Archive for நவம்பர், 2008

அட….நீங்க எப்படி?

                  நான் கோவில்பட்டியில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் போது தான் அவன் எனக்கு அறிமுகமானான்.  நல்ல உயரமும் அதற்கேற்ற உடல் வாகுமாய், ‘மாப்பிள்ளை’ பெஞ்சில் அமர்ந்து நக்கலையும் லொள்ளையும் சரி விகிதத்தில் அள்ளி விடுவதில் கெட்டிக்காரன். அவனுடைய அப்பா, ஒரு பெரிய தொழில் அதிபர். சிறு வியாபாரியாக நுழைந்து, திறமையால் வியாபாரத்தை அடுத்தடுத்த கட்டத்திற்கு சுலபமாக நகட்டியவர்க்கு, தன் மகனை ஒவ்வொரு வருஷமும் அடுத்த வகுப்புக்கு நகட்ட ரெம்பவே பாடுபட்டார்.

         ரெக்கார்ட் எழுதனுமா, இம்போசிஷன் எழுதனுமா, நல்ல படிக்க கூடிய நோஞ்சானை சுலபமாய் தேர்ந்தெடுத்து, கன்னா பின்னா என்று  மிரட்டி வேலை வாங்கிவிடுவான். அதை பார்க்குபோது என்னிடம் வரட்டும் என்று கருவிக்கொள்வேன்.
         ஒரு போதாத வேளையில் , என்னிடம் வந்து,
  “பாண்டியா, இந்தா என்னுடய ரெக்கார்ட் நோட்டு , நாளைக்கு படம் வரஞ்சிட்டு வந்துடு” என்றான்.

  “நான் வரைய மாட்டேன்”  என்றேன் கர்வமாக. இவனுக்கு  இன்னைக்கு பாடம் நடத்திட வேண்டியது தான் என்று மனதிற்குள் நினைத்து கொண்டேன்.

  “என்னடா, நண்டு மாதிரி இருந்து கொண்டு என்னியவே ஓரசிப்பாக்கிரியா?” என்று பெரிதாக அரட்ட ஆரம்பித்தான்.

 நானும் விடாமல் “சும்மா ப்லிம் காட்டாத போடா, நான் ஒன்னும் உனக்கு அடிபிடியில்ல” என்று திருத்தமாக சொல்ல , கூட்டம் கூட ஆரம்பித்தது.

         அதுவரை அவனுக்கு கைவலிக்க இம்போசிஷன் எழுதி கொடுத்தவர்கள், காண்டுடன் என்னை பார்வையில் உசுப்பேத்திவிட, ‘மாப்பிள்ளை ‘ பெஞ்சி கூட்டமோ, இப்படி விட்டா யாருக்கும் நம்ம மேல பயமிருக்காது என்று அவனை உசுப்பேற்ற, மல்யுத்தம் ஆரம்பித்தது.

           கட்டி புரண்டு சண்டை ஜரூராக நடக்கும் போது, வாத்தியார் நல்லக்கண்ணு விஷயத்தை கேள்விப்பட்டு பிரம்புடன் வந்து…………………………………… நிறைய அல்வா (ஹி..ஹி….. களமிரங்கிட்டா இந்த பெரம்பு எல்லாம் சும்மா கரும்பு மாதிரி …) கொடுத்துட்டு போனாரு. ஒரு சுண்டைகாய் பொடியனால் அவனுடைய  செல்வாக்கு குறைந்ததில் அவனுக்கு பயங்கர வருத்தமும், கோபமும் இருந்தாலும்,   இருக்கிற செல்வாக்கையாவது காப்பாத்தனும் நினைச்சானோ என்னவோ என்னிடம் அதன் பிறகு சண்டைக்கு வருவதில்லை. 

  அப்புறம் நானும் அவனை மறந்து படிப்பில் கவனம் செலுத்தி , பொறியியல் கல்லூரியில் சேர்ந்து…… , சீமானை மறந்தே போய்விட்டேன். 

