Archive for நவம்பர், 2009

பிறந்த நாள் – 4.

                               இப்பதான் நடந்தது மாதிரி இருந்தது அதற்குள் நாலு வருஷம் ஆயிடுச்சி.இன்று (நவம்பர் 28) பிறந்த நாள் கொண்டாடும் கண்மணிக்கு  , கடவுளின் அருளால் என்றும் நல்லமாக வாழ பிரார்த்தனை செய்வதோடு,அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துகொள்கிறேன்.

       இந்த நாலு வருஷத்தில் என்னை பாசத்தால் நிரப்பி,எனக்கு நிறைய விஷயங்கள் கற்று கொடுத்த கண்மணிக்கு நன்றி.

   

கண்மணி ” நான் தான் உனக்கு அம்மா, என்னிய அம்மாண்ணு தான் கூப்பிடனும்”

  “சரி அம்மா”

  “அம்மாண்ணா ஏதாவது செய்து கொடுக்க வேண்டுமே? செய்து தரட்டுமா?”

  “சரி செய்யுங்க”

  “நூடுல்ஸ் பண்ணப்போறேன்”

  “எப்படி செய்வ?”

  “நூடுல்ஸ் போட்டு, கொஞ்சம் மஞ்சப்பொடி போட்டு, அப்புறம் உப்பு போட்டு, சீனி போட்டு, கிண்டுவேன்… அதான் நோடுல்ஸ்”

  “ஐயோ பாப்பா… உன்னோட ரெசிப்பிய கேட்டவுடனே அம்மாவுக்கு வயிறு ரொம்பிடுச்சு… அதனால எதுவும் செய்யவேண்டாம்” என்று சமாதானபடுத்துவதற்குள் ஒரு வழியாகிவிட்டேன்.

6 comments நவம்பர் 28, 2009

நளபாகமா?… பழிபாவமா?

                 இத்தனை வருஷம் ஆனப்பிறகும் நான் சாப்பிட கூப்பிட்டால் போதும் ஏதோ அனக்கோண்டாவுடன் விருந்திர்க்கு அழைப்புவிடுக்கிற மாதிரி என் வீட்டுக்காரர் ரெம்பவே பயப்படுவார். எல்லாம் என் சமையலை நினைத்து தான்.

                அதுக்காக எனக்கு சமையலே தெரியாது என்று நினைத்து விடாதீங்க. என் அம்மாவும் டீச்சராக இருந்ததால், நான் சிறு வயதிலேயே , அம்மாவுக்கு சிறு சிறு வேலைகள் செய்துகொடுப்பேன். அப்புறம்… எட்டாம் வகுப்பு படிக்கும் போதே, பொரியல், அவியல் என்று சின்ன சின்ன சமையலையும் செய்வேன். அப்புறம் அடையாறில் வேலை பார்க்கும் போது ஓரளவுக்கு சமையலையும் செய்திருக்கிறேன். இவ்வளவு முன் அனுபவம் இருக்கும் போது திருமணம் ஆன பிறகு எவ்வளவு முன்னேறியிருக்கவேண்டும்.

                       ஆனா பாருங்க ஒரு முன்னேற்றமும் கிடையாது. என்னுடைய தோழிகள் எல்லாருமே வாயில் நுழைவதற்க்கே கஷ்டப்படும் (பதார்த்தங்களை அல்ல)பெயருடைய அறுசுவை பதார்த்தங்களை எல்லாம் அசால்ட்டா செய்து அசத்தும் போது … நான் மாத்திரம் அதே சாம்பார், பருப்பு, பொரியல் என்று அல்லாடும்போது ரெம்பவே அவஸ்த்தையாக இருக்கும்(அது கூட அப்பப்ப காலைவாரிவிடும்).

