Archive for செப்டம்பர், 2009
எப்படி இப்படியெல்லாம்….
சமீபத்தில் சுஜாதாவின் ‘கடவுள் இருக்கிறாரா’ என்ற புத்தகத்தை வாசித்து கொண்டிருந்தேன். இதை பலர் படித்திருக்கலாம். அதில் ஒரு நிகழ்ச்சி குறிப்பிட்டிருந்தார்.
இரண்டாம் உலக யுத்தத்தின் போது , ஜெர்மன் லண்டன் நகரவீதியெங்கும் அலைலையாக குண்டுகளை அள்ளி தெளித்து கொண்டிருந்த ஒரு இரவில், சர்ச்சில் தன் டவுனிங் தெருவிலுள்ள வீட்டில் , மூன்று மந்திரிகளை உணவுக்கு அழைத்திருந்தார். விருந்து நடந்து கொண்டிருந்த போது, விமானத்தாக்குதல் தொடங்கியது. சாப்பிட்டு கொண்டிருந்த சர்ச்சில், திடீரென்று எழுந்து சமையலறைக்கி சென்று அங்கிருந்த சிப்பந்திகளிடம் “சாப்பாட்டை விருந்து நடக்கும் அறையில் வைத்து விட்டு , உடனே பதுங்கும் அறைக்கு பாதுகாப்பாக சென்றுவிடுங்கள் ” என்று ஆணைபிறப்பித்துவிட்டு திரும்பி வந்தார். மூன்று நிமிடம் கழித்து , விமானம் தாக்கி சமைலறை முழுவதும் நாசமாகி, சமையற்காரரும் , பணிப்பெண்களும் காப்பாற்றப்பட்டார்கள். அந்த நிமிஷத்தில் எழுந்து போய் அவர்களை வெளியே போகச்சொன்னது எது என்று பின்னால் அவர் வியந்தாராம்.
என்னுடைய கண்முன்னே இது மாதிரி சம்பவங்கள் நடந்திருந்தாலும், சிலதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
எங்கம்மா பொதுவாக எதற்குமே நேரம் தவறமாட்டார். எங்காவது வெளியே கிளம்ப வேண்டுமானாலும் சரி, குறித்த நேரத்தில் அங்கு கிளம்பிவிடவேண்டும் என்பதில் குறியாக இருப்பார். ஒரு நாள் என்னுடைய அண்ணன் சென்னைக்கு மாலை நான்கு மணியளவில் கிளம்புவதாக இருந்தது. அம்மாவும் அதற்குள் பெர்மிஷன் கேட்டு பள்ளியிலிருந்து வருவதாக வாக்களித்திருந்தார்கள். ஆனால் அன்று என்னவோ தோன்றவும், அடுத்த பேருந்தில் போனால் போதும் என்று பள்ளியிலிருந்து மெதுவாகவே வந்தார்கள். அண்ணாவுக்கோ பயங்கர கோபம் , நாலு மணி பேருந்தை பிடிக்க முடியாது என்று.கரகரவென்று முணுமுணுத்து விட்டு அடுத்த பேருந்தை பிடித்து தான் சென்றார்.
மதுரை அருகில் சென்றுகொண்டிருந்தபோது , நெடுஞ்சாலையில் அண்ணா டிக்கெட் புக் பண்ணியிருந்த பேருந்து பயங்கரமாக சேதமடைந்து கிடந்ததையும், நிறைய பேர் படுகாயம் அடைந்ததையும், பலர் இறந்ததையும் பார்த்துவிட்டு அதிர்ந்து அடுத்த நாள் எங்களுக்கு போன் பண்ணினார். அன்று அம்மாவிற்க்கே எதற்காக மெதுவாக வந்தோம் என்று காரணம் சொல்லத்தெரியவில்லை.
