப்படாதீங்க …..ப்ளீஸ்….
மனிதர்கள் பலவிதம், பதிவர்கள் பலவிதம்… ஏன் பேய்கள் பலவிதம் என்று கூட நிறைய பதிவுகள் வரும்போது நாமும் இப்படி ஏதாவது எழுதலாமா என்று ஒரு ஆராய்ச்சி பண்ணிக் கொண்டிருந்தபோது.. திடீரென்று நிலநடுக்கம் வந்த மாதிரி நான் இருந்த அறையே கிடுகிடுத்து விட்டது. என் எதிரில் இருந்த அரபி அம்மா படா கோபத்தில் (என்னிடம் அல்ல) கிறீச்சிட்டது தான் காரணம்.
ஏன்? எதற்கு? என்று ஆராய்ச்சி செய்தால் நமக்கு தான் கோபம் வரும். சின்ன விஷயத்துக்கும் அப்படி ஒரு காட்டு கத்தல், எனக்கு ரெம்ப அநியாயமாகப்படும். இங்கு அடிப்படை உதவிகளை செய்ய இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், இந்தோனேஷியா முதலிய நாடுகளிலிருந்து தான் நிறைய பேர் வருவார்கள். அந்த ப்ளாக்கில் நான் மட்டும் தான் இந்தியா என்பதாலோ என்னவோ, அந்த பணிப்பெண்கள், அரபி பெண்களிடம் நன்றாக வாங்கிவிட்டு என்னை பார்த்து ஒரு சோகமான புன்னகையை உதிர்த்து விட்டு போவார்கள். எனக்கு ரெம்பவே கஷ்டமாகயிருக்கும்.
எனக்கு தெரிந்து , இவர்கள் புகார் கொடுத்து , பணிப்பெண்களை மாற்றுவது ஒரு தொடர்கதையாகிவிட்டது. அதிலும் எதுவும் செய்யாமலே திருட்டு பட்டம் கொடுக்கும் போது…. அழும் பணிப்பெண்களை பார்த்தால் சகிக்காது.
இவ்வளவு எழுதிவிட்டு கண்மணி எனக்கு தந்த பாடத்தை சொல்லாமல் எப்படி முடிப்பது.
ஒரு நாள் , தூங்குவதற்க்கு முன்னால் பல் விளக்க பயங்கரமாக அடம்பிடித்தாள். என்னென்னவோ சொல்லிப் பார்த்தும் கேட்கிற மாதிரி தெரியவில்லை. கடைசியில் பொறுமை இழந்து நான் கொஞ்சம் கோபத்தில் அரட்டி, பிடித்து வைத்து பல் விளக்கி விட்டேன். பொதுவாக அப்படி கோபப்பட்டால், சிறிது நேரம் கழித்து மெள்ள அவளுக்கு புரிய வைத்து, அவளை சமாதானபடுத்திவிடுவேன். அவளும் புரிந்து கொள்ளுவாள். ஆனால் அன்று எனக்கு மகா கோபம் வந்து விட்டதால், அப்படியே படுக்கைக்கும் சென்று…. துங்குவதற்க்கு முன்னால் சொல்லும் ஒரு செபத்தை ஆரம்பித்தேன்.
“இயேசப்பா உமக்கு நன்றி”
கண்மணி உம்மென்று முகத்தை வைத்து கொண்டு “இயேசப்பா உமக்கு நன்றி”.
”இயேசப்பா எனக்கு நல்ல ஞானத்தை தாரும்”
கண்மணியின் கண்ணில் கண்ணீரூம் , முகத்தில் கோபமும் கொப்பளிக்க, ” இயேசப்பா எனக்கு நல்ல அறிவை தந்திருக்காரு அதனாலத்தான் நான் நல்ல பிள்ளையா படிக்கிறேன், எழுதுறேன்(இப்பவெல்லாம் கண்மணி சமத்தா எழுதுறா) , உங்களிடம் தான் அது இல்லை அதனாலத்தான் நீங்க கோபப்படுறீங்க“
16 comments அக்டோபர் 29, 2009
கண்மணி ரெம்ப அலர்ட் தான்.
“கண்மணி உங்க தாத்தாவோட சூட்கேச பாரு …. ரெம்ப பழசாயிடுச்சி”
“ஆமா… சீ…. ரெம்ப அசிங்கமாயிருக்கு” என்றாள் முகத்தை சுழித்துவிட்டு.
“ஒண்ணு செய்….. உங்க அப்பாகிட்ட சொல்லி புதுசா ஒரு சூட்கேஸ் தாத்தாவுக்கு வாங்கி விடலாம்.”
கொஞ்ச நேரம் யோசனை செய்துவிட்டு, ” வந்து….. நீங்க இப்ப சும்மா தானே இருக்கீங்க… ஒரு துணியை எடுத்து சூட்கேஸை நல்லா துடைங்க .. அப்போ அழகாயிடும்“
*************************************
“பெரியம்மா.. இந்த பெட்டி கவர் கிழிஞ்சிருக்கு .. புதுசா ஒண்ணு வாங்கி போடுங்க”
“கண்மணி, பெரியம்மா கிட்ட காசே இல்லம்மா. நீ அப்பாகிட்ட கொஞ்சம் வாங்கி தர்றியா…. புதுசா வாங்கிக்கிறேன்”
“ம்.. எங்க அப்பாகிட்டயெல்லாம் வாங்கவேண்டாம்…… நீங்க இந்த ஊசி நூலு இருக்கு பாத்தீங்களா … அத வச்சி தைங்க அப்போ சரியாயிடும்“.
**************************************
கண்மணி அப்பா: ” அம்மாடி நீ சாதாரண ஆளு கிடையாது… கடையேழு வள்ளல்களில்… பாரி வள்ளல் பக்கத்தில் கண்டிப்பா உனக்கு ஒரு இடம் உண்டு. “
24 comments அக்டோபர் 14, 2009


