Archive for பெப்ரவரி, 2009
இடி மின்னலும்…கண்மணியும்….
நேற்று திடீரென்று பயங்கர இடி இடித்து , மின்னல் வெட்டியது. மழை என்னமோ அரசியல்வாதியின் போலிக்கண்ணீர் மாதிரி படபடவென்று ஐந்தாறு துளி தான் போட்டது. ஆனால் கண்மணி அந்த சத்தத்தில் கொஞ்சம் பயந்து போனாள்.
“அம்மா என்ன சத்தம்”
“இடி சத்தம் கண்மணி. பயப்படாதம்மா, பாரு மழை பெய்கிறது”
“ம்…..” என்று வெளியே சிறிது நேரம் பார்த்தவள்,
திடீரென்று வேகமாக “அம்மா….அப்பா எங்கம்மா போயிருக்காங்க?”
“அப்பா ஆபீஸ் போயிருக்காங்க…”
“அபீஸ்ல என்ன பண்ணுவாங்க?”
“வேலை பாப்பாங்க…என்னம்மணி திடீரென்று கேட்கிறாய்!” என்றேன் ஆச்சரியத்துடன்.
அவளோ அதேமாதிரி முகத்தை தீவிரமாக வைத்துக்கொண்டு “இல்லம்மா….அப்பா….ஆபீஸ்ல கதவை மூடி வச்சிட்டு தானே வேலைபாப்பாங்க?”
“ஆமா கண்மணி……” கண்மணியின் பயம் என்னவென்று புரிந்து….”அப்பா பத்திரமா இருப்பாங்க…” என்ற பிறகு தான் அவளுக்கு நிம்மதி வந்தது.
அதன் பிறகு தான் நார்மலாகி வழக்கம் போல், இடி ஏன்? எப்படி? எங்கிருந்து வருகிறது…… என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு….அப்பப்பா…..
கண்மணி அப்பா வந்தவுடன் இதைக் கூறினேன், அவர் ஒரு புன்சிரிப்புடன் கண்மணியை அள்ளி அணைத்து கொண்டார். கண்மணிக்கு வாயெல்லாம் பல்லுதான். நான் இந்த பாசமும் அக்கரையும் எப்போதும் நிலைக்க கடவுளிடம் ஒரு அப்பிளிக்கேஷன் போட்டுக்கொண்டேன்.
39 comments பெப்ரவரி 24, 2009
வீட்டுக்குள்ள நடந்தது
இந்த காலத்தில் காலேஜ்ல கூட சுலபமா புகுந்துரலாம், LKG அட்மிஷன் கிடைப்பது தான் பெரிய குதிரை கொம்பாக இருக்கிறது.
எனக்கு பக்கத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் சேர்க்க வேண்டும் என்று ஆசை, அதனால் பக்கத்தில் உள்ள எல்லாப் பள்ளிக் கூடத்திற்கும் படையெடுத்து….. interview attend பண்ணி…..யப்பா ஒரு வழியா இடம் பிடிச்சாச்சு.
ஆனால் இன்னும் மழலையிலே மிழற்றிக் கொண்டிருக்கும் கண்மணியை பள்ளிக் கூடத்திற்கு அனுப்ப கஷ்டமாகத்தான் இருக்கின்றது.
ஒரே ஆறுதல் அந்த பள்ளிக் கூடத்தில் வீட்டு பாடம் எல்லாம் கிடையாது.
***************************************************************
நேற்று எனக்கும் என் வீட்டு காரருக்கும் பயங்கரமான வாக்குவாதம். என்ன விஷயம் என்று கேட்காதீர்கள் ( வழக்கம் போல உப்பு பெறாத விஷயத்துக்கு தான்).
