Posts filed under ‘கதை’
அழகிய ராட்சஸி……..
இரவு மணி பத்தடித்து ஓய்ந்ததும் கடையை இழுத்து மூடிவிட்டு, ரெம்ப நாள் இழுத்தடித்த குமாரசாமி செட்டில் பண்ணிய பணத்தை எடுத்து கொண்டு,வீட்டை நோக்கி வண்டியை செலுத்தினேன்.
அது பெரிய ஆரவாரத்துடன் கிளம்பியது. இந்த மாதம் கண்டிப்பாக , வண்டியை மாற்றிவிட வேண்டும். அது போடுற சத்தம் எனக்கே சகிக்கவில்லை, மற்றவர்களுக்கு சொல்லவேண்டுமா, ஏதோ கேட்கக்கூடாததை கேட்டுவிட்டவர்கள் போல் முகத்தை சுளித்து கொள்வார்கள். ஆள் அரவமே இல்லாத ரோட்டில் யமதர்மனை போல் கர்ஜித்துக் கொண்டு சென்றதை பார்த்து, ‘உனக்கு பாசக் கயிறு ரெடி பண்ணிட்டேன்’ என்று மனதிற்க்குள் நினைத்துகொண்டேன்.
வண்டி திடீரென்று நின்றதால் என்னுடய சிந்தனையும் பட்டென்று நின்றது. எனக்கு இது பழக்கமான விஷயமானதால் அலட்டிக்கொள்ளாமல், வண்டியுடன் காலாற நடக்க ஆரம்பித்தேன். குறுக்கு வழியாக நடந்தால் போலீஸ் ஸ்டேஷனுக்கு பத்து நிமிடத்தில் போய்விடலாம். அங்கிருந்து சேகருடன் வீட்டுக்கு போகலாம்.
அப்போது தான் அங்கே விறுவிறுவென்று என்னை நோக்கி நடந்து வந்த பெண்ணை கவனித்தேன். நிற்கவா…. அல்லது நடக்கவா என்று பட்டிமன்றம் நடத்திக் கொண்டு மெதுவாக ஊர்ந்து சென்ற என்னை சில நிமிடங்களில் நெருங்கி விட்டாள். தேவதை போல் இருந்ததால், ஒரு வேளை கதைகளில் வருவது போல் ஏதாவது முனிவரின் சாபத்தால் பூமிக்கு வந்த தேவதையாக இருக்குமோ என்று என் மனம் சம்பந்தமே இல்லாமல் கற்பனையில் கதை எழுதியது. இன்னும் நெருங்கி வந்த போது….. இந்த முகத்தை எங்கோ பார்த்திருக்கிறோமோ என்று தோன்றியது.
“ Excuse me Sir. பழைய பஸ் ஸ்டாண்டுக்கு எப்படி போறதுன்னு சொல்ல முடியுமா? நான் ஊருக்கு புதுசு” என்றவளை நான் வியப்புடன் நோக்கினேன்.
ஏதோ பக்கத்து தெருவுக்கு வழி கேட்பவளை போல் நின்றவளை பார்த்து பரிதாபமாக இருந்தது. நிஜமாகவே ஊருக்கு புதுசு தான் போல, “நடக்கிற தூரம் இல்லீங்க, ஆட்டோவில் தான் போகமுடியும், இந்த நேரத்தில் ரெம்ப அபூர்வமாகத்தான் இந்த ரோட்டில் பஸ் வரும்” என்றேன்.