  சுப்பு ஒருவனுக்குத்தான் ஓரளவு நிறைய பேரிடம் தொடர்பு இருந்தது. எனக்கு வேலை கிடைத்த புதிதில், சுப்புவை பாக்க சென்றபோது,  அவன் பேச்சுவாக்கில் ஒரு தடவை சீமான் ஜவுளி வியாபாரத்தில் கொடி கட்டி பறப்பதாக கூறி, அவன் கடைக்கு கூட்டிச்சென்றான். தொப்பையும் தொந்தியுமாக என்னை வரவேற்று, அவனைவிட வளந்து விட்டதாலோ என்னவோ,  ரெம்ப மரியாதையாக பேசினான் என்னிடம், என்னை நானே கிள்ளி பாத்துக்கொள்ள வேண்டியதாயிற்று.

  நேற்று இரவு உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு , வக்கீல் தெரு வழியாக இரவு வீட்டுக்கு வந்துகொண்டிருந்த பொது , எதிரில் வந்த  யமகா ஒன்று , ஓரங்கட்டி நின்றது. நான் அதற்கு பக்கத்தில் வந்துவிட்டதால்………., அட நம்ம சீமான்.

  “என்னிய நியாபகம் இருக்கா சீமான்…… எப்படி இருக்க” என்றேன்.

  “பாண்டியன்…….என்னடா மாப்பிள நீ எப்படி இருக்கா? நான் நல்லாத்தேன் இருக்கேன்” என்றான் பயங்கர சிரிப்புடன்.

 ”மெதுவா  சிரி , பயந்துட போறாங்க……” அவன் பெல்ட்டை களட்டிக்கொண்டிருந்ததை பார்த்தவுடன் “சரி என்னடா பண்ணுற..” பரப்புடன் கேட்டேன்.

        அவன் ஒரு தினுசா வழிந்தபடி, “அட ஒன்னுமில்லடா…. நீ வேற , என் வீட்டுக்காரிக்கு நான் எப்போதும் டிப் டாப்பாக ஷர்ட்டை இன் பண்ணி போடனும்ன்னு ஆசை… அதான் போட்டிட்டு இருக்கேன்…( தன்னுடைய பெரிய வயிறையும், சட்டையையும்  பான்டினுள் கஷ்டப்பட்டு நுழைத்து, ஒருவாறு பெல்ட்டை போட ஆரம்பித்தான்) இந்தா பெரிய கலசத்தை வச்சிட்டு எப்படிடா சட்டையை இன் பண்ணுறது…. “

அது சரி.. பிடிக்கலைனா சொல்ல வேண்டியது தானே, அதுக்காக இப்படி வீட்டுக்கு பக்கத்துல வந்தவுடன் தினமும் இன்பன்னுவியா?”

ஆனா கேக்கமாட்டங்காளே, நான் இந்த கோமாளி வேஷம் போடலைனா அவ பத்திரகாளி வேஷம் இல்ல போடுவா… என்ன பண்ண… அவளோட அர்ச்சனையை கேட்பதற்க்கு இது பரயில்லை

        எனக்கு ஒரு முறை ரவுடி ரங்குவாக இருந்த அவனுடைய பள்ளிபருவம் கண்முன்னால் வந்தது. இந்த சின்ன விஷயத்திலே இப்படி தலைகீழா நிக்கிறவன் மற்ற விஷயங்களில் எப்படி இருப்பான். நினைத்தவுடனே என்னில் ஒரு கிண்டலும், ஆச்சரியமும் கலந்த புன்னகை தோன்றியது. அதை கவனித்த அவன்,
ஏன்டா சிரிக்கமாட்ட….. உனக்கு கல்யாணமாகட்டும் அப்புறம் தெரியும்”

