Archive for அக்டோபர், 2010
Teen…Teen… Teenage.
என்னை ஒரு தொடர் பதிவுக்கு மந்திரன் தம்பி அழைப்புவிடுத்திருந்தார். டீன் ஏஜ் என்றால் எழுதுவதற்க்கு நிறைய உண்டு என்றாலும்… இரண்டு விஷயங்கள் மறக்கமுடியதவை. அதை எழுதலாம் என்று பார்த்தால் …கொஞ்சம் சோம்பேறித்தனம் ஒரு காரணம் என்றாலும் அதையும் தாண்டியும் காரணம் இருக்குது. அதத்தான் சொல்லப்போறேன். ….
எப்பவும் ஏதாவது ஒரு பாட்டை பாடி கொண்டே அலைவது என்னுடைய பழக்கம். என்னுடைய பாசமலர்கள் என்னவெல்லாமோ செய்து பார்த்தார்கள் இந்த பழக்கத்தை ஒழிக்க. ம்…. ஒன்றுமே பலிக்கவில்லை. படிக்ககிற நேரத்தில் பாட்டு படிக்க முடியாதே என்று எப்பவும் என்னை படிக்க சொல்ல ஆரம்பித்தார்கள். படிக்கிறது எனக்கு பிடிக்காத விஷயமென்றாலும்,Maths எனக்கு ரெம்ப பிடிக்கும். அதனால எப்ப படிக்க சொன்னாலும், ஜாலியா பாட்டுபாடிக் கொண்டே maths போட ஆரம்பித்துவிடுவேன்.
கடைசியில் தீவிரமாக சதி ஆலோசனை நடத்தி வீட்டில் ஒரு எழுதப்படாத சட்டமே வந்திருச்சி.. என்னன்னா யாராவது வீட்டுல படிச்சிட்டு இருந்தாங்கன்னா.. மற்றயாரும் அவங்க disturb பண்ணுற மாதிரி சத்தம் போடக்கூடாது. அப்படி மீறி சப்தம் போட்டா அவங்க தலையில ஒரு கொட்டு வைக்கலாம். ஏற்கனவே எல்லாரும் என் மேல கொலவெறியில இருக்கும் போது…. என் தலை கொடுத்தால் என்னவாகும் என்று உங்களுக்கே புரிந்திருக்கும் . Risk எடுக்க எனக்கு ரெம்பவே பயம் வந்துவிட்டது . அப்புறம் என்னாச்சி… நான் எப்ப பாட்டு பாட வாயை திறந்தாலும்… என்னக்கு ரெண்டு கொட்டு கொடுக்கவாது எங்கண்ணன் படிக்க ஆரம்பிச்சிடுவான்.
இப்படி ஒரு பாடகியை அநியாயமாக படாதபாடு படுத்தியதால்.. இவ்வையகம் ஒரு பொல்லாத பாடகியை இழந்துவிட்டது என்று இனிமேல் கவலைப்பட்டு என்ன புண்ணியம்?.
எனக்கு நினைவு தெரிந்து ஒரு பாட்டியும் தாத்தாவும் எனக்கு இல்லை. அதனாலோ என்னவோ எனக்கு பாட்டி தாத்தா என்றால் ரெம்ப பிடிக்கும். எங்க தாத்தா வீட்டில் நாங்க இருந்தப்ப , பக்கத்து வீட்டில் எங்க சித்தி பாட்டி இருந்தாங்க. எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் அங்க போய் பாட்டி கூட பல்லாங்குழி, தாயம் எல்லாம் விளையாடுவேன். அது போக வீடு கூட்டி குடுக்கிறது, அம்மியில் அரைத்து கொடுப்பது என்று சில பல எடுபிடி வேலைகளையும் செய்து கொடுப்பேன்.
அவங்களுக்கு நிறை பிள்ளைங்க உண்டு என்றாலும் அவங்க எப்பாவது தான் வந்து போவார்கள். ஆனால் பாட்டி ஒருத்தருக்க வீட்டிர்க்கும் போகமாட்டார்கள். கேட்டால், கடைசி வரைக்கும் யார் வீட்டிற்க்கும் போய் நிற்கும்படி கடவுள் என்னை விடமாட்டார், அதற்க்குள் என்னை யாருக்கும் எந்த கஷ்டமும் தராமல் எடுத்திருவாரு என்று ஒரு பதில் தருவாங்க.
சரி.. சரி அதனால என்னை பற்றி நல்ல கற்பனை எல்லாம் வளத்துக்காதீங்க ஏன்னா.. ஒரு பக்கம் இப்படி இருந்தாலும் இன்னொரு பக்கம் எலியும் பூனையுமா இரண்டு பேரும் எதுக்குத்தான் சண்டை போடவேண்டும் என்றில்லாமல் பொழுதன்னைக்கும் சண்டை போட்டுகொள்வோம்.
