Archive for ஜூன், 2009
அரபி பாட்டு..
அஞ்சி வருசமாயிடுச்சி நான் இந்த வேலையில் சேர்ந்து. என்னுடன் வேலை பார்க்கும் ஒருவருடன் தான் நான் தினமும் வருவதும் போவதும். இதென்ன பெரிய விஷேசம் என்று ஈசியா நினைக்காதீங்க. அவருக்கு(Egyptian) பிரெஞ்சும், அரபிக்கும் தான் தெரியும். எனக்கு பிரெஞ்சி சுத்தமா தெரியாது அரபியில் ‘சலாமலைக்கும்’ மாத்திரம் தான் தெரியும்.
காலையில் எங்க வீட்டுக்கு பக்கத்தில் வந்து ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் வெளியே வருவேன். ஆபீஸ் விட்டு வெளியெ வரும்போது இன்னொரு மிஸ்டு கால் கொடுத்தால் , நானும் வெளியே வருவேன்.இப்படி என் வாழ்க்கையில் ‘மிஸ்டு கால்’ பெரிய கம்யூனிக்கேஷன் டூலாயிடுச்சி.
அவசரத்து ஏதாவது சொல்லணும்ன்னா என்ன செய்வ கொஞ்சம் அரபி படிச்சிக்கோ என்று என் வீட்டுக்காரர் ரெம்ப வற்புறுத்தும் போது , படிக்கணும்ன்னு ஒரு வெறி வரும்… ஆனா என்ன பண்ண ‘சலாமலைக்கும்’ ஒன்று தான் கடைசியில் நிக்குது. அதனால் நான் அதை தண்ணி தெளிச்சி விட்டுட்டேன்.
எப்பவும் காரில் ஏறியவுடன் கண்ணை மூடிக்கொண்டு ஏதாவது கனவுலகிற்க்கு போய்விடுவேன். அப்படியே இன்றும் , கண்களை மூடிக்கொண்டு ஏதேதோ நினைத்து கொண்டிருந்தேன். திடீரென்று அவருடைய ரேடியோவில் ஒரு பாட்டு ரெம்ப மியூசிக்கில்லாமல், கட்டை குரலில் ஆரம்பித்தது. வண்டி ஓட்டிக்கொண்டிருந்தவரும் அதே மாதிரி பேச(பாட) ஆரம்பித்தார். நான் இவருக்கு இதென்னா புது ஆசை என்று கண்ணை மூடிவைத்து கொண்டே சிரித்துவிட்டு, கண்ணை திறந்து பார்த்தால்….. அவர் முன்னாடி போனக் காரை பார்த்து அப்படி முகம் சிவக்க காரசாரமாக திட்டிக்கொண்டிருந்தார். அதிலும் என்னுடைய சிரிப்பை பார்த்த பிறகு……….
ச்ச…. எப்படியாவது கொஞ்சம் சீக்கிரம் அரபி படிக்க வேண்டும்.
*************************************************
கண்மணியோட முதல் பேவரைட் சினிமா ‘திருவிளையாடல்’ ( நடிகர் திலகம் சிவாஜி நடித்தது).
அதில் சாவித்திரி அவர்கள் பாடும் பாட்டு ‘ஏலேலோ…’ என்ற பாட்டு ரெம்ப பிடிக்கும்.
அந்த பாட்டு வரும்போது நான் கூட சேர்ந்து மெல்ல பாடினா,
“அம்மா சும்மா சத்தம் போடாதீங்க, அக்கா பாடுறாங்கயில்ல” என்கிறாள்.
அப்புறம், சக்தே, பென்கரில் குதிரை பந்தயம், தெரசா என்ற பட்டியலில் இப்போது சேர்ந்த படம் ‘பசங்க’. அதில் என்ன புரியுதோ தெரியல ஆனா விழிந்து விழுந்து சிரிக்கிறா. அவளுக்கு நான் அந்தப் படத்தை போட்டுவிட்டு அவள் முகத்தில் வரும் சிரிப்பையும், expression யும் ரசிப்பதே என்னுடைய பொழுது போக்கு.
26 comments ஜூன் 17, 2009
எனக்கும் தத்துவத்துக்கும் ரெம்ப தூரம்.
கடவுள் ஒரு நாள், சோர்ந்து போயிருந்த ஒரு மனிதனை பார்த்து ,
“நண்பனே, இந்த மலையை பிடித்து தள்ளேன்” என்றார்.
அவனும் பிடித்து தள்ள ஆரம்பித்தான். இரண்டு நாள் ஆனது , நாலு நாள் ஆனது, ஆனால் மலையோ கொஞ்சமும் நகரவில்லை. கடைசியில் கடவுளின் மேல் கோபம் வர, அவரை திட்டிகொண்டான்.
அவனுடைய கோபத்தை பார்த்து கடவுள் திரும்பவும் அவனிடம் வந்தார்.