அரபு நாடுகளில் வெள்ளிக்கிழமை தான் விடுமுறை. என் வீட்டுக்காரர் எல்லா வெள்ளிக்கிழமையும் தவறாமல் (உடம்பு சரியில்லாவிட்டாலும்) கோவிலுக்கு செல்லும் வழக்கமுடையவர். எனக்கு ஏதாவது உடம்பு சரியில்லை என்றால், டிமிக்கி கொடுத்துவிடுவேன். ஒரு வெள்ளிக்கிழமை வழக்கம் போல் அதிகாலையில் எழுந்து குளித்து கிளம்பியவர் அப்படியே உக்கார்ந்து கொண்டார். எனக்கு என்னமோ இன்று போகவேண்டாம் என்று தோன்றுகிறது என்று கூறியவரை நான் ஆச்சிரியமாக பார்த்தேன். சிறிது நேரத்தில் என்னுடைய தோழியிடமிருந்து ஒரு போன் , அவளுடைய கணவர் கீழே விழுந்து தலையில் நல்ல அடிபட்டு….. நாங்கள் கிளம்பி இருந்ததால் நொடி பொழுதையும் வீணாக்காமல் சென்று அவரை மருத்துவமையில் சேர்க்கமுடிந்தது. ஊருக்கு புதிதாக வந்திருந்த தோழிக்கோ வேறு யாரையும் தெரியாது, என் வீட்டுகாரரிடம் அப்போது செல்போனும் கிடையாது, அந்த வெள்ளிக்கிழமை நாங்கள் கோவிலுக்கு போயிருந்தால்…
இதை பற்றி என் வீட்டுக்காரரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது, ‘அதுக்கெல்லாம்…எல்லோரையும் முழுமனதாக அன்பு செய்யும் நல்ல உள்ளம் வேணும்மா.’ என்று வழக்கம்போல் என்னை வெறுப்பேத்த ,
நானும், “Opposite poles attract each other, நானும் நல்ல பிள்ளையா இருந்திருந்தால் நம் நிலமை என்னவாகியிருக்கும் என்று சிறிது யோசித்தீர்களா….. (அவர் கையை பிடித்து) இந்த நல்லவர் மேல் அளவுக்கதிகமாக மையல் கொண்டு , ஒரு கணம் கூட பிரியாதிருக்க நான் குற்றங்குறை உள்ள பேதையாக மாறி , தினம் பல ஏச்சு பேச்சுகளையும் தாங்கி வாழ்ந்துகொண்டிருக்கிறேன். இப்படிப்பட்ட என் கணக்கிலடங்கா தியாகங்களுடன் இந்த தியாகம் புதைந்து இருப்பதால் தான் நம்முடை பூமியை தியாக பூமி என்று சொல்கிறார்களோ என்னமோ.” என்ற பதிலில் ‘திருத்த முடியாத கேசுகளுடன் பேசினால் நேரம் தான் விரையம் என்று அயர்ந்து முறைக்க………
4 comments செப்டம்பர் 30, 2009
இந்த அண்ணன்களே இப்படித்தானோ
வகை : கதை, சிறுகதை.
அதிகாலையிலே எங்கம்மா சுறுசுறுப்பாக எங்களையெல்லாம் தூங்கவிடாமல் பிராண்ட ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களுடைய ஒரே ஒரு அக்காவுடைய ஒரே புத்திரனாகிய திருவாளர் சுந்தர் திருமணம் தான் இன்று.
நாங்களும் இந்த நாளை ஆவலுடன் எதிர்பார்த்துகொண்டிருந்ததால் அம்மாவிற்க்கு பொது மன்னிப்பு வளங்கப்பட்டிருந்தது. இருந்தாலும் எதையாது சாக்கு சொல்லி கொஞ்ச நேரம் துங்கினால் நல்லது போல் தோன்றியதால் மெள்ள அண்ணாவின் அறையினுள் எட்டி பார்த்து அதிர்ந்துவிட்டேன். எப்போதும் எதையாது படித்து கொண்டு, பெரிய சிந்தனாவாதி மாதிரி யோசிக்கிறேன் என்று சதாகாலமும் சிடுமூஞ்சியாய் அலைபவன் சிகை அலங்காரத்தில் ஒன்றியிருந்தான். சரி அம்மாவுடைய வியாதி இவனையும் பாதித்து விட்டது என்று அப்பாவின் அறைக்குள் எட்டி பார்த்தேன்.
