Archive for ஜூலை, 2009

சொர்க்கமே என்றாலும்……..

               இதனால் எல்லா பெரியவங்களுக்கும், நண்பர்களுக்கும், நண்டு சிண்டுகளுக்கும் சொல்லி கொள்வதென்னவென்றால்….. சொர்க்கத்தை மிஞ்சிய இந்தியாவுக்கு நாங்கள் செல்வதால் ஒரு மாதத்திற்க்கு உங்களுக்கு நிம்மதியா இருக்கலாம்.

                                     **************************

   நான் கண்மணியிடம், “கண்மணி…. நாம தாத்தாவை இங்கேயே வச்சிக்குவோமா”

கண்மணி சந்தோஷமாக தலையாட்டியபடியே ” தாத்தா நம்மகூடவே இருக்கட்டும்மா”

தாத்தா கடகடவென்று சிரித்தபடி “கண்மணி இங்க எனக்கு வீட்டில் இருந்தால் போர் அடிக்கும். அதனால எனக்கு ஒரு வேலை பார்த்துகொடு… அப்ப நான் இருக்கிறேன்”

 கண்மணி , ” அதெல்லாம் நான் பார்த்தாச்சி தாத்தா

என்ன…… அதுக்குள்ள பாத்திட்டியா? என்ன வேலை

“நீங்க வேலைக்கு… ஆபீசுக்கு எல்லாம் போகவேண்டாம்…. எனக்கக்கூட எப்பவும் பேசிட்டே இருங்க. அதான் உங்க வேலை

தாத்தாவுக்கு சிரிப்பு தாங்கமுடியவில்லை.

Ok Bye… Bye Friends.

11 comments ஜூலை 16, 2009

எனக்கும் சீரியஸா பேசத்தெரியும்.

               ஒவ்வொருடைய வாழ்க்கையிலும் ஒவ்வொருவிதமான பிரச்சனைகள். வீட்டுக்குள் போய் பார்த்தால் தான் தெரியும். அதையும் தாண்டி தான் ஒவ்வொருத்தரும் வாழ்க்கையில் போராடி  நொந்து நூலாகி முத்தெடுக்கிறார்கள்.

                              ஆனால் இந்த போராட்டம் இல்லையென்றால் வாழ்க்கையில் ருசியே இருக்காது. சாபமாக மாறிவிடும். 

                              கண்மணி சில சமயங்களில் எதையாவது இண்டு இடுக்கில் வளைந்து நெளிந்து எடுக்க முயற்சிப்பாள். நான் அய்யோ பாவம் என்று எடுத்து கொடுத்தால் உருண்டு புரண்டு அழ ஆரம்பித்துவிடுவாள். திரும்பவும் நான், அதை அந்த இடத்தில் வைத்தால் தான் அவளுக்கு நிம்மதி வரும். திரும்பவும் அதை விடாபிடியாக முயற்சி செய்து எடுத்தபிறகு ஒரு வெற்றி சிரிப்பு சிரிப்பாள் பாருங்கள்…. அது தான் சந்தோஷம்.

                           இந்த மாதிரி குணம் பொதுவாக நிறைய குழந்தைகளிடம் இருப்பதை பார்க்கலாம். அப்புறம் வளர வளர அந்த மாதிரி குணங்கள் எல்லாம் எங்கே யாரால் தூக்கி எ|றியப்படுகிறது?  எதற்கெடுத்தாலும் அம்மா தான் செய்யவேண்டும், அப்பாதான் செய்யவேண்டும் அது அவர்கள் கடமை மாதிரி நமக்கு நினைப்பு வந்துவிடுகிறது. அவங்க செய்யாவிட்டால் அவ்வளவுதான்…. ஒரே கூப்பாடு… கோபம்…

                       சின்ன சின்ன போராட்டங்கள் தான் வாழ்க்கையின் சுவாரஸ்யத்தை கூட்டுகிறது. வளர வளர பிரச்சனைகளும் பெரிதாக வளர ஆரம்பித்துவிடுகிறது பெரிய சவாரஸ்யங்களை தருவதற்காக.  இது தான் இயற்கையின் நியதி.

