Archive for மார்ச், 2009
நாங்களும் பட்டம் வாங்கிட்டோம்ல…
கண்மணி Play School லில் நேற்று Graduation Function. சுமார் 20 குட்டீஸ் அடுத்த மாதத்திலிருந்து பள்ளிக்கூடம் போகிறதால், அவர்களுக்கு பட்டமளித்து, பரிசுகள் கொடுத்து பிரியாவிடை கொடுத்தார்கள்.
எல்லாப் பிள்ளைங்களுமே அமைதியாக அவங்க டீச்சர் சொல்றதை கேட்டு சமத்தாக இருந்தார்கள். பாடல்களுக்கு புன்சிரிப்புடன், சின்ன கைகளை அசைத்து அழகாக அபிநயம் பிடித்தார்கள்.
ஆனால், விழா தொடங்கியதிலிருந்து விடாமல் அலம்பல் பண்ணின பெற்றோர்களை பற்றி என்ன சொல்ல?
விழாவுக்கு தலமைத் தாங்குபவர் வந்த பிறகும் … சல சலப்பு குறையவேயில்லை. அவருக்கு கைத்தட்டிவிட்டு கையில் கேமிராவை எடுத்தவர்கள், குதிரைக்கு கடிவாளம் போட்ட மாதிரி அவரவர் அவர்களுடைய பிள்ளையே போக்கஸ் பண்ணிக்கொண்டு நின்றவர்கள் தான்… ஒரு கை தட்டல் கிடையாது… ஒரு ரெஸ்பாண்ஸும் கிடையாது. க்ளிக்கி கொண்டே இருந்தார்கள். நானும் கொஞ்சம் புகைப்படம் எடுத்தேன், உட்கார்ந்தபடி.
‘ஐயா கொஞ்சம் உக்காருங்கள்’
‘அமைதியாக இருங்கள்’
‘என் பிள்ளைகள் தான் அமைதியாக இருக்கின்றார்கள்’
‘ நான் விழவை நிறுத்த போகிறேன்’
‘ நீங்கள் அமைதி காத்த பிறகு தான் நான் விழாவை தொடருவேன்’
‘தயவு செய்து அமருங்கள். உங்கள் பிள்ளைகள் பரிசு வாங்கும் போது.. நீங்கள் முன்னாடி வந்து photo எடுக்கலாம்’
‘ ப்ளீஸ் பரிசு கொடுக்கும் போது கைதட்டுங்கள்’
இந்த மாதிரி சொல்லி சொல்லியே டீச்சர் ஒரு வழி ஆகிவிட்டார்கள். ரெம்ப கொஞ்ச பேர் தான் அப்பப்ப கைதட்டி… டீச்சருக்கு ஆறுதல் அளித்தார்கள்.
என்னுடைய பக்கத்தில் இருந்த ஒருவர், அவருடைய பிள்ளையிடம்..’பாப்பா அப்படி நில்லு …இப்படி நில்லு… சிரி… மூக்கை நோண்டாதே என்று எப்போதும் ஒரு டைரக்டர் ரேஞ்சுக்கு போஸ் கொடுத்து கொண்டிருந்தார். இன்னொரு அம்மா அங்கிட்டும் இங்கிட்டுமாக எங்களை இடித்துக் கொண்டு போய்கொண்டிருந்ததால் என் கணவர், “தாய்குலம் விழா முடியறதுக்குள்ளால என் காலை உடைத்து கையில் கொடுத்துவிடும் போல” என்று கமெண்டி கொண்டார்( அந்தம்மாவிற்க்கு தமிழ் தெரியாது என்கிற தைரியத்தில்).
பிள்ளைகளை கூட மானேஜ் பண்ணிவிடலாம்… பெற்றோர்களை ம்.. ரெம்ப கஷ்டம்…
அப்புறம் விழாவுக்கு தலமை வகித்த அம்மையார்… நன்றாக பேசினார்கள். அவர்கள் சொன்னதிலிருந்து சில வரிகள்
1. இந்த குழந்தைகள் எல்லோரும், ஒரு மோசமான உலகிற்குள் அடியெடுத்து வைக்க போகின்றார்கள், அவர்களுடன் அவர்களுக்கு தோள் கொடுங்கள்.
2. அவர்களுக்கு செவிசாயுங்கள்.
3. சூப்பர் அம்மா/அப்பாவாக நடந்து கொள்ளாதீர்கள்… Because you are not.