” நான் வந்த பஸ், புது பஸ் ஸ்டாண்டுக்குத்தான் போகுமென்றும், பாலம் ஸ்டாப்பில் இறங்கினால் பழைய பஸ்டாண்டுக்கு போகலாம் என்று கண்டக்டர் சொன்னதால் இறங்கினேன். எனக்கு ஆட்டோவில் இராத்திரி வேளையில் தனியாக செல்ல பயம், கடைத்தெருதானே ஆள் அரவம் இருக்கும் நடக்கலாம் என்று நடக்க ஆரம்பித்தேன். ஆனால் நேரம் ஆக ஆக ஆள் அரவம் குறைந்து கொண்டேயிருப்பதால்… “
”பரவாயில்லை இன்னும் கொஞ்சம் தூரம் நடந்தால் ஒரு ஆட்டோ ஸ்டாண்டு வரும் ,எனக்கு தெரிந்தவர்கள் தான்.. பயப்படவேண்டாம்… நான் கூட வருகிறேன்… அங்கேயிருந்து ஆட்டோவில் செல்லலாம் ” என்று அவளுடன் நடக்க ஆரம்பித்தேன்.
அவள் தூரத்தில் வரும் போது சண்டித்தனம் செய்த மனது, இப்போது ஏதோ கடமை கண்ணியம் என்று நல்ல பிள்ளையாக வாலை சுருட்டி கொண்டது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.இது ஒரு பக்கம் இருந்தாலும்…ஒரு ஓரமாக என் மனதிற்க்குள் இந்த பெண்ணை எங்கு பார்த்திருக்கலாம் என்ற ஆராய்ச்சியை நடத்தி கொண்டிருந்தது. ம்…. ஒருவேளை கல்யாணத்திற்க்கு பொண்ணு பார்க்கிறேன் என்று அம்மா கண்டபடி கடைவிரித்திருக்கும் புகைப்படத்தை பார்த்ததால் வந்த பிரம்மையோ.
”சார், இன்னுமொரு உதவி செய்ய முடியுமா? எனக்கு நூறு ரூபாய்க்கு சில்லரை வாங்கி தரமுடியுமா ?”
என்னிடம் சில்லரை இல்லை. ரோட்டுக்கு அந்தப் பக்கம் , ஒரு கடை உயிருடன் இருப்பது தெரிந்தது. “அந்த கடையில் சில்லரை கேட்டு பார்க்கிறேன், நீங்கள் இங்கு பயமில்லாமல் நிற்பீர்களா? “
”ஒன்றும் பயமில்லை சார்…. “
கடையில் சென்று சில்லரை வாங்கிகொடுத்துவிட்டு, இருவரும் நடந்தோம். என்னவெல்லாமோ என் மனம் அவளிடம் பேச ஆசைப்பட்டது…. ஆனால் ஒன்றுமே வெளியே வரவில்லை..
அப்பப்ப ஓரக்கண்ணால் அவளை அளவிட்டபடியே மிதந்தேன். கலந்த தலை முடி எனக்கு கவிதை மாதிரியும் , மடிப்பு விழுத்த சேலையோ மாட்ர்ன் ஆர்ட் போலவும் என்னை சொக்கவைத்தது.
அவளிடம் இருந்து வந்த மெல்லிய மணமும், ஒயிலான நடையும், சிணுங்கி கொண்டு வந்த கொலுசு சப்தமும் என்னை அளவுக்கதிமாக மயக்கி ஒரு மோகன நிலைக்கு தள்ளியது. பார்த்தவுடனே இப்படி ஒரு பெண் தன்னை பாதிப்புக்கு உள்ளாக்கியது எனக்கு ஆச்சர்யத்தை கொடுத்தாலும் அதை ரசிக்கவே செய்தேன்.
சட்டென்று வந்த ஆட்டோ standடினை சபித்த படி, அவளை ஏற்றிவிட்டு…. பெயரை கேட்க மறந்துவிட்டேனே.. என்று நொந்து கொண்டாலும்.. இனிமையான அவள் நினைவுடன்… சேகரை பார்க்க சென்றேன்.
வண்டியை தள்ளி கொண்டு சென்ற என்னை பார்த்த ஏட்டு , இன்ஸ்பெக்டர் சேகருடைய நண்பன் என்ற ஒரே காரணத்திற்க்காக சிரிப்பை அடக்கியது வெளிப்படையாக தெரிந்தாலும்..சட்டை பண்ணாமல், என்னுடைய பையை எடுத்துக்கொண்டு சேகரிடம் சென்றேன் .