அப்பாவின் அறை என்பதைவிட புத்தக கொடௌன் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்.அவர் அப்போதைக்கு என்ன புத்தகம் படித்து கொண்டிருக்கிறார் என்று தெரியவெண்டுமென்றால் , அவருடைய நடவடிக்கையை ஒரு நிமிஷம் உற்று பார்த்தாலே கண்டுபிடித்துவிடலாம். எதற்கெடுத்தாலும் கெக்கே பிக்கே என்று சிரித்துகொண்டிருந்தால் ஏதாவது “சிரிப்பின் சிறப்பு” மாதிரி புத்தகத்தை படித்துகொண்டிருப்பார். சந்தையில் உள்ள பாகற்க்காய் எல்லாம் வீட்டிற்க்கு இடம்பெயர்ந்தால் “பாகற் காயின் பலன்” களை படித்திருப்பார். மூச்சை அடக்கி மூலையில் விறைப்பாக உட்கார்ந்திருந்தால் சந்தேகமேயில்லாமல் தியானம் சம்பந்தமாக யாராவது கொம்பு சீவிவிட்டிருப்பார்கள்.ம்.. மேஜையில் மெழுகுவர்த்தி எரிந்து கொண்டிருந்தது. பத்தடி தள்ளி அப்பா அமர்ந்து கண்களை விரித்து உருட்டி , மெழுகுவர்த்தியின் ஜூவாலையை மிரட்டி கொண்டிருந்தார். இப்ப நான் உள்ளே நுளைந்தேன் என்றால் என்னைப்போல் …. யாரும் இருக்கமாட்டார்கள்.
ஒன்பது மணிக்குத்தான் வீட்டிலிருந்து புறப்படுவதாக கூறியிருந்தார்கள். ஒரு நொண்டிச்சாக்கும் கிடைக்காததாலும், அஞ்சு மணிக்கே என் அம்மாவின் அலம்பல் ஆரம்பித்துவிட்டதை நினைத்து இனிமேல் புண்ணியமில்லை என்பதாலும், நானும் கிளம்ப ஆரம்பித்துவிட்டேன்.
***************
நானும், என்னுடைய அத்தை பெண்கள், சித்தி பொண்ணு என்று ஒருக் கூட்டமாக திருமணக்கோஷ்டியை மேய்ந்து பார்த்தும் , எங்களுக்கு பொழுது போக்க ஒருத்தரையும் பார்க்கமுடியவில்லை. அதனால், எங்களுக்குள்ளே கடித்து குதறிக் கொண்டிருந்தோம். திடீரென்று சாந்தி என்னை நிமிண்டி, கண்ணை அசைக்க , அந்த திசையில் பார்த்தேன். என் அருமை அண்ணன், மாப்பிள்ளை தோழனாக மேடையில் ஏறியவன், லிட்டர் லிட்டராக மணப்பெண் தோழியிடம் வழிந்து கொண்டிருந்தான். அடப்பாவி அதுவும் இப்படியா பகிரங்கமாக பழகிப்பார்க்க கிழம்புவது!.
கொஞ்சம் ஓரமாக போய்.. அண்ணாவை அப்படியே அமுக்கி, ஓரங்கட்டி,
”என்னாது இது?” என்றேன்.
”எது தங்கச்சி?” என்றான் காது வரை சிரித்து கொண்டு.
”ம்.. மண்ணாங்கட்டி” என்றேன் கோபத்துடன்.
” மண்ணாங்கட்டி ஒழிக….” என்றான் விரைப்புடன்.
”ஜோக்கு?…மானம் போகுது .. அங்கப்பாரு ஒரு கும்பலே உன்னை பார்த்து சிரிக்குது “.
” ஹி…ஹி.. சரி சரி கொஞ்சம் அடக்கி வாசிக்கிறேன். ஆனா…. தங்கச்சி வருங்கால அண்ணியை நல்லா பார்த்துக்கோ.” என்று ஒரு பிட்டை போகிறப் போக்கில் போட்டான்.
*******************
இனிதே கல்யாணம் நடந்த பிறகு, அண்ணாவின் முறை ஆனதால், அம்மா பெரிய வேட்டைக்கே தயாராகிவிட்டார்கள். அண்ணாவோ, ” அம்மா எனக்கு என்று தனியாக எந்த விருப்பமும் கிடையாது. உங்களுக்கும் முக்கியமாக தங்கச்சிக்கும் பிடித்தால் போதும் ” என்றான். என்னை பார்த்து ஒரு நமட்டு சிரிப்பு வேற.