                      என் வீட்டுக்காரர் அடிக்கடி சொல்லுவார், ‘சைக்கிளில் போயிட்டிருக்கும் போது கீழே விழுந்தால் கொஞ்சமா அடிபடும் . அதுவே பைக்கில் போகும் போது விழுந்தால் இன்னும் கொஞ்சம் பலமா அடிபடும். இன்னும் மேல போய் விமானத்தில் போயிட்டிருக்கும் போது விழுந்தால் நான் சொல்லவேண்டியதில்லை. அது போல காசு, பணம், படிப்பு என்று எல்லாவற்றிலும் மேலப் போகணும் என்று ஆசைப் படுவது நல்லது, அதே நேரத்தில் பிரச்சனைகளும்  பெருசாத்தான் வரும். அதை எதிர்கொள்வதற்கும் நீ தயாரா இருக்கணும்’  (எனக்கு இதெல்லாம் அப்பவே தெரியும்…  அதனாலத் தான் ரெம்ப படிக்கெல )

                       சில நேரங்களில்,   ‘என்ன இது சும்மா ஏதாவது ஒண்ணு கெடக்க ஒண்ணு வந்து உயிரை வாங்குது.. ஒரு முடிவே கிடையாதா’  என்று மனது  சோர்ந்து போகும் போது புத்தகங்கள்  , நண்பர்கள்  வாயிலாக நாம் நம்மை புதிப்பித்து கொண்டு மீண்டும் தயாராக வேண்டும். கோடைக்காலத்தில் பாருங்கள் மரங்களில் உள்ள இலை எல்லாம் உதிர்ந்து பார்ப்பதற்கு காய்ந்து போய் நின்றாலும் , அதனுள் நம்பிக்கை என்ற வேர் உயிரோடிருக்கும். மீண்டும் மழை வந்தவுடன் ஜெகஜோதியாக பூத்து குலுங்கும்.

           சரி ரெம்ப சீரியசா பேசிட்டேனோ?  ம்….. என்ன செய்ய சில நேரங்களில் இதுவும் அவசியமாகிவிடுகிறது.  அதனால சின்ன சின்ன விஷயங்களில் கிடைக்கும் சந்தோஷங்களை விட்டுடாதீங்க. மனம் விட்டு சிரியுங்கள், வாழ்க்கையை சந்தோஷமாக எதிர்கொள்ளலாம்.

25 comments ஜூலை 9, 2009

தாத்தா…..வந்துட்டாங்க….

                  கல்யாண  வேலைகளால் வீடே கசகசவென்றிருந்தது. நாளைக்கு கோவில்பட்டியிலிருந்து எல்லோரும் கிளம்புவார்கள். அடுத்த நாள் கல்யாணம். நான் இன்னும் இரண்டு நாளில் கணவராகப்போகும் என் பாண்டியர்  6  மாதமாக எழுதித்தள்ளிய கடுதாசிகளை மறுபடியும் ஒருதடவை வாசித்து அரைலூசு மாதிரி தன்னாலே சிரித்தபடி அலைந்துகொண்டிருந்தேன்.
    தொலைப்பேசி தொல்லைபேசியாக என்  சிரிப்பை கலைத்தது.

     “சொல்லுங்க”

     “நான் கோவில்பட்டியிலிருந்து பேசுறேன், பெரியவங்க யாராவது இருக்கிறாங்களா?”

     “இல்லைங்க. மண்டபம் வரைக்கும் போயிருக்காங்க. என்னன்னு சொல்லுங்க. நான் அவங்ககிட்ட சொல்லிக்கிறேன்”

        “நான் பண்டியனோட  தாத்தா பேசுகிறேன்ம்மா. செய்தி கொஞ்சம் அவசரம் அதனால உன்கிட்ட சொல்ல வெண்டியதா இருக்கு. இங்க…. நெலம கொஞ்சம் மோசமா இருக்கு…. நம்ம பாண்டியனோட அம்மா அதான் உன் அத்தை… தவறிட்டாங்க…. உங்க அப்பாகிட்ட கல்யாணத்தை பற்றி கொஞ்சம் பேசணும். ம்…. அதனால அப்பா வந்தவுடன் பேசச்சொல்லு சரியா” 
    

           ”ம்…” என்றேன் உயிரே இல்லாமல். அத்தை, என் மீது மிக பிரியத்துடன் பழகி, என் கணவரின் சிறு வயது சேட்டைகளை சொல்லி மகிழ்ந்து… வாரத்திற்க்கு ஒரு தடவையாவது தொலைபேசி…. அடிக்கடி என்னை பார்க்க என் வீட்டிற்க்கும் வந்து பாசத்தில் நனையவைத்து…. என்னால் ஜீரணிக்க முடியவில்லை.

