Archive for ஜூலை, 2008
குறும்பு
கண்மணியிடம் பேபி காரட் கொடுத்து,
” கண்மணி இதை சாப்பிட்டு பாரேன் நல்லாயிருக்கும்” என்றேன்.
வாங்கி சாப்பிட்டாள்.
தலையை ஆட்டிக்கொண்டே “காரட் நல்லாயிருக்கும்மா”
“இது பேபி காரட் கண்மணி”
“ம்… அப்போ அம்மா காரட் எங்கம்மா?”
???? என்ன சொல்ல நான்?
*************
கண்மணி ப்ளே ஸ்கூலுக்கு போகவேண்டும் என்று
அழிச்சாட்டியம் பண்ணியதால், சேர்த்துவிட்டோம்.
ஒரு நாள் காலையில், ஆபீஸ் வந்ததுதான், வீட்டில் இருந்து போன் வந்தது
” என்னம்மா கண்மணி கிட்ட கொஞ்ஞம் பேசு. காலையிலிருந்து ஒரே அட்டகாசம். பல் விளக்க மாட்டேன், குளிக்க மாட்டேன், ஸ்கூலும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என்கிறாள். எனக்கு கிளம்பணும் நேரமாகிவிட்டது” என்று மூச்சுவிடாமல் கோபத்துடன் பேசி விட்டு போனை கண்மணியிடம் கொடுத்தார் என் கணவர்.
“என்ன கண்மணிமா.” என்றேன் நான்.
“அம்மா எனக்கு ஸ்கூலுக்கு போக ஆசையா…. இருக்கும்மா. இப்போ குளிக்க போகணும் , நான் போனை அப்பாகிட்ட கொடுக்கட்டா?” என்றாள் ரெம்ப நல்ல பிள்ளையாட்டம்.
சிரித்துவிட்டு, “என்னப்பா இப்படி சொல்கிறாள்?” என்று அவரிடம் கேட்டேன்.
“உன்னை மாதிரியே அந்தர்பல்டி அடிக்கிறா பாரு, நான் தான் மாட்டிட்டு முழிச்சிக்கிட்டு இருக்கேன்” என்று அலுத்துக்கொண்டார்.
கவிதை என்றால் என்ன?
சமீபத்தில் படித்து ரசித்த பாடல் இது
அசதியைக் கிள்ளி, அறிவைக் கிளப்பி,
அலையும் மனத்தை அடக்கி நிறுத்தி,
இன்ப துன்ப உணர்ச்சிகளை எழுப்பி,
நன்மை தீமையை நன்றாய் விளக்க
இல்லாத ஒன்றையும் இருப்பதைப் போலவே
மனக்கண் முன்னால் மலரச் செய்தே
இருக்கிற ஒன்றையும் இல்லாத தேபோல்
மனத்தை விட்டு மறையச் செய்து,
வாழ்க்கைக் குதவும் நல்ல வழிகளில்
ஊக்கம் கொள்ளும் உறுதியை ஊட்டப்
பாடு படாமல் பாடம் பண்ணவும்,
நினைவில் எளிதாய் நிற்கவும் தக்கதாய்
இணைத்த சொற்களே கவிதை என்ப்படும்.
கவிதை என்பது கற்பனை உள்ளது;
கூட்டியும் பேசும்; குறைத்தும் கூறும்;
பொய்ம்மையும் வாய்மையே போலப் பொலிவுற
அறங்களைப் புகட்டலே அதனுடை நோக்கம்.
எதுகை மோனை இலக்கணம் பார்த்தும்
பதங்களை அடுக்கிப் பாட்டெனச் செய்தும்
உள்ளதை உள்ளதே போல உரைக்கும்
கதையோ பாட்டோ கற்பனை யில்லையேல்
ஐந்தும் ஒன்றும் ஆறு என்கிற
கணக்கே யாகும்; கவிதையா காது.
கற்பனை மிகுந்த கவிதைகள் மிகுந்தது
தமிழ்மொழிக் குள்ள தனிப்பெரும் சிறப்பு!
——–நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை
கோபம்
என்னுடன் வேலை பார்க்கும் ஒரு மேஜர், ஒரு தீவிரமான செயின் ஸ்மோக்கர். ஏதாவது சந்தேகம் என்றோ, அல்லது ஏதாவது செக் பண்ணவேண்டும் என்றோ என்னை கூப்பிட்டால் நான் முடிந்த அளவு அவருடைய அறைக்கு செல்வதை தவிர்பேன். அப்படியே போனாலும், என் முகத்திலுள்ள கோபத்தையும், வெறுப்பையும் பார்த்து அவருக்கே பயம் வந்துவிடும்.