“கடவுளே.. என்ன இது…. நீங்க சொன்னீங்களேன்னு , மலையை பிடித்து தள்ளுனா, கொஞ்சமும் நகர மாட்டேங்குது. என்னிய வச்சு விளையாடுறீங்களா?” என்று கோபமாக கேட்டான்.
கடவுளோ புன்னகையுடன், “நண்பனே உன்னுடைய கைகளையும், கால்களையும் இப்போது பார், எவ்வளவு வலிமையாகிவிட்டது. உன்னை வலுப்படுத்துவதற்காகவே மலையை பிடித்து தள்ள சொன்னேன். அது நகர்ந்து ஒன்றும் ஆகப்போவதில்லை. அதனால் அதை பற்றி கவலைகொள்ளவும் வேண்டாம்… கோபப்படவும் வேண்டாம்” என்றாராம்.
என் மனதை தொட்ட இந்த கதை கோவிலில் பாதிரியார் சொன்னதுங்க. துன்பங்களும் , இழப்புகளும் நம்மை வலுப்படுத்துவதற்க்கும், நல் வழிப்படுத்துவதற்கும், உண்மைகளை தெளிவாக கண்டுகொள்வதற்காகவும் தான். நம்பிக்கையோடு முழு மனதோடு ஏற்றுக் கொண்டால், நமது வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.
தத்துவம் எல்லாம் இல்லைங்க. நம் கையை மீறி சில/பல விஷயங்கள் நடக்கும் போது எனக்கு நானே கூறிக்கொள்ளும் ஆறுதல்.
(சரி அப்படி என்ன விஷயம் இப்ப நடந்து போச்சுன்னு எல்லாம் கேட்கக்கூடாது. சின்ன சின்ன விஷயத்துக்கே, பெரிய பில்டப் எல்லாம் கொடுத்து பெரிய ரேஞ்சில உக்காந்து கவலைபடும் என்னை மாதிரி வீராங்கனைகளுக்கு தான் இந்தப்பதிவு.)
28 comments ஜூன் 10, 2009
என்னை பற்றி சில….
இந்த தொடரை எதுக்கு ஆரம்பிச்சாங்கன்னு தெரியல. என்னை பற்றி, நான் எழுதுவதை படித்து வதை படவேண்டும் என்ற உங்கள் விதியை எப்படி மாற்றமுடியும். வேலை பழுவிலும், முகுந்தன் 32 கேள்விக்கு பொறுமையா பதில் சொல்லியிருப்பதாலும், சுயமா சிந்தித்து எழுதுவதற்க்கு ஒன்றும் இல்லாததாலும் உங்களை கஷ்டப்படுத்துவதை தவிர்க்க முடியவில்லை.சரி இதோ கேள்வி பதில்….
1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
என்னோட உண்மையான பெயரை ஒரு பாதிரியார் வைத்தார். இந்தப் பெயரை நானாக வைத்து கொண்டது (பொன்னியின் செல்வன் தாக்கத்தினால்). எனக்கு என் பெயர் ரொம்பவே பிடிக்கும்.
2. கடைசியாக அழுதது எப்பொழுது?
(பொதுவாக, பெண்களிடம் இந்த கேள்வியை கேட்கக்கூடாதுங்க. )
அம்மாவின் மரணத்தை நினைக்கும் போதெல்லாம் அழுதுவிடுவேன். இந்த பிளாக் எழுத ஆரம்பித்ததே அந்த வேதனையை மறக்கத்தான்.
3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
என்னோட தோழியின் கையெழுத்தும் என்னோடதும் ஒரே மாதிரி இருக்கும். அதனால் ரெம்பவே பிடிக்கும்.
4.பிடித்த மதிய உணவு என்ன?
ம்… எங்கம்மா வைக்ககூடிய மீன் குழம்பு, கருவாட்டு குழம்பு. அப்புறம் கல்யாண வீட்டில் வைக்கும் சாம்பார், அவியல்.
5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
நல்ல பழகுவேன். ஆனால் அப்புறம் அவங்க பழக்கத்தை பொறுத்து நட்பு தொடரும்.
6.கடலில் குளிக்க பிடிக்குமா….அருவியில் குளிக்க பிடிக்குமா?
எந்த நீர் நிலையிலும் குளிக்கப் பிடிக்கும். குளத்தில் நீந்தி குளிப்பதென்றால் இன்னும் பிடிக்கும்.
7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
சிரிப்பு, கண்கள். மனதார அன்பா ஒரு சிரிப்பு சிரித்தாலே கவுந்திடுவேன்.
8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடித்த விஷயம் எல்லோரையும் நல்லவர் என்று ஓவரா நம்பி பழகுவது. பிடிக்காததும் அதுவே.
9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
அப்படியே எங்கம்மா மாதிரி எப்பவும் என்னை விரட்டிகொண்டு இருப்பது(பிடித்ததும் அதுவே பிடிக்காததும் அதுவே).