“என்னடா மாப்பிள காளை…. கவுத்திடுச்சா?” என்று வழக்கமான கிண்டலுடன் வரவேற்ற நன்பனை பார்த்து சிரித்து விட்டு,
“கிளம்புறியா இல்ல இன்னும் வேலை இருக்கா?”
”இல்லடா.. முடிஞ்சாச்சு .. கொஞ்சம் வெயிட் பண்ணு … நான் இதோ வந்து விடுகிறேன்” .
அவன் இருக்கை அருகே இருந்த புகைப்படங்களை நோட்டம் விட்டபடியே உக்கார்ந்து இருந்த நான், ” தேடப்படும் முக்கிய குற்றவாளிகள்” என்று ஒட்டப்பட்டிருந்த அந்த புகைப்படத்தை பார்த்து அதிர்ந்து , “அடப்பாவி……. உன்னை இங்கேயா பார்த்திருக்கேன்” என்று என்னை அறியாமல் என் வாய் முணுமுணுத்ததும் அல்லாமல், அனிச்சையாக என் பையையை திறந்து பார்த்ததும் என் தலையும் அதிவேகமாக சுற்ற ஆரம்பித்து.
இந்த அண்ணன்களே இப்படித்தானோ
வகை : கதை, சிறுகதை.
அதிகாலையிலே எங்கம்மா சுறுசுறுப்பாக எங்களையெல்லாம் தூங்கவிடாமல் பிராண்ட ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களுடைய ஒரே ஒரு அக்காவுடைய ஒரே புத்திரனாகிய திருவாளர் சுந்தர் திருமணம் தான் இன்று.
நாங்களும் இந்த நாளை ஆவலுடன் எதிர்பார்த்துகொண்டிருந்ததால் அம்மாவிற்க்கு பொது மன்னிப்பு வளங்கப்பட்டிருந்தது. இருந்தாலும் எதையாது சாக்கு சொல்லி கொஞ்ச நேரம் துங்கினால் நல்லது போல் தோன்றியதால் மெள்ள அண்ணாவின் அறையினுள் எட்டி பார்த்து அதிர்ந்துவிட்டேன். எப்போதும் எதையாது படித்து கொண்டு, பெரிய சிந்தனாவாதி மாதிரி யோசிக்கிறேன் என்று சதாகாலமும் சிடுமூஞ்சியாய் அலைபவன் சிகை அலங்காரத்தில் ஒன்றியிருந்தான். சரி அம்மாவுடைய வியாதி இவனையும் பாதித்து விட்டது என்று அப்பாவின் அறைக்குள் எட்டி பார்த்தேன்.
அப்பாவின் அறை என்பதைவிட புத்தக கொடௌன் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்.அவர் அப்போதைக்கு என்ன புத்தகம் படித்து கொண்டிருக்கிறார் என்று தெரியவெண்டுமென்றால் , அவருடைய நடவடிக்கையை ஒரு நிமிஷம் உற்று பார்த்தாலே கண்டுபிடித்துவிடலாம். எதற்கெடுத்தாலும் கெக்கே பிக்கே என்று சிரித்துகொண்டிருந்தால் ஏதாவது “சிரிப்பின் சிறப்பு” மாதிரி புத்தகத்தை படித்துகொண்டிருப்பார். சந்தையில் உள்ள பாகற்க்காய் எல்லாம் வீட்டிற்க்கு இடம்பெயர்ந்தால் “பாகற் காயின் பலன்” களை படித்திருப்பார். மூச்சை அடக்கி மூலையில் விறைப்பாக உட்கார்ந்திருந்தால் சந்தேகமேயில்லாமல் தியானம் சம்பந்தமாக யாராவது கொம்பு சீவிவிட்டிருப்பார்கள்.ம்.. மேஜையில் மெழுகுவர்த்தி எரிந்து கொண்டிருந்தது. பத்தடி தள்ளி அப்பா அமர்ந்து கண்களை விரித்து உருட்டி , மெழுகுவர்த்தியின் ஜூவாலையை மிரட்டி கொண்டிருந்தார். இப்ப நான் உள்ளே நுளைந்தேன் என்றால் என்னைப்போல் …. யாரும் இருக்கமாட்டார்கள்.