அது என்னமோ புகை வாடையை முகர்ந்தாலே போதும் , எனக்கு அப்படி ஒரு கோபம் தலையில் ஏறி உக்காந்து கொள்ளும். எள்ளும், கொள்ளும் முகத்தில் வெடிக்க, புகை பிடிப்பவர்களை ரெண்டு மொத்து மொத்திவிடலாமா என்று கை பரபரக்கும்.
சிறு வயதில், அப்பாவின் புகைபிடிக்கும் தோழர்கள் யாராவது வந்தால், வீட்டின் பின்கட்டில் போய் உக்காந்துப்பேன். ரெம்ப பழக்கமானவர்கள் வந்தால் வாசலிலே போய் “புகை பிடிப்பவர்கள் எங்க வீட்டிற்கு வரக்கூடாது” என்று அவர்களிடம் சண்டை போடுவேன்.
சிலர் கண்டுகொள்ளாமல் விட்டாலும், ஒரு அண்ணாச்சி மாத்திரம் என்னை பார்க்கும் போதெல்லாம் “பாரு உனக்கு ஒரு செயின் ஸ்மோக்கர் தான் புருஷனா வருவான்” என்று சாபம் கொடுப்பார். எனக்கு எங்கள் வீட்டில் வரன் தேடும் போது , நிஜமாகவே அந்த சாபம் வந்து அவ்வப்போது பயமுறுத்தும்( என்னை நினைத்து அல்ல , அப்படி ஒரு ஆள் வந்தால், என்கையில் மாட்டி சின்னாபின்னா பட்டுபோவாரே என்று தான்). ஆனால் என் வீட்டுக்காரருக்கும் புகை வாடையே பிடிக்காது(நல்ல வேளை தப்பித்தார்).
சரி விஷயத்துக்கு வருவோம், மேஜர் இன்று என்னிடம் வந்து ரெம்ப தயக்கத்துடனே “ஒரு எரர் வருது, கொஞ்ஞம் பார்க்கமுடியுமா” என்றார்.
எனக்கு அவரை பார்த்தால் ரெம்ப பாவமாக இருந்தது. சை… வயதில் பெரியவரை இப்படியா பயமுறுத்தி வைப்பது, என்ன மனுஷி நான் என்று என் மேல் கோபம் வந்தது.
“வருகிறேன் சார்” என்றேன் சிரித்த முகத்துடன்.
அவருடைய முகத்திலும் ஒரு நிம்மதி தெரிந்தது.
விடுவிடுவென்று அவருடைய அறைக்குள் நுளைந்தேன். ஏ. சி அறையில் நிரந்தரமாக குடியிருந்த புகை நாற்றம் என்னை தழுவிக்கொண்டது.அந்தோ என்னை அறியாமல் என் பி.பி எகிற ஆரம்பித்தது.
கடவுளே இந்த நாற்றம் என்னை ஆட்கொள்ளுவதற்கு முன்னால் , இந்த அறையிலிருந்து என்னை விடுவித்துவிடு என்று என் மனம் ஜெபிக்க ஆரம்பித்தது.
அப்படி என்ன தான் இருக்குது இந்த சிகரெட்டில், இப்படி உக்காந்து இழுப்பதற்கு எனக்கு புரியவில்லை.
சைக்கிள்
எங்க மாமா ஒரு பழைய சைக்கிள் வச்சிருந்தார். அந்த சைக்கிள் எங்க தெருவுக்குள் நுழைந்தாலே எல்லோருக்கும் தெரிந்துவிடும், மாமா வருகிறார் என்று. அதையெல்லாம் கண்டுகொள்ளாமலும், எவ்வளவோ சொல்லியும் அந்த சைக்கிளை மாற்றாமலும், அதில் நகர்வலம் வந்துகொண்டிருந்தார்.
‘சைக்கிள் நல்லாதான் இருக்கு’ என்று அதற்கு சர்டிபிக்கேட் வேறு கொடுத்தார்.
அப்பாவிடம் எப்படி புது சைக்கிளுக்கு சம்மதிக்கவைப்பது என்று என் வீட்டுக்காரர் மூழையை கசக்கிகொண்டிருக்க, உதவிக்கு வந்தார் ஒரு மரியாதைகுரிய திருடர்.
ஒரு சுபயோக தினத்தில், சுமார் இரவு பத்து மணியளவில், மாமா டீக்கடை முன்னால் நிறுத்தி வைத்திருந்த சைக்கிளை யாரோ லவட்டி கொண்டு போய்யிருந்தார்கள்.
சோகம் அப்பிய முகத்துடன் வந்த மாமாவை பார்த்தவுடன் எங்களுக்கு ஒரு பக்கம் கவலையாகயிருந்தாலும், சைக்கிளை எடுத்த சென்ற ஜீவனை நினைத்தால் அதை விட பரிதாபமாகயிருந்தது.
சரி எப்படியோ , இனிமேலாவது புது சைக்கிள் வாங்க சம்மதிப்பாரே என்று நிம்மதியாக இருந்தோம். அடுத்த நாள் வழக்கம் கடைக்கு சென்ற மாமாவுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.