           இருந்தாலும் எனக்கு சிரிப்பை அடக்கமுடியவில்லை, சிறிது நேரம் பேசிவிட்டு நடந்து வருகையில், நான் வீட்டில் கோபப்பட்டு முறைக்கும்போது   எங்க அப்பா  சொல்லுவது தான் நினைவில் வந்தது.
 “என்னடா முறைக்கிற, நீ என்னைவிட வளந்திட்டேன்னு பாக்காத, நாளைக்கே உனக்குன்னு ஒருத்தி , உன்னை விட வயதில் சின்னவளா, குட்டையா , படிச்சோ படிக்காமலோ வந்து உன்னை அரட்டுவா அப்ப என்னடா பண்ணுவே?”

எவ்வளவு பெரிய உண்மையை போட்டுடைத்திருக்காரு என்று நினைத்து எனக்குள் சிரித்துக் கொண்டேன். அட….நீங்க எப்படி?

(ஹி..ஹி.. தங்கபாண்டியன் என்னோட வூட்டுக்காரருங்கோ )

17 comments நவம்பர் 23, 2008

எட்டாக்கனி

லில்லீ…………………..” எங்கம்மா பொறுமையின் எல்லைக்கு போய் கத்தினாள்.

தோ.. வர்றேன்” என்றேன் , கண்ணாடியிலிருந்து முகத்தை எடுக்காமல்.

ஏய் பூசனிக்கா, கண்டதையும் பூசி இன்னும் பெருசாயிடாத ” அண்ணன் கிடைத்த கேப்பில் வம்பிழுத்தான்.

பாருங்கம்மா

போடா அவளுக்கு என்னடா குறை. “

அவளுக்கு ஒரு குறையும் இல்லைமா, அதானே பிரச்சனை. தலையிலிருந்து கால்வரை எங்கேயும் குறையில்லாமல் அப்படியே தலையணை மாதிரி இருக்கா.”

உன்னை மாதிரி ஒட்டக சிவிங்கியாட்டம் இல்லாம அவ ஒருத்திதான் பிள்ளை மாதிரி இருக்கா. போடா அண்ணன் உன்னை அப்பவே தேடிட்டு இருந்தான். போ.
அம்மா அவனை விரட்டினாள்.

ஆமா தெரியாமத்தான் கேக்கிறேன், தினமும் போடுற பவுடரையும், பொட்டையும் வைக்க இவ்ளோ நேரமாடீ ?”

விதவிதமா முயற்சி பண்ணித்தான் பார்த்தா, ஆனா ஒண்ணுலையும் தேறல்ல, அதான் இப்படி வந்துட்டா” என்று நக்கலடித்தான்.
அம்மா முறைத்ததில் விறுவிறுவென்று கிளம்பிவிட்டான்.

அம்மா, ஸ்கூலுக்கு நேரமாயிட்டுது, நான் சொன்னதை யோசிச்சீங்களா. எனக்கு நாளைக்கு 2500 ரூபாய் கண்டிப்பாக வேணும்

அம்மா என்னை தயக்கத்துடன் பார்த்தார், “அடுத்த மாதம் தர்ரேனே. இந்த மாதம் கொஞ்சம் எதிர்பாராமல் செலவு வந்துவிட்டது. நம்ம தோட்டத்தில்   வேலை செய்யற பொன்மணி , வேற  பொண்ணுக்கு பீஸ் கட்டறதுக்கு கேட்டா…….. .”

என்னம்மா நீ, எதை கேட்டாலும் ஒரு கதை சொல்லு, எனக்கு கண்டிப்பா வேணும் ” என்று எகிறினேன்.

கொஞ்சம் கோபத்துடன் ” ஆனாலும் உனக்கு கொஞ்சம் கை நீளம்தான், இப்படி செலவளித்து பழகாதேன்னு எத்தனை தடவை சொல்றது? எத்தனையோ பேர் சாப்பாட்டுக்கும், படிப்புக்கும் கஷ்டப்படுறாங்க……. எப்படி தான் இப்படி ஊதாரித்தனமா செலவளிக்க மனசு வருதோ” பதிலுக்கு அலுத்து கொண்டாள்.

