Posts filed under ‘கதையில்லை நிஜம்’
ஈரமான ரோஜா (கதையில்லை நிஜம்)
நான் சென்னையின் ஒரமாக ஒட்டிக் கொண்டிருந்த இந்த ஊருக்கு மாற்றலாகி வந்து மூன்று மாதமே ஆகின்றது. அதற்க்குள், அத்தனை மாணவர்களையும் எனக்கு நன்பர்களாக மாற்றியிருந்தேன் .
“டிங்.டிங்.டிங்.டிங்.”
அட்டென்டன்ஸ் நோட்டை திறந்து ஒவ்வொரு பெயராக அழைக்க ஆரம்பித்தேன்.
” அம்பிகா”
” உள்ளேன் டீச்சர்”
“அழகேசன்”
” உள்ளேன் டீச்சர்”
“பாலகணேஷ்”
“இன்னும் வரவில்லை டீச்சர்”
கோபத்தை அடக்கிக் கொண்டு தொடர்ந்தேன். இந்த மூன்று மாதத்தில் ஒரு நாள் கூட பாலகணேஷ் நேரத்திற்கு வந்ததுகிடையாது. ஆனால் படிப்பிலும், குணத்திலும் படு சுட்டி. அதனால் கோபிக்கவே மனது வராது. இன்றைக்கு எப்படியாவது கேட்டுவிடவேண்டும் என்று மனதிற்குள் குறித்துக்கொண்டேன். வழக்கம் போல் அரைமணி நேரம் தாமதமாக வந்தான்.வகுப்பு முடிந்தபிறகு தனியே அழைத்து,
“என்ன பாலகணேஷ் எப்படி இருக்க?”
“நல்லாயிக்கேன் டீச்சர்”
“வீட்டில் அம்மா, அப்பா எல்லாரும் நல்லாயிருக்காங்களா?
“நல்லாயிருக்காங்க டீச்சர்”
“பின்ன எதுக்கு தினமும் லேட்டா வர்றீங்க சார்” -கோபத்தோடு கேட்டேன்.
“ “
“ம்… என்ன பதில் சொல்லமாட்டீங்களா?” கடுப்புடன் கேட்டேன்.
“அப்படியெல்லாம் இல்ல டீச்சர்….
எங்க வீடு , அந்த சாக்கடை ஆத்துக்க அந்தப்பக்கம் இருக்குது டீச்சர். பாலம் ரெம்ப தூரமாக இருப்பதால் நான் ஆத்துக்குள்ள இறங்கி தான் கடந்து வருவேன். துணியெல்லாம் சாக்கடையில் நனைந்துவிடும், அதனால பைப்பு தண்ணியில அலசி போட்டுக்குவேன். துணி காயரதுக்கு நேரமாயிடும் டீச்சர். பசங்க கிண்டல் பண்ணுவாங்கன்னு யாரிடமும் சொன்னதுகிடையாது. யாரிடமும் சொல்லிடாதீங்க டீச்சர்…” குற்றவுணர்வோடு சொன்னான்.
எனக்கு என்ன சொல்லுவது என்றெ தெரியவில்லை. மனசெல்லாம் கனத்தது.
“தினமும் இப்படி தண்ணியில் நனைந்து உடம்புக்கு ஏதாவது வந்தால் என்ன பண்ணுவ?. தூரமென்றாலும் பாலம் வழியாக வா சரியா?”
“என்னோடு குட்டி தங்கச்சியும் வருவா டீச்சர். அவ்ளோ தூரம் நடந்துகிட மாட்டாள்”
“அவளும் சாக்கடையில் நடந்தா வருவா?” அதிர்ச்சியுடன் கேட்டேன்.
“இல்ல டீச்சர் அப்படி விடுவேனா?
நாலைந்து பலகை சேர்த்து கட்டி, அதன் மேல் அவளை ராணி மாதிரி உட்கார வைத்து இழுத்துகிட்டு வருவேன்.“ என்று பெருமையுடன் கூறினான்.
நான் மெய்சிலிர்த்து நின்றேன்.

அண்மைய மறுமொழிகள்