                  எப்பொழுது அம்மா அப்பா வீட்டிற்க்கு வந்தார்கள், எப்ப அப்பா பேசினார்கள், எப்படி கல்யாணத்தை நிறுத்தினார்கள், எப்படி விஷயம் காட்டுத்தீ போல் பரவியது,  என்று எனக்கு தெரியாது. நான் மலைத்து போய் நின்ற அரைமணிநேரத்தில் எல்லாமே முடிந்துவிட்டது. அம்மாவின் முகமோ பேயறைந்தார்ப்போல் மாறிவிட்டது. என்னுடைய உணர்ச்சிகளை விட அதிகபடியான கவலை,  அம்மாவை எப்படி சாமாளிப்பது என்பதுதான்.

               எத்தனை வயசானாலும் பிள்ளைகளுக்கு பெற்றோர்களின் இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒன்று.  அவர்களின் கஷ்டம் தெரிந்திருந்தாலும், பெண்வீட்டார்களின் பாடும் குறைந்தது இல்லை. அடுத்தவர்களின் / சொந்தபந்தங்களின்  வேறுப்பேத்துகிற  பேச்சுகளும்…. பார்வைகளும்… இதிலிருந்து எப்படி என் அம்மா அப்பாவை காப்பாற்றப்போகிறேன் என்று எனக்கு புரியவேயில்லை.

            திரும்பவும் தொலைபேசி சிணுங்கியது. நானே போய் எடுத்தேன்.
  ” நான் பாண்டியன் பேசுகிறேன்”

  “ம்…. சொல்லுங்க”

  அம்மாவிற்க்காக வருத்தம் தெரிவித்தபிறகு,
                    “பாரும்மா… நீ என்னுடைய மனைவி என்று 6 மாதத்திற்க்கு முன்னாலே முடிவுசெய்தவொன்று. அதில் எந்த மாற்றமும் இல்லை… ஆனா…. எங்க வீட்டில் இருக்கும் நிலமையை உனக்கு நான் தனியாக விளக்க வேண்டாம். அதனால யாரு என்ன பேசினாலும், பயப்படாதே. நீ தான் உங்க அம்மா அப்பாவிற்க்கு ஆறுதல் சொல்லி அவர்களையும் கவலைப்படாமல் இருக்க செய்ய வேண்டும்

                   என் கணவர் எத்தனையோ காதற்கடிதங்களையும், கவிதைகளையும்  எனக்கு எழுதியிருக்கிறார் (கல்யாணம் நிச்சயம் செய்தபிறகு), ஆனால் இந்த வார்த்தைகள் தான் எனக்கு அவருடைய உண்மையான நேசத்தை உணர்த்தியது. அடுத்த வாரத்தில் எங்கள் திருமணம் நடந்து  அவங்க வீட்டிற்க்கு சென்றபோது, என்னுடைய மாமாவோ ஒரு படி மேலே போய், “என் மனைவி அவளை மாதிரி ஒரு பெண்ணை வீட்டிற்க்கு வரவழைத்தபிறகு தான் அமைதியாக சென்றிருக்கிறாள்” என்றார்.

         இத்தனை பண்பட்ட உள்ளமுடைய என் மாமா எங்க வீட்டிற்க்கு வந்திருக்காங்கங்க. எனக்கு சந்தோஷமாக இருக்கிறது, கண்மணிக்கோ காலு தரையிலே நிற்கமாட்டேங்கிறது. மூன்று மாதம் விசா கிடைத்தாலும், மூன்று வாரம் தான் இருப்பேன் என்றதால் ரெம்ப வருத்தம் இருந்தாலும்…. சரி இருப்பது வரை சந்தோஷமாக கொண்டாடுவோம் என்று நினைத்துகொண்டேன்.

    

 டிஸ்கி:    ஆனா எங்க மாமாவுக்கு என்னை ரெம்ப பிடிக்கும் என்பதால் என் வீட்டுக்காராருக்கு பயங்கர பொறாமை. எப்பவும் கடவுளே இந்த கொடுமைகாரியின் உண்மையான சொரூபத்தை என் அப்பாவிற்க்கு இப்பவாவது காட்டு என்று ஒரே செபம். நாங்க எல்லாம் உஷார்பார்ட்டிங்கன்னு அப்பப்ப மறந்துவிடுகிறார் என் அப்பாவி கணவர்.

37 comments ஜூலை 1, 2009


அண்மைய இடுகைகள்

பக்கங்கள்

Blogs

அண்மைய மறுமொழிகள்

Blog Stats

Blogroll

 

ஜூலை 2009
தி செ பு வி வெ ஞா
« ஜூன்   ஆக »
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

மேல்