அம்மா ஒற்றை ஆளாக நின்று எங்களை ஆளாக்கியவர். கஷ்டங்களையும், மனிதர்களின் குணங்களையும் பார்த்து பண்பட்டு பக்குவத்தை அடைந்தவர். நானு கொஞ்சம் ஷோக்கு பேர்வழி. மற்ற விஷையங்களில் நல்ல பிள்ளையாக இருக்கும் நான், காசை மாத்திரம் சக்கரை மாதிரி கரைத்து விடுவேன். இப்போதும் ஒரு தோழியின் கல்யாணத்திற்க்கு சேலை எடுக்கத்தான், பணம் தேவைபட்டது.

அதற்கு மேல் சண்டை போடமல் ஸ்கூலுக்கு கிளம்பினேன், இரண்டு பஸ் பிடிக்கவேண்டும். நெரிசலான பேருந்து நிலையத்தில் என்னுடைய பேருந்தை தேடும் போது தான் அந்த குரல் கேட்டது.

பத்து ரூபாய்க்கு மூன்று ….பத்து ரூபாய்க்கு மூன்று ….
அக்கா வாங்குங்க… பத்து ரூபாய்க்கு மூன்று ….
சமையல் , கோலம் , இந்தி புக் எல்லாம் இருக்கு……
அக்கா வாங்க……..”

என்று படபடத்த சிறுவனின் குரல் எனக்கு ரெம்ப பழக்கமானது.
பஸ்ஸுக்கு அந்த பக்கம் போய் பார்த்தால், சங்கர்!

ஏய் சங்கர் இங்க என்ன பண்ணுற, ஸ்கூலுக்கு வரல்லியா?”

ஒரு நிமிடம் சோக ரேகை படர்ந்தாலும், சமாளித்து விட்டு
எங்கம்மாவுக்கு உடம்பு சரியில்லை, அதனால் ரெண்டு நாளா கூலி வேலைக்கு போகலை, இனிமேலும் போறது கஷ்டம் தான். வீட்டுல தம்பி, குட்டி தங்கச்சி வேற இருக்காங்க அதனால இனிமேல் ஸ்கூலுக்கு வரமாட்டேன் டீச்சர். பேசிட்டு நிக்கிறத பாத்தா ஓனர் திட்டுவாரு , போயிட்டு வற்றேன் டீச்சர்” என்று படபடவென்று பேசிவிட்டு , அடுத்த பஸ் பக்கம் விரைந்தான்.

நான் இடிச்ச புளியாட்டம் , பேருந்தில் ஏறி உட்கார்ந்தேன். தூரத்தில்
பத்து ரூபாய்க்கு மூன்று ….பத்து ரூபாய்க்கு மூன்று ….
அக்கா வாங்குங்க… பத்து ரூபாய்க்கு மூன்று …………”
என்று கேட்டது.

சங்கர்! படிப்பிலும் பேச்சிலும் எல்லோரையும் கவர்ந்து இழுக்கும், ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுவன். வகுப்பே கலகலக்கும் அவனால். எப்போது சிரித்த முகத்துடன் வளைய வரும் துடிப்பான சங்கர் , இனிமேல் படிக்க வரமாட்டான் என்ற நினைப்பு மனதில் பாரமாக அழுத்தியது.

அடுத்த நாள், காலையில் புறப்படும் போது, ரூபாயை எண்ணி என் மேஜையின் மேல் வைத்துகொண்டு
என்ன கலர் சேலை எடுக்கப்போற? கடைக்கு யார்கூட போக போற?” என்று கேள்விகளை அடுக்கிக்கொண்டே போன அம்மாவிடம்

பொன்மணியோட பொண்ணு என்னம்மா படிக்கிறா? நல்லா படிப்பாளா?