                     முயற்ச்சி பண்ணுவது தானே என்று நீங்கள் எண்ணலாம். முயற்ச்சிபண்ணினேனே. நான் முதலில் ஒரு ஜவ்வரிசி வடை செய்து , அந்த அனுபவத்தை ஏற்கனவே எழுதியிருக்கிறேன். அதுபோல் சுசியம் செய்ய ஆரம்பித்து பொங்கலாகி… பின் பாயாசம் ஆனாது,   கேக் செய்ய ஆரம்பித்து பிஸ்கட் செய்தது, பிரியாணி செய்ய ஆரம்பித்து வெஜிட்டபிள் பொங்கலாய் முடித்தது என்று … ஏகப்பட்ட அழிச்சாட்டியம் பண்ணி என் வீட்டுக்காரரை எலியாக்கி கிலியை அதிகப்படுத்தியதுதான் மிச்சம்.

              அதை விட கொடுமை என்னவென்றால் என் தோழி(?) என் புலம்பலை கேட்டு விட்டு “எதுக்கு இப்படி கவலைபடுறீங்க… எவ்வளவு நல்லா சாம்பார் வைக்கிறீங்க… ஆம்லெட் போடுறீங்க… கடலை வறுக்குறீங்க…  சுடு தண்ணி வைக்கிறீங்க….” என்று ஆறுதல் சொல்லுறாங்க. என்னுடைய reaction னை பார்த்துவிட்டு “he .. he… நல்லப் பண்ணுறதை தானே சொல்லமுடியும்” என்று சிரிப்பு வேற.

              எனக்கு மாத்திரம் ஏன் இப்படி நடக்குது(அதுவும் திருமணமான பிறகு) என்று நிறைய நாள் , கிச்சன் எல்லைக்கே சென்று யோசித்துபார்த்தும்…. பதில் இல்லை. இப்படியே விட்டால் என்னாகிறது என்று கொஞ்சம் தீவிரமாக விசாரித்ததில் , அவங்க வீட்டில் கிடைத்த தகவல் இது.

சிறிய கொசுவர்த்தி.

******************

“அம்மா இதென்ன புதுசா செய்திருக்கீங்க”

“ஆமாப்பா உனக்கு பிடிக்குமேன்னு காலிப்ளவர் பஜ்ஜி செய்தேன் பிடிச்சிருக்கா”

“ம்…. ஆனா கொஞ்சம் காராம் அதிகமோன்னு தோணுது”

” உனக்கு காரமே பிடிக்காது என்று நான் காரமே போடல. அப்புறம் எப்படிடா காரம் வரும்” அம்மா காரமாக கேட்க ….

அதற்கு பதிலே இல்லை .

 —–

 ”உனக்கு பிடிக்குமேன்னு நார்த்தைங்கா ஊருகாய் பண்ணினேன், சாப்பிட்டு பாரேன்”

 சாப்பிட்டு பார்த்துவிட்டு, “ம்… கொஞ்சம் சீரகம் அதிகமாயிருக்குமோ”

 ”சீரகம் எப்படி இருக்கும் என்றாவது உனக்கு தெரியுமாப்பா” என்று நொந்து போய் கேட்க

 , “he….he….” என்ற சிரிப்பு தான் பதில்

. —–

           இப்படி ஏதாவது ஒரு குறையை கண்டிப்பாக சொல்லவேண்டும் என்ற தீவிரமான கொள்கையால் , ரெம்பவே டென்ஷனான அம்மா ஒரு நாள்,

       “டேய் (அம்மா கூப்பிட்டாங்க, நான் கூப்பிடுவேனா?) உனக்கு சமையலே வராத பொண்ணு தான் வந்து வாய்க்கபோறா பாரு” என்று சாபம் கொடுத்துவிட்டார்.

 ****************************

              அந்த வரத்தை வாங்கியவர் வேறு யாருமில்லை என் வீட்டுக்காரர் தான் என்று நீங்கள் சரியாக கணித்திருப்பீர்கள். இப்படியெல்லாம் வரம் வாங்கி… எனக்கு தெரிந்த சமையலைகூட என்னிடமிருந்து விரட்டிய புண்ணியம் பண்ணிவிட்டு , என்னிடம் அறுசுவை சமையலை எப்படி எதிர்பார்க்கலாம் ? நீங்களே சொல்லுங்க.

                  அதனால அம்மா சமையலை சும்மா சும்மா கேலி பண்ணாம ஒழுங்கா சாப்பிடீங்கன்னா, நளபாகம் செய்கிற நல்ல மனைவி கிடைப்பாங்க இல்லாட்டி…. என்னை மாதிரி அப்பாவி பொண்ணுங்களை இம்சை பண்ணுகிற பழி பாவம் தான் கிடைக்கும். உஷாரா இருந்துக்கோங்க..