4. அவர்கள் இந்த உலகிற்க்கு உங்கள் மூலமாக வந்தற்காக உங்கள் இஷ்டப்படி ஆட்டி வைக்கலாம் என்று நினைத்து விடாதீர்கள்.
5. எல்லாவற்றிற்க்கும் மேலாக பொறுமையாக, கனிவாக சொல்லிக்கொடுங்கள். அவர்கள் குழந்தைகள்… மெல்லிய உணர்வு படைத்தவர்கள்.
நானும் ஒரு நல்ல அம்மாவாக இருக்க, எனக்கு நல்ல ஞானத்தை தரவேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக்கொண்டேன்.
65 comments மார்ச் 30, 2009
Shock
கக் கக்….என்று விக்கலுக்கிடையில் குனிந்து தீவிரமாக எழுதிக் கொண்டிருந்த கணவரிடம் சென்று சற்று தயங்கியபடியே,
” அத்தான்”
”என்ன”
“நான் ஒண்ணு சொன்னா கோச்சுக்க மாட்டீங்களே”
“ம்”
“கண்டிப்பா கோச்சுக்க கூடாது”
தலையை நிமிர்த்தி “என்னன்னு சொல்லு” என்றார். சிறிது எரிச்சல் அதில் இருந்ததால்,
“பாத்தீங்களா… கோபம் வருது உங்களுக்கு“
“சரி….. சொல்லும்மா எனக்கு வேலை இருக்கு“
“அப்படியே திட்டினாலும் போனது ஒண்ணும் திரும்ப வந்துடாது”
சிறுது அலர்ட்டாகி “என்னது இப்பொ போயிடுச்சு“
”நிச்சயமா கோபப்படமாட்டீங்களே?”
“அதான் படமாட்டேன்னு சொல்லியாச்சில்ல”
“வந்து…” என்று அரைமணி நேரம் ஊறவைத்து, washing machine நில் துவைத்து dry பண்ணிய சட்டை பாக்கெட்டிலிருந்து அவருடைய வேலை சார்ந்த அனைத்து பையில்களையும் உள்ளடக்கிய Flash Drive வை எடுத்து கொடுத்தேன்.
அவருடையை முகத்தில் சொல்ல முடியாத ஒரு உணர்ச்சி பரவியது… மூச்சும் விடவில்லை, விக்கலையும் காணவில்லை…. நான் ஒரு நிமிடம் நடுநடுங்கி போய்விட்டென்.
பின் சுதாரித்துக் கொண்டு “இல்ல….விக்கலெடுக்கும் போது எதாவது ஷாக் அடிக்கிற மாதிரி சொன்னா விக்கல் நிக்கும்ன்னு சொன்னாங்க… அதான் அப்படி சொன்னேன்… மற்றபடி அதை washing machine இல் போடவில்லை.”
இருந்தாலும் அவரால் அதிர்ச்சியிலிருந்து மீளமுடியவில்லை. “அதுக்காக இப்படியா…உன்னை……………….”.
அதுக்கப்புறம் நடந்ததெல்லாம் சென்சார்………….. (கொட்டு வாங்கியதை எல்லாம் சொன்னா என்னுடைய இம்மேஜ் என்னாகிறது……. நிஜமா கொட்டு தான் வாங்கினேன் நம்புங்க)
73 comments மார்ச் 23, 2009
ஒரு இரவு
இரவு எட்டு மணிக்கு , கண்மணி
”அம்மா எனக்கு சாப்பிட ஏதாவது தாம்மா , எனக்கு பசிக்குது“
கண்மணிக்கு, சும்மா பொழுது போகவில்லைன்னா தான் இந்த மாதிரி டயலாக் விடுவா. இன்னைக்கு என்னை எப்படி தாக்க போகிறாளோ என்று பயமாக இருந்தது. கொஞ்சம் சாப்பிட்ட உடன் “போதும்” .
“என்னம்மா இத்துனூண்டு சாப்பிட்டிருக்க …. அப்புறமா பசிக்க போகுது பாப்பா“
“இல்லம்மா பாரு எனக்கு வயத்துல இடமே இல்ல” என்று வயற்றை அமுக்கி பிதுக்கி காண்பித்தாள்.
“சரி … போதும்னா சரி.. “
“கண்மணி சாப்பிட்ட பிறகு , லைட்டா பல்லை தேய்ச்சுருவோமா? “
“சரிம்மா”
brush ஐ எடுத்து வாயில் வைத்தது தான் வாயை மூடிக் கொண்டாள்.
“கண்மணி இப்படி பண்ணினால் எப்படி பல் தேய்க்கமுடியும்? வாயை திற, நல்ல பிள்ளை தானே நீ?”