Diploma பண்ணிட்டிருக்கா, நல்லாத்தான் படிப்பா.  இப்ப இதென்ன கேள்வி? நான் கேட்டதுக்கு பதில் சொல்லாம? 

ஆங்….பீஸ் கட்டறதுக்கு, பொன்மணிக்கிட்ட கொடுங்க…..
நான் சேலைவாங்க போகவில்லை
“ 

என்னாச்சு

சும்மாதான் ” என்ற  பதிலில்,  என்னை வினோதமாக பார்த்தாள்.

(சங்கர், கதாபாத்திரமல்ல நிஜமானவன்)

17 comments நவம்பர் 6, 2008

சினிமா – சினிமா தொடர் பதிவு….

அடாடா நாம தப்பிச்சோம்ன்னு நினைத்துகொண்டிருந்தேன், விஜய் மாட்டிவிட்டுடாரு.

1)எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?
நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா?
என்ன உணர்ந்தீர்கள்?

  வயது எனக்கு நினைவு இல்லை….
  எனக்கு தெரிந்து ‘கருணாமூர்த்தி’  பார்த்தேன்.

  ரெம்ப அழுகையாக வந்தது.

2)கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

   ‘மாயி’  
   எங்க வீட்டில் தியேட்டருக்கு என்னிய மொத்தமா  ஒரு அஞ்சு படத்துக்கு கூட்டிட்டு போயிருப்பாங்க என்று எதோ ஒரு கெட்ட நேரத்தில் என் கணவரிடம் சொல்ல போக, உடனே கருமமே கண்ணாக கோவில்பட்டியை ஒரு ரவுண்ட் வந்து கூட்டமே இல்லாத ஒரு தியேட்டருக்கு, அதுவும் இரவு பத்து மணிக்கு,  ‘மாயி’ படத்துக்கு கூட்டிட்டு  போயி பழிதீத்துக்கிட்டாரு.
  
3)கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது,எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

    ‘ராமன் தேடிய சீதை’  , பரவாயில்லை, கொஞ்சம் மெதுவாக சென்றதுபோல் உணர்ந்தேன்…… .( எனக்கு காமடி தான் பிடிக்கும்).
    அதையும், கண்மணி  முழுசா பாக்கவிடல.

4) மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

     நானு தியேட்டரில்  பார்த்ததே கம்மிதான். மிச்ச எல்லா படமும் டிவியில் தான்.
     டிவி முன்னாடி உக்காந்து பாக்கிற அளவு எனக்கு பொறுமை கிடையாதுங்க. அடிதடி, பாட்டு, அழுகை சீன்  வரும்போதெல்லாம், வேறு வேலைய பாக்க போயிருவேன் ( டிவிடில பாத்தா ஓட்டிவிட்டிருவேன்) மொத்தத்தில் ஒரு படத்த அரை மணி நேரத்தில் பாத்து முடிச்சிருவேன். 
    ஏதாவது படம் என்னிய வந்து தாக்கிருமா?
    ( என்னை தொடர் எழுத கூப்பிட்ட விஜய்க்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்)
    ஆனாலும், நிறைய படங்கள் , அரை மணி நேரத்தில், என்னை ரெம்பவே பாதிப்பிற்குள்ளாக்கியது என்றால் மிகையாகாது. அப்புறம், ஒரு  panadol  போட்டு பாதிப்பை வேப்பிலை அடித்து சரிபடுத்தி கொள்வேன்.

5.அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

       அப்பப்ப அரசியலில் சினிமா டயலாக்கும்,  சினிமாவில் அரசியல் டயலாக்கும்  கன்னா பின்னான்னு பறக்கும் போது சிரித்துக்கொள்வேன்.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

          அந்த அளவு படங்களை ரெம்ப ஆராய்ந்து பார்ப்பதில்லை, இருந்தாலும் நிறைய காட்சிகளை அதிசயத்துடன் பார்த்திருக்கின்றேன்( பழைய படங்களில் பறக்கும் காட்சிகள்) 

6) தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

             குமுதம், விகடனில் சிறிது வாசித்திருக்கிறேன் .
 