ஒன்பது மணிக்குத்தான் வீட்டிலிருந்து புறப்படுவதாக கூறியிருந்தார்கள். ஒரு நொண்டிச்சாக்கும் கிடைக்காததாலும், அஞ்சு மணிக்கே என் அம்மாவின் அலம்பல் ஆரம்பித்துவிட்டதை நினைத்து இனிமேல் புண்ணியமில்லை என்பதாலும், நானும் கிளம்ப ஆரம்பித்துவிட்டேன்.
***************
நானும், என்னுடைய அத்தை பெண்கள், சித்தி பொண்ணு என்று ஒருக் கூட்டமாக திருமணக்கோஷ்டியை மேய்ந்து பார்த்தும் , எங்களுக்கு பொழுது போக்க ஒருத்தரையும் பார்க்கமுடியவில்லை. அதனால், எங்களுக்குள்ளே கடித்து குதறிக் கொண்டிருந்தோம். திடீரென்று சாந்தி என்னை நிமிண்டி, கண்ணை அசைக்க , அந்த திசையில் பார்த்தேன். என் அருமை அண்ணன், மாப்பிள்ளை தோழனாக மேடையில் ஏறியவன், லிட்டர் லிட்டராக மணப்பெண் தோழியிடம் வழிந்து கொண்டிருந்தான். அடப்பாவி அதுவும் இப்படியா பகிரங்கமாக பழகிப்பார்க்க கிழம்புவது!.
கொஞ்சம் ஓரமாக போய்.. அண்ணாவை அப்படியே அமுக்கி, ஓரங்கட்டி,
”என்னாது இது?” என்றேன்.
”எது தங்கச்சி?” என்றான் காது வரை சிரித்து கொண்டு.
”ம்.. மண்ணாங்கட்டி” என்றேன் கோபத்துடன்.
” மண்ணாங்கட்டி ஒழிக….” என்றான் விரைப்புடன்.
”ஜோக்கு?…மானம் போகுது .. அங்கப்பாரு ஒரு கும்பலே உன்னை பார்த்து சிரிக்குது “.
” ஹி…ஹி.. சரி சரி கொஞ்சம் அடக்கி வாசிக்கிறேன். ஆனா…. தங்கச்சி வருங்கால அண்ணியை நல்லா பார்த்துக்கோ.” என்று ஒரு பிட்டை போகிறப் போக்கில் போட்டான்.
*******************
இனிதே கல்யாணம் நடந்த பிறகு, அண்ணாவின் முறை ஆனதால், அம்மா பெரிய வேட்டைக்கே தயாராகிவிட்டார்கள். அண்ணாவோ, ” அம்மா எனக்கு என்று தனியாக எந்த விருப்பமும் கிடையாது. உங்களுக்கும் முக்கியமாக தங்கச்சிக்கும் பிடித்தால் போதும் ” என்றான். என்னை பார்த்து ஒரு நமட்டு சிரிப்பு வேற.
ஆனால் அப்பாவி அம்மாவோ அந்த டயலாக்கில் ஐஸ்க்கிரீமாக உருகி, அதை வேற எல்லாரிடமும் சொல்லி பெருமைபட்டுக்கொண்டார்கள்.படிப்பு முதற்கொண்டு நிறைய விஷயங்களில் அண்ணன் பெரியக் கில்லாடியாக இருப்பதை முதன் முறையாக அறிந்துகொண்டேன். இந்த காதல் கத்திரிக்காய்களில் எல்லாம் ரெம்ப நம்பிக்கை இல்லாவிட்டாலும், திடீரென்று சுனாமி போல் வந்து அண்ணனை கன்னா பின்னாவென்று தாக்கியதை பார்த்தபிறகு, நமக்கும் அந்த தொற்று வியாதி ஒருவேளை வந்துவிட்டால் என்ன செய்வதென்று ஒரு முன்னெச்சரிக்கை காரணமாக நான் அமைதியாக இருந்தேன்.