10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
என் அம்மாவும் அப்பாவும். என் கண்மணியை பார்த்த பிறகு தான் என்னை விட்டு பிரிந்தார்கள் என்றாலும்….. அப்பப்ப எனக்கு யாருமே இல்லை என்கிற எண்ணம் வந்துவிடுகிறது.
11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
ஆரஞ்ச், சிகப்பு நிறம் கலந்த சுடிதார்.
12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
என்னங்க இது, பிரவுசரைப் பார்த்துக் கொண்டு தான் இதை எழுதுகிறேன். ஆபீசில் எதுவும் கேட்க விடமாட்டார்கள்.:)
13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
வெளிர் நீலம்.
14.பிடித்த மணம் ?
மல்லிகை பூ வாசம். மழைக்கு முன் வரும் மண் வாசமும் பிடிக்கும்.
15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
பாசக்கார தம்பிங்க. அவங்களை எல்லாம் தைரியமாக நாட்டாமை பண்ணலாம்.
16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?
அவர் அவருடைய கேஷவ் பற்றி எழுதியது பிடிக்கும். அப்புறம் நிறைய ஜோக் எழுதுவார் அதுவும் பிடிக்கும்.
17. பிடித்த விளையாட்டு?
கூடை பந்தாட்டம், கொக்கோ, வாலிபால் என்று விறுவிறுப்பாக செல்லும் எல்லா விளையாட்டும் பிடிக்கும். கிரிக்கெட் பிடிக்கவே பிடிக்காது.
18.கண்ணாடி அணிபவரா?
அணிய பிடிக்காது. ஆனால் அது இல்லாம ஹி…ஹி … எதுக்கு ரிஸ்க் எடுக்கணும்.
19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
நகைச்சுவைப் படங்கள் ரொம்ப பிடிக்கும்.
20.கடைசியாகப் பார்த்த படம்?
யாவரும் நலம்.
21.பிடித்த பருவ காலம் எது?
வசந்த காலம்.
22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
இப்பதைக்கு ஒன்றும் இல்லை.
23.உங்கள் டெஸ்க்டொப்ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
வேற வேலை இல்ல…..
24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்தது – என் குழந்தையின் சிரிப்பு சத்தம்.
பிடிக்காதது – அழுகை சத்தம், என் கணவர் கோபத்தில் பேசும் சத்தம்.
25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
குவைத்.
26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
தப்பு செஞ்ச விஷயத்திற்க்கு அடிவாங்கினதில்லை. ஆனால் தப்பே செய்யாத விஷயத்திற்க்கு நிறைய வாங்கியிருக்கிறேன்.
27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
வேலை செய்து சாப்பிட வேண்டும் என்று எண்ணாமல் அடுத்தவர்களை எதிர்பார்ப்பது, நிறைவில்லாமல் அளவுக்கு மீறி ஆசைப்படுவது, அடுத்தவர்களை மட்டம் தட்டி பேசுவது.
28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
யார் மீதாவது/எந்த காரணத்திற்க்கு எனக்கு கோபம் வந்தாலும், அவர்களிடம் சண்டை போடமாட்டேன். என் வீட்டுகாரரிடம் தான் வந்து சண்டை போடுவேன்.
29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
என் வாழ்க்கையே தேசிய நெடுஞ்சாலையில் தானுங்க. என்னோட ஊரு நாகர்கோவில், மேற்படிப்பு திருச்சியில், வெலை சென்னையில், அப்புறம் கல்யாணம் கோவில்பட்டியில். இளநிலை பட்டப்படிப்பு படிக்கும் போது மதுரை, திருச்சி, சென்னைக்கு தான் சுற்றுலா சென்றோம், திருச்சியில் படிக்கும் போது கன்யாகுமரிக்குத் சுற்றுலா சென்றோம். இந்த கேள்வியை கேட்டா நான் ரெம்ப கடுப்பாகிவிடுவேன்.
30.எப்படி இருக்கணும்னு ஆசை?
இப்போது போல், எப்பவும் சந்தோஷமா இருக்கணும்ன்னு தான் ஆசை.
31.கணவன் செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
ஏதாவது ஒரு மெஷினை கொடுங்க சந்தோஷமாக வேலை பார்ப்பார்.
32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
வாழ்க்கை ஒரு விளையாட்டு. அதில் வெற்றி, தோல்வி, அடி, வேதனை, சிரிப்பு எல்லாம் இருக்கும். சந்தோஷமா விளையாடுங்கள்.
அப்பாடா, படிக்கும் போது கூட இவ்வளவு சின்சியரா பதில் எழுதியது கிடையாது. இனி, எதையும் தாங்கும் இதையம் படைத்த புவனேஷையும், என்ன எழுதலாம் என்று ரெம்பவே யோசித்து கொண்டிருக்கும் ஷ்ரிராமையும், ரெம்ப நாளாக வெளியே வராமல் ஒளிச்சி உக்காந்து கொண்டிருக்கும் பிரபுவையும் அழைக்கிறேன்.
60 comments ஜூன் 3, 2009