ஆனால் அப்பாவி அம்மாவோ அந்த டயலாக்கில் ஐஸ்க்கிரீமாக உருகி, அதை வேற எல்லாரிடமும் சொல்லி பெருமைபட்டுக்கொண்டார்கள்.படிப்பு முதற்கொண்டு நிறைய விஷயங்களில் அண்ணன் பெரியக் கில்லாடியாக இருப்பதை முதன் முறையாக அறிந்துகொண்டேன். இந்த காதல் கத்திரிக்காய்களில் எல்லாம் ரெம்ப நம்பிக்கை இல்லாவிட்டாலும், திடீரென்று சுனாமி போல் வந்து அண்ணனை கன்னா பின்னாவென்று தாக்கியதை பார்த்தபிறகு, நமக்கும் அந்த தொற்று வியாதி ஒருவேளை வந்துவிட்டால் என்ன செய்வதென்று ஒரு முன்னெச்சரிக்கை காரணமாக நான் அமைதியாக இருந்தேன்.
அப்பா கரும சிரத்தையாக யோகாவில் ஐக்கியமாக இருக்க, அம்மா பெண்களின் ஜாதகத்தை பலவாறாக அலசி ஆராய்ந்து கொண்டிருந்தார்கள். ஒரு நாள் நான் சுந்தர் அண்ணாவின் கல்யாண ஆல்பங்களை பார்த்தவாறு அம்மாவிடம் பேச்சு கொடுத்தேன். ” அம்மா அண்ணி பக்கத்தில் நிற்கிறாங்க பாருங்க, இவங்க பேரு கீதாவாம். இஞ்சினியரிங் முடிச்சிருக்காங்க. அழகாகவும் இருக்கிறாங்க, குணசாலியாகவும் தெரிஞ்சாங்க. அங்கங்கே பார்க்கிறதுக்கு, அண்ணிக்கிட்ட பேசி… இவங்களையே நம்ம அண்ணாவுக்கு முடித்தால் என்ன?” என்று மெல்ல தூண்டிலை போட்டேன்.
அம்மா கொஞ்ச யோசித்தாலும் ” உனக்கு பிடித்திரிந்தால் பேசி பார்க்கிறேன்” என்றார்கள். அண்ணாவுடைய கண்கள் டிவியை பார்த்துக்கொண்டிருந்தாலும், காது ரெண்டும் எங்களுடன் தான் இருந்ததால், என்னை நன்றியுணர்ச்சியோடு பார்த்து ஒரு சிரிப்பு சிரித்தான். அப்புறம் விஷயம் எல்லாம் படு வேகமாக நடந்தது.
************************
மணமேடையில் இதோ எங்க அண்ணாவும் , கீதா அண்ணியும் மாலையும் கழுத்துமாக நின்று அசடு வழிந்து கொண்டிருந்தார்கள். அண்ணிக்கு எல்லாவிஷயமும் தெரியுமாததால் என்னை பாசத்தோடு தோழியாக நிற்கவைத்து கொண்டார்கள். நானும் அங்கு வந்தவர்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்திக்கொண்டு இருந்தேன்.
திடீரென்று அண்ணி முகத்தில் ஆயிரம் வாட்ஸ் வெளிச்சம் பரவியது.அவங்க ஒன்றுவிட்ட விசு அண்ணன் கடைசி நேரத்தில் பகவானின் கருணையால் லீவு கிடைத்து, மனதை கவரும், பளீரென்ற சிரிப்புடன் வந்து கொண்டிருந்தது தான் காரணம். அவரை பார்த்து கொண்டிருந்த நான் தற்செயலாக அண்ணாவை பார்த்தேன், அவன் என்னையே ஒரு மாதிரி பார்த்துகொண்டிருந்தான். ஒரு வேளை அண்ணியின் அண்ணாவை என்னையறியாமல் ஓவராக பார்த்துவிட்டோமோ. மனம் பதபதைத்தது. வலுக்கட்டாயமாக கூட்டத்தில் கண்களை திருப்பினேன்.
“வசந்திமா..”
“ம்…” அண்ணாவை நோக்கினேன்.
“நீ எவ்வளவு நேரமாக இங்கே நிற்கிறாய். அம்மாவையும் ஒரு எட்டு பார்த்துவிட்டு வா. தண்ணி , ஜூஸ் என்று ஏதாவது சாப்பிட வை சரியா”. என்று அங்கிருந்து கிளப்பினான் என் அருமை அண்ணன். எனக்கு எப்படி இருந்திருக்கும் நீங்களே சொல்லுங்க.
என்ன ஒரு நன்றி கெட்ட உலகமடா என்று பெருமி.. பெருமூச்சு விட்டு கொண்டு கிளம்பினேன் நான்.
17 comments செப்டம்பர் 17, 2009