11 comments நவம்பர் 12, 2009

ஒருவழியா திறந்துட்டாங்க….

 அப்பாடி ஒரு வழியா கண்மணிக்கு ஸ்கூல் ஆரம்பிச்சிட்டாங்க. கண்மணிக்கே விடுமுறை பயங்கர போர் அடித்துவிட்டது, முகமெல்லாம் சிரிப்பாக கிளம்பிட்டாங்க.

IMG_0058

 நீண்ட விடுமுறைக்கு அப்புறம் பள்ளிக்கூடத்துக்கு கிளம்புறாங்களே என்று விடுப்பு சொல்லிவிட்டு நானும் கூடப்போனால்,

 ”அம்மா நீங்க எதுக்கு என் கூட வர்றீங்க? நான் தனியா போயிக்குவேன்.” என்று கேள்வி கேட்கிறாங்க.
 
 ”பாப்பா, முதல் நாளு இல்ல… அதான் ,அப்படியே  உங்க டீச்சரிடமும் பேசலாமே என்று தான்”

 ”நான் ஒண்ணும் பாப்பா இல்ல. ” Big girl”. பெரிய அக்கவாயிட்டேன். இனிமே அக்கான்னு தான் கூப்பிடணும்” பயங்கர கண்டிப்புடன்.

 ”ஓ…. சரி சுண்’டக்கா’ “  

*************
  கண்மணி பள்ளிக்கூடத்துக்கு போயிற்று வீட்டுக்கு வந்தால் மணி ஒன்பதுதான் ஆகியிருந்தது. என்ன செய்யலாம் என்று யோசித்தபோது, எங்களுடைய கடிதம் (திருமணத்திற்க்கு முன்னால் எழுதியது)நியாபகம் வந்தது. முன்னாடியெல்லாம், என் வீட்டுகாரருடன் அடிக்கடி சண்டை போடுவேன்( வேறு பொழுதுபோக்கு?). அப்புறம் அவருக்கு ரெம்ப கோபம் வந்துவிட்டால் போதும், உடனே அந்த கடிதங்களை எடுத்து சத்தம் போட்டு வாசிக்க தொடங்கிவிடுவேன். (கல்யாணத்துக்கு முன்னாடி எழுதின கடிதம் எப்படி இருக்கும் என்று நான் தனியாக சொல்லவேண்டியதில்லை)

  ரெம்ப நாள் ஆகிவிட்டது… அந்த கடிதங்களை எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். எப்போதும் அவர் எழுதிய கடிதத்தை தான் வாசிப்பேன், இன்று நான் எழுதிய கடிதங்களையும் சேர்த்து வாசிக்க ஆரம்பித்தேன்.

  ஆனாலும் எனக்கு ரெம்பவே தைரியம் தான். என்னுடைய எல்லா கெட்ட பழக்கங்களையும் ஒரு கடிதத்தில் பட்டியல் போட்டு கொடுத்திருக்கிறேன். ம்… அன்று அந்த விஷயங்கள் எல்லாமே விளையாட்டாக இருந்தது , திருமணமானபிறகு அதெல்லாம் சீரியஸ்(!) விஷயமாகிவிட்டது. அப்படி நினைத்து கொண்டேனே தவிர… (இன்றும் அந்த கெட்ட பழக்கங்கள் எல்லாம் மாறாமல் அப்படியே தான் இருக்கின்றது).

   ரெம்ப நேரம் தனியாக சிரித்துகொண்டே இருந்தேன். என்ன தான் இமெயில், தொலைபேசி என்று வந்தாலும், கடிதங்களுக்கு இணையாகாது. நம்மையே புதுபித்துகொள்ள வைக்கும் சுவையான அனுபவம்

14 comments நவம்பர் 8, 2009


அண்மைய இடுகைகள்

பக்கங்கள்

Blogs

அண்மைய மறுமொழிகள்

Blog Stats

Blogroll

 

நவம்பர் 2009
தி செ பு வி வெ ஞா
« அக்    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

மேல்