ஒரு நாள் இப்படி தான் என்னை கர்ணகொடூரமாக திட்டியதோடு நிற்காமல் கொஞ்சம் காப்பி கொண்டு வா என்று ஏவல் வேறு. முனங்கி கொண்டே போய் காப்பி வைத்திருந்த பாத்திரத்தை பார்த்தால்…மே மாதவெயிலுக்கு சுகமாக ஜில்லென்று இருந்த கருப்பட்டி காப்பியில் ஜாலியா பிக்னிக் வந்த மாதிரி அவ்ளோ கடிஎறும்பும் மிதந்தும் நீச்சலடித்தும் விளையாடி கொண்டிருந்தது.
இருந்த கடுப்பில் அதை அப்படியே கப்பில் ஊற்றி பாட்டியிடம் கொடுத்துவிட்டேன். ஒரு வாய் வைத்தது தான் …..திடீரென்ற இடமாற்றத்தால் அந்த எறும்புகள் எல்லாம் பாட்டியின் நாவை பதம் பார்க்க..ஆ….. அம்புட்டுதான்… பாட்டியின் முகம் அஷ்டகோணலாக மாறி.. த்தூ…த்து.. என்று துப்பி என்னை பார்வையாலே எரித்துவிட்டார்கள். நான் ஒரு வேகத்தில் கொடுத்துவிட்டாலும்.. அவங்க முகத்தில் வேதனையை பார்த்தவுடன் ரெம்ப கஷ்டமா போச்சி.. அதையும் இதையும் கொடுத்து… கவனிக்கவேயில்லை என்று புழுகி… அப்பப்பா.
நிறைய நாள் நினைப்பேன் அவங்ககிட்ட உண்மையை சொல்லணும் என்று.. ஆனா கொஞ்சம் பயம் சொன்னால் குதறிவிவாங்க என்று. இப்படி நான் நேரம் பார்த்துக்கொண்டிருக்கும் போது ஒரு நாள் அவங்க சொன்ன மாதிரியே தூங்கபோனவங்க நிரந்தரமா தூங்கிட்டாங்க. இப்ப கூட அந்த பாட்டி நியாபகம் வந்தால் எனக்கு வருத்தமாக இருக்கும்… இப்ப வருத்தப்பட்டு என்ன புண்ணியம் நீங்களே சொல்லுங்க.
அதான் நான் இதை பற்றி எழுதவில்லை.
சரி இதில் யாரையாவது கோத்து விடவேண்டுமாமே,
அன்பழகன், பர்வதபிரியா, கனகு…. மூன்று பேரையும் கோத்துவிடுகிறேன். என்னை மாதிரி ஏதாவது காரணம் சொல்லாம நீங்களாவது ஒழுங்கா எழுதுங்க.
எந்திரனும் நானும்.
தினமும் கண்மணியை தூங்கவைக்கிறேன் என்று எட்டு மணிக்கு அவளுடன் படுத்து.. அப்படியே தூங்கி அப்புறம் நடுனசியில் முழித்து பிசாசு மாதிரி அலைவது வழக்கமாயிற்று. அதனால் நேற்று அவள் தூங்கியவுடன் கஷ்டப்பட்டு எழுந்துவிட்டேன்.
அப்புறம் என்ன செய்ய… பொழுதே போகவில்லை. கொஞ்சம் டி.வி. அப்புறம் புத்தகம் என்று நேரத்தை கடத்திவிட்டு… computerல் உக்காந்து ஏதாவது படம் பார்க்கலாம என்று பார்த்தால் அட.. நம்ம எந்திரன்.
கண்மணியின் உபயத்தால் அடுத்த வாரம் போகலாம் என்று முடிவெடுத்திருந்தாலும்… அந்த படத்தை பார்ப்பதற்க்கு முன் நம்ம சன் டிவியின் வழியாக மக்கள் எல்லாரும் எவ்வளவு training எடுத்திருகாங்கன்னு எனக்கு தெரியும். எங்கள் வீட்டில் கேபிள் கிடையாது என்பதால் அதெல்லாம்(sun tv) நான் பார்ப்பது கிடையாது. Just கேள்வி ஞானம் தான்.
நம்ம இப்படி ஒரு preparationனும் இல்லாம போனா நல்லாயிருக்காதுன்னு.. எந்திரனை பார்க்க ஆராம்பித்தேன். படத்தை எனக்கு ரெம்ப விமர்சனம் பண்ண தெரியாது…. அதற்க்கெல்லாம் கலை கண் வேண்டுமாமே?
இருந்தாலும் படத்தில் ரஜினியை தவிர வேறு யாராவது நடித்திருந்தால் இப்படி படம் ஓடியிருக்குமா என்று தெரியவில்லை. படத்தில் ப்ளஸ் பாயின்ட் ரஜினி … அப்புறம் ரஜினி… அப்புறம் ரஜினிதான்.
மைனஸ் பாயின்ட் ரஜினி படத்துக்கே உரிய charm இல்லை. ஒருவேளை தியேட்டரில் பார்த்தால் இன்னும் கொஞ்சம் நல்லாயிருக்குமோ?
படத்தை பார்த்துவிட்டு தூங்க போனால்… தூக்கத்தில் ஒரே ரோபோ ரஜினியின் தலையும்… தகர டப்பாவின் சப்தமும்… ஏகத்துக்கு வந்து ரெம்ப நேரம் தூங்கமுடியவில்லை. dot.

அண்மைய மறுமொழிகள்