எனக்கு கடைசியில் பயங்கர கோபம் வந்து
“பாருங்க அடுத்த ஜென்மத்தில் உங்களுக்கு பெரிய ராட்சசி தான் மனைவியா வருவா“
அவர்: “ஏம்மா எல்லாரும் அடுத்த ஜென்மத்தில் இன்னும் நல்ல மனிதர்களா பிறக்கனும்ன்னு வேண்டுவாங்க, நீ ஏன் இப்படி அடுத்த ஜென்மத்தில் ராட்சசியா பிறக்கனும்ன்னு வேண்டிக்கிற?”
நான்: blank….
36 comments பெப்ரவரி 9, 2009
குழந்தையின் நேரம்
பொதுவாக குழந்தை பிறக்கும் போது சிலர் ‘குழந்தை லச்சுமியை கூடவே கூட்டிட்டு வந்திருக்கா’ என்று சொல்லுவார்கள். சில மரமண்டைகள் அதை தவறுதலாக எண்ணி என்னமோ குழந்தைகள் என்றாலே பொன்னையும் புகழையும் கொண்டுவரவேண்டும் என்று நினைத்து கொண்டிருக்கும் மடமையை என்னவென்று சொல்ல.
திருமணமான புதிதில், எனக்கு தெரிந்த ஒருவருடன், அவருடைய தோழி வீட்டிற்கு சென்றிருந்தேன். அவங்களுக்கு இரண்டு குழந்தைகள், முதல் குழந்தைக்கு ஒரு ஆறு வயதிற்கும், இரண்டாவது பெண்குழந்தை பத்து மாதம் ஆகியிருந்தது. வீட்டை நேர்த்தியாக வைத்திருந்தார், வீடெல்லாம் பக்தி மணம் கமழ்ந்தது.
நாங்கள் பொதுவாக பேசிக்கொண்டிருந்தோம், அந்த பெண்குழந்தை, தவண்டு வீடெல்லாம் சுற்றி வந்தது. சிறிது நேரம் கழித்து அம்மா முகத்தை பார்ப்பதும் கிச்சனை பார்ப்பதுமாக இருந்ததை பார்த்து, “என்னங்க உங்கள் குழந்தைக்கு பசிக்குதோ என்னமோ பாருங்களேன் ” என்றேன்.
அந்த தாயாரோ கண்டுகொள்ளவே இல்லை. எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை, அந்த குழந்தையின் வாடிய முகம் என்னை என்னமோ செய்தது.
சிறிது நேரம் கழித்து, அந்த குழந்தையின் அப்பா வீட்டிற்கு வந்தார், வந்தவுடன் அந்த குழந்தையை தூக்கி, நிமிடத்தில் பால் கரைத்து கொடுக்க ஆரம்பித்தார். ரெண்டே நிமிடத்தில் மட மடவென்று அவ்வளவு பாலையும் குழந்தை குடித்து முடித்தது.
சிறிது நேரத்தில் அந்த வீட்டிலிருந்து கிளம்பிவிட்டோம் , ஆனாலும் ,அந்தம்மா வேண்டும் என்றே பால் கொடுக்க வில்லையா அல்லது தெரியாமல் நடந்ததா என்று எனக்கு அடிக்கடி கேள்வி தோன்றும். அந்த கேள்விக்கு விடை சில நாட்களில் எனக்கு தோழி மூலம் அறிந்தபோது நிஜமாகவே அதிர்ந்து விட்டேன்.
அவர் அந்த குழந்தையை கருத்தரித்த சமையத்தில் அவங்க வீட்டில் ரெம்ப பிரச்சனை வந்ததாம், அதனால் அவள் வந்த நேரம் சரியில்லை என்று அந்த குழந்தையை பிடிக்கவே செய்யாதாம். இன்னும் இந்த மாதிரி பெண்கள் இருக்கின்றார்களா? என்னால் நம்ப முடியவில்லை. அதன் பிறகு அந்த பெண்மணியை பார்க்கவில்லை, ஆனால் அந்த குழந்தையின் முகம் இன்னும் என்னால் மறக்க முடியவில்லை.
16 comments பெப்ரவரி 4, 2009