அப்பா கரும சிரத்தையாக யோகாவில் ஐக்கியமாக இருக்க, அம்மா பெண்களின் ஜாதகத்தை பலவாறாக அலசி ஆராய்ந்து கொண்டிருந்தார்கள். ஒரு நாள் நான் சுந்தர் அண்ணாவின் கல்யாண ஆல்பங்களை பார்த்தவாறு அம்மாவிடம் பேச்சு கொடுத்தேன். ” அம்மா அண்ணி பக்கத்தில் நிற்கிறாங்க பாருங்க, இவங்க பேரு கீதாவாம். இஞ்சினியரிங் முடிச்சிருக்காங்க. அழகாகவும் இருக்கிறாங்க, குணசாலியாகவும் தெரிஞ்சாங்க. அங்கங்கே பார்க்கிறதுக்கு, அண்ணிக்கிட்ட பேசி… இவங்களையே நம்ம அண்ணாவுக்கு முடித்தால் என்ன?” என்று மெல்ல தூண்டிலை போட்டேன்.
அம்மா கொஞ்ச யோசித்தாலும் ” உனக்கு பிடித்திரிந்தால் பேசி பார்க்கிறேன்” என்றார்கள். அண்ணாவுடைய கண்கள் டிவியை பார்த்துக்கொண்டிருந்தாலும், காது ரெண்டும் எங்களுடன் தான் இருந்ததால், என்னை நன்றியுணர்ச்சியோடு பார்த்து ஒரு சிரிப்பு சிரித்தான். அப்புறம் விஷயம் எல்லாம் படு வேகமாக நடந்தது.
************************
மணமேடையில் இதோ எங்க அண்ணாவும் , கீதா அண்ணியும் மாலையும் கழுத்துமாக நின்று அசடு வழிந்து கொண்டிருந்தார்கள். அண்ணிக்கு எல்லாவிஷயமும் தெரியுமாததால் என்னை பாசத்தோடு தோழியாக நிற்கவைத்து கொண்டார்கள். நானும் அங்கு வந்தவர்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்திக்கொண்டு இருந்தேன்.
திடீரென்று அண்ணி முகத்தில் ஆயிரம் வாட்ஸ் வெளிச்சம் பரவியது.அவங்க ஒன்றுவிட்ட விசு அண்ணன் கடைசி நேரத்தில் பகவானின் கருணையால் லீவு கிடைத்து, மனதை கவரும், பளீரென்ற சிரிப்புடன் வந்து கொண்டிருந்தது தான் காரணம். அவரை பார்த்து கொண்டிருந்த நான் தற்செயலாக அண்ணாவை பார்த்தேன், அவன் என்னையே ஒரு மாதிரி பார்த்துகொண்டிருந்தான். ஒரு வேளை அண்ணியின் அண்ணாவை என்னையறியாமல் ஓவராக பார்த்துவிட்டோமோ. மனம் பதபதைத்தது. வலுக்கட்டாயமாக கூட்டத்தில் கண்களை திருப்பினேன்.
“வசந்திமா..”
“ம்…” அண்ணாவை நோக்கினேன்.
“நீ எவ்வளவு நேரமாக இங்கே நிற்கிறாய். அம்மாவையும் ஒரு எட்டு பார்த்துவிட்டு வா. தண்ணி , ஜூஸ் என்று ஏதாவது சாப்பிட வை சரியா”. என்று அங்கிருந்து கிளப்பினான் என் அருமை அண்ணன். எனக்கு எப்படி இருந்திருக்கும் நீங்களே சொல்லுங்க.
என்ன ஒரு நன்றி கெட்ட உலகமடா என்று பெருமி.. பெருமூச்சு விட்டு கொண்டு கிளம்பினேன் நான்.

அண்மைய மறுமொழிகள்