7)தமிழ்ச்சினிமா இசை?

        ஒரு சில பாடல்களை தவிர , எப்போதுமே ரசிக்ககூடிய பாடல்கள் நிறைய இருக்கின்றன. பாட்டு கேட்பதற்கு மாத்திரம் எனக்கு அலுப்பேயிருக்காது.
 
8)தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

       கொஞ்சம் பாத்திருக்கேன். பிடித்தமான படம் – பென்ஹர் , சக்தே

9) தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா?
என்ன செய்தீர்கள்?
பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா?
தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

    ஏதோ கொஞ்சம் படம் பார்ப்பதை தவிர வேறு தொடர்பு கிடையாது.
(சில படங்களை பாத்து கரிச்சி கொட்டியிருக்கேன், இது தமிழ் சினிமா மேம்பட உதவுமா?)

10)தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

      அதுக்கென்ன, என்னை மாதிரி வேறு வேலையில்லாம பாக்கிறவங்களும், வேலைசெய்யாம பாக்கிறவங்களும் இருக்கிறவரை, அதுக்கு எதிகாலம், சும்மா கரண்ட் கட்டில்லாத பல்பு மாதிரி பிரகாசமாயிருக்கும்.

11) அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள்,செய்திகள் எதுவுமே பத்திரிகைகள்,தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்?
 உங்களுக்கு எப்படியிருக்கும்?
தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

        ஐயகோ என்ன கொடுமை இது? எப்படி உங்களுக்கு இப்படி ஒரு  கேள்வி கேட்க மனது வந்தது? நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் மாதிரி நுழைந்த  internet  சமாச்சாரங்கள் இல்லாம இருந்தாலே, எப்படி நம்மில் நிறைய பேருக்கு தூக்கம் வரும்?
          அப்புறம் எப்படி மொக்கை போடுவது?
          எப்படி சொல்லம்பு, கவி அம்புகளை எய்து பலரை பழிதீர்ப்பது?
          வலையுலகில் மின்னிக்கொண்டிருக்கும் நட்சத்திரங்கள் எல்லாம் எங்கே போய் மின்னும்?

       இதையே, இத்தனை காலமாக பெரிய பட்ஜெட் போட்டு செய்றவங்க பாடு எவ்வுளவு கஷ்டம்?  வந்தாரை வாழவைக்கும் தமிழகம்,  இதை ஒருபோதும்  அனுமதிக்காது. .
 
       அப்படியே ஒரு நிலைமை வந்தால்,  வேறு ஒன்பது வழி கண்டுபிடிப்பாய்ங்க. 
****************************************************************

யாரை இதில் கோத்து விடலாம் என்று பாத்தா , எல்லாருமே இதில பின்னி பிணைஞ்சிருக்காங்க.  சோகத்தில் கடற்கரை பக்கமா போய் நின்னா, நம்ம புவனேஷ் தம்பி  அதைவிட சோகமா நின்னுகிட்டிருந்தார்.
  ஆகா ‘தம்பி உடையான் படைக்கு அஞ்சான்னு’ சும்மாவா சொன்னாங்க , உடனே கோத்துவிட்டுட்டேன். 

சமயலறையில் ரெம்ப பிசியாகயிருந்த ரதி தேவியையும் கோத்துவிட்டிருக்கேன்.

10 comments நவம்பர் 4, 2008


அண்மைய இடுகைகள்

பக்கங்கள்

Blogs

அண்மைய மறுமொழிகள்

Blog Stats

Blogroll

 

நவம்பர் 2008
தி செ பு வி வெ ஞா
« அக்   டிச »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

மேல்