அவருடைய சைக்கிள் அதே இடத்தில் நிருத்திவைக்கபட்டிருந்தது (விவரமான திருடன்).
இப்போது உங்களுக்கே புரிந்திருக்கும் நான் அந்த சைக்கிளை பழையது என்று எவ்வளவு டீசென்டாக வர்ணித்திருக்கிறேன் என்று.
பதிவின் வால்:
எங்க ஏரியாவிலே அது பெரிய காமடியாக இருக்க, அதன் பிறகும் பொறுமை காக்காமல் மாமாவிடம் புது சைக்கிள் வலுகட்டாயாமாக திணிக்கப்பட்டது.
அழகுபெண்மணி
ஒரு நைஜீரிய நன்பர் வங்கியில் ஒரு லோன் விஷயமாக சென்றிருந்தார். அங்குள்ள பெண்மணி தினமும் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி அவரை இழுத்துதடித்துக்கொண்டிருந்தார்.
அன்றும் அப்படித்தான்,
‘நாளைக்கு வாருங்கள். கொஞ்ஞம் வேலை பாக்கியிருக்கின்றது’ என்று அழகா பதில் கூறினாள். ரெம்பவே கடுப்பாகிபோன நன்பர், புன்னகையுடன்
‘உன்னைப்போல் ஒரு அழகுபெண்மணிக்காக ஒரு தடவை என்ன ஒன்பது தடவை வேண்டுமென்றாலும் வருவேன்’ என்று சப்தமாக கூற வங்கியில் உள்ள அனைவரும் கொல்லென சிரித்துவிட்டனர்.
அதன் பிறகு என்ன, வேலை அடுத்த நாளே முடிந்துவிட்டது.
********************************
ஒரு நாள் அலுவலக விஷயமாக நடந்த பார்ட்டியில், எல்லோரும் கலந்து பேசிக்கொண்டிருந்தோம். அப்படியே குழந்தைகள் பக்கம் பேச்சு திசைமாறியது. சிலர் பிள்ளைகளை இப்படித்தான் வளர்க்கவேண்டும் என்றார்கள், சிலர் பிள்ளைகள் செய்கின்ற அட்டகாசங்களை பட்டியல்லிட்டார்கள்.
முத்தாய்ப்பாக பேசிய சீனியர் ஒருவரின் பேச்சு என்னை மிகவும் கவர்ந்தது.
” குழந்தைகள் எல்லோரும் அறிவாளிகளாக தான் பிறக்கின்றார்கள். அவர்களாகவே தவளுவதற்கும், நடப்பதற்கும் முயலுகின்றார்கள்.
எப்படி அவர்கள் நடப்பதற்கு எடுக்கும் முயற்சிக்கு உதவி செய்கிறோமோ, அதேபோல் வாழ்வில், அவர்களுடைய ஒவ்வொரு முயற்சியிலும் உதவி செய்தாலே போதும்.
அவர்கள் நன்றாக இருப்பார்கள்.
பெற்றோர்கள் அதையும் இதையும் போட்டு குழப்பி, குழந்தையையும் குழப்பி, அதை செய், இதை செய் என்று அவர்களை கெடுக்காமல் இருந்தாலே புண்ணியம்” என்றார்.
கண்டிப்பாக யோசிக்கவேண்டிய விஷயம் தான்.
பதில் பாட்டு
கண்மணிக்கு நம்முடைய தேசிய பாடலை சொல்லிக்கொடுத்து கொண்டிருந்தேன்.
‘ ஜன கன ‘ என்று ஆரம்பிப்பது தெரியும் அப்புறம்
என்ன பாடுகிறாள் என்று கடவுளுக்கு தான் தெரியும். ஆனால் முடிவாக
‘ஜய கே ஜய கே ஜய கே
ஜய ஜய ஜய ஜய கே’
என்று சரியாக முடிப்பாள்.
உற்சாகபடுத்துவதற்க்காக
‘கண்மணி அழகா பாடுறியே’ என்று பாராட்டினேன் .
அத்ற்காக அவள் பாடின பதில் பாட்டை பாருங்க
‘அம்ம யே அம்ம யே அம்ம யே
அம்ம அம்ம அம்ம அம்ம யே’
*************************
கண்மணி போலீஸ் என்றால் மாத்திரம் கொஞ்ஞம் பயம் உண்டு.
ரெம்ப சேட்டை பண்ணியவளிடம்,
‘கண்மணி ரெம்ப சேட்டை பண்ணாத , போலீஸ் வந்தால் பிடித்துவிட்டு போய்விடுவார்கள்’ என்றேன்.
‘நான் போலீஸை எல்லாம் பிடித்து ஜெயிலில் வைத்து பூட்டி வச்சிருவேன்’ என்கிறாள்.
************************

அண்மைய மறுமொழிகள்