“ர்ச்….”
“ஏய்…. முழுங்காத பாப்பா…….”
பட்டென்று வாயை திறந்து “ ஹா….ஹ…ஹா…. ஹி...” என்று சிரிப்பு வேற.
“எப்பப் பாத்தாலும், எதுக்கெடுத்தாலும் ஹா….ஹ…ஹா ன்னு சிரிப்பு ” என்று முனங்கி கொண்டு brush ஐ பார்த்த பிறகு தான் காரணம் புரிந்தது. பேஸ்ட் வைத்த அடையாளமே அதில் இல்லை.
“அம்மா எனக்கு தூக்கம் வருதும்மா “
“தூங்க போலாமே ” என்று பயங்கர சுறுசுறுப்பாக அவளை தயார் செய்து படுக்க வைத்து நானும் படுத்து கொண்டேன் .
பத்து நிமிடம் கழித்து “அம்மா தண்ணி வேணும்“
தண்ணீர் குடித்துவிட்டு படுத்தாள் .
சிறிது நேரம் கழித்து “அம்மா எனக்கு உச்சா போணும்போல இருக்கு “
“இப்பதானே இருந்தாய் …அதெல்லாம் வராது சும்மா தூங்கு பாப்பா”
“இல்ல அம்மா எனக்கு வருது “
இனிமேல் விடமாட்டாள் என்று அனுப்பினேன் .
“அம்மா உச்சா வந்தது மாதிரி இருந்துச்சேன்னு வந்தா வரல்ல .. ஹி…ஹி.. ஹோ …ஹோ…”
கோபத்தை அடக்கி கொண்டு “சரி பரவாயில்ல வாங்க தூங்க போவோம் நேரமாயிடுச்சு பாப்பா“
சிறிது நேரம் கழித்து ,
“அம்மா எனக்கு சாப்பிட ஏதாவது தாம்மா , பாரு வயத்துல ஒண்ணுமே இல்ல” என்று மறுபடியும் அமுக்கி காட்டினாள்.
“இப்பதானே கண்மணி, எனக்கு சாப்பாடு போதும் என்று கூப்பாடு போட்ட …. சும்மா படு கொஞ்ச நேரம்“
“இல்லம்மா பயங்கர பசியா இருக்கும்மா ” என்று விடாமல் அனத்தியதால் ,
“சரி என்ன வேணும்“
“எனக்கு பூரி வேண்டும்“
மறுபடியும் கோபத்தை முழுங்கி கொண்டு வேகமாக பூரி செய்து கொண்டு கொடுத்தேன்.
இரண்டு கடி கடித்தாள்.” போதும்மா … வாங்க தூங்க போகலாம் ..”
எனக்கு அழுகையே வந்து விட்டது. இதெல்லாம் ரெம்ப ஓவர் பாப்பா…. இனிமேல் பசிக்குதுன்னு சொன்னே அப்புறம் இருக்கு என்று…… புலம்பி கொண்டு … திரும்பவும் படுக்க சென்றோம் .
இன்னும் சிறிது நேரம் கழித்து …”அம்மா எனக்கு ஏதாவது பண்ணனும்மா…..தண்ணி குடிக்கணும் மாதிரி இருக்கு….“
“என்ன பாப்பா… இப்பத்தானே சாப்பிட்ட .. நீ தானே போதும்ன்னு சொன்னா ..”
“ம்..”
“பூரியும் போதும்ன்னு சொன்னா….”
“ம்“
“செபம் செய்தாச்சு….தண்ணி குடிச்சாச்சு……”
“ம்“
“திரும்பவும் ஏதாவது பண்ணனும்ன்னா… என்ன பாப்பா இது?”
“ம்“
“என்ன ம் , எதுக்கெடுத்தாலும் ம்… “
“உ ” (என்னமோ ம் என்று சொன்னால் தானே கோபம் வருகிறது அதனால உ சொல்றேன் என்கிற மாதிரி ஒரு ராகத்தோடு சொன்ன பதிலில் சிரித்து விட்டேன்).
அதற்குள் கண்மணி அப்பா வந்துவிட, கண்மணி எவ்வளவு பெரிய சமத்துவவாதி என்பதை அதன்பின் தெரிந்துகொண்டேன். அவருக்கும் அதே அளவு இம்சை கொடுத்துவிட்டு அவள் தூங்கியது பதினோரு மணிக்குத்தான்.
28 comments மார்ச் 15, 2009
