Posts filed under ‘சிறுகதை’
ஒரு நிமிட கதை.
திருட்டுதனமா ஒரு சீடி
இந்த சீடி கையில் கிடைத்து ஏறக்குறைய ஒரு மாதம் ஆகிவிட்டது, ஆனால் நான் இன்னும் இதை பார்க்கவில்லை. நேரமே கிடைக்கவில்லை , அப்படியே கிடைத்தாலும் யாராவது வந்து வந்து விடுகிறார்கள்… ம் … இன்னைக்கு எப்படியாவது பார்த்துவிடவேண்டும் என்று என் அறையின் கதவை அடைத்தேன்.
என் அறையில் கட்டில் அருகே வைத்திருந்த கணனியை உயிர்ப்பித்தேன். பாப்பா ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாள்.
நான் என்னிடமிருந்த குறுந்தகடை வைத்த சப்தத்தில் , என் மனைவியிடமிருந்து மெல்லிய குரல் வந்தது,
“என்னப்பா பண்ணுறீங்க தூங்கலையா?”
“தூங்குறேன்…… நீ தூங்கு”
“தூங்கவிட்டாதானே… அதை முதல்ல அங்கிட்டாம தூக்கி போடுங்க சதா சர்வ காலாமும் அதோட என்ன தான் செய்வீங்களோ” தூக்கம் கலைந்த எரிச்சல் அதில் ஒட்டி இருந்தது.
“பேசாம படு தாயி… நான் கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு தூங்குகிறேன்”
“என்ன பார்க்கப்போறீங்க”
“ஆங்… அதெல்லாம் உனக்கு எதுக்கு… நீ அதை பார்க்க வேண்டாம்”
“என்ன… நான் பார்க்கவேண்டாமா? அது என்ன சீடி?”
“வேண்டுமென்றால் உனக்கு அப்புறம் சொல்லித் தருகிறேன்” என்றேன் நமட்டு சிரிப்புடன்.
“சொல்லித் தருவீங்களா….? “ பட்டென்று உறக்கம் கலந்து படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்துகொண்டாள்.
“அப்படி என்ன சீடிப்பா பாக்கப்போறீங்க சொல்லுங்க”
“உனக்கு தேவையில்லாததை பற்றி நினைக்காம தூங்குமா” . இந்த பேச்சு ரெம்பவே அவளை உசுப்பேற்றி விட்டது என்று , அவள் விடுக்கென்று படுக்கையிலிருந்து எழுந்த வேகத்திலே தெரிந்தது.
நான் வேறு வழியில்லாமல் கணனி மானிட்டரை அமர்த்திவிட்டு , எழுந்து அவளை அங்கிருந்து நகர விடாமல் ,
“போய் தூங்கும்மா..”
“எனக்கு இப்ப நீங்க என்ன செய்றீங்கன்னு தெரியணும்..” என்று என்னை பிடித்து தள்ளிவிட்டு , வேகமாக முன்னேற… நான் தடுக்க.. ஒரு மினி சர்க்கஸ் பண்ணிவிட்டு தவ்வி கணனி திரையை உயிர்ப்பித்து விட்டாள். ஒரு நிமிடத்தில் நான் பார்த்துகொண்டிருந்ததை தெரிந்து கொண்டு கொலை வெறியுடன், அப்பாவியாய் முகத்தை வைத்து கொண்டு நின்ற என்னை நோக்கி ………………………….
’
’
’
சரி அப்படி என்ன சீடி பார்த்தேன் என்று கேட்கிறீங்களா… ஒண்ணுமில்லைங்க என் பாப்பாவோட பிறந்த நாள் சீடி தான் பார்த்தேன்.
Shock
கக் கக்….என்று விக்கலுக்கிடையில் குனிந்து தீவிரமாக எழுதிக் கொண்டிருந்த கணவரிடம் சென்று சற்று தயங்கியபடியே,
” அத்தான்”
”என்ன”
“நான் ஒண்ணு சொன்னா கோச்சுக்க மாட்டீங்களே”
“ம்”
“கண்டிப்பா கோச்சுக்க கூடாது”
தலையை நிமிர்த்தி “என்னன்னு சொல்லு” என்றார். சிறிது எரிச்சல் அதில் இருந்ததால்,
“பாத்தீங்களா… கோபம் வருது உங்களுக்கு“
“சரி….. சொல்லும்மா எனக்கு வேலை இருக்கு“
“அப்படியே திட்டினாலும் போனது ஒண்ணும் திரும்ப வந்துடாது”
சிறுது அலர்ட்டாகி “என்னது இப்பொ போயிடுச்சு“
”நிச்சயமா கோபப்படமாட்டீங்களே?”
“அதான் படமாட்டேன்னு சொல்லியாச்சில்ல”
“வந்து…” என்று அரைமணி நேரம் ஊறவைத்து, washing machine நில் துவைத்து dry பண்ணிய சட்டை பாக்கெட்டிலிருந்து அவருடைய வேலை சார்ந்த அனைத்து பையில்களையும் உள்ளடக்கிய Flash Drive வை எடுத்து கொடுத்தேன்.
அவருடையை முகத்தில் சொல்ல முடியாத ஒரு உணர்ச்சி பரவியது… மூச்சும் விடவில்லை, விக்கலையும் காணவில்லை…. நான் ஒரு நிமிடம் நடுநடுங்கி போய்விட்டென்.
பின் சுதாரித்துக் கொண்டு “இல்ல….விக்கலெடுக்கும் போது எதாவது ஷாக் அடிக்கிற மாதிரி சொன்னா விக்கல் நிக்கும்ன்னு சொன்னாங்க… அதான் அப்படி சொன்னேன்… மற்றபடி அதை washing machine இல் போடவில்லை.”
இருந்தாலும் அவரால் அதிர்ச்சியிலிருந்து மீளமுடியவில்லை. “அதுக்காக இப்படியா…உன்னை……………….”.
அதுக்கப்புறம் நடந்ததெல்லாம் சென்சார்………….. (கொட்டு வாங்கியதை எல்லாம் சொன்னா என்னுடைய இம்மேஜ் என்னாகிறது……. நிஜமா கொட்டு தான் வாங்கினேன் நம்புங்க)
எட்டாக்கனி
“லில்லீ…………………..” எங்கம்மா பொறுமையின் எல்லைக்கு போய் கத்தினாள்.
“தோ.. வர்றேன்” என்றேன் , கண்ணாடியிலிருந்து முகத்தை எடுக்காமல்.
“ஏய் பூசனிக்கா, கண்டதையும் பூசி இன்னும் பெருசாயிடாத ” அண்ணன் கிடைத்த கேப்பில் வம்பிழுத்தான்.
“பாருங்கம்மா“
“போடா அவளுக்கு என்னடா குறை. “
“அவளுக்கு ஒரு குறையும் இல்லைமா, அதானே பிரச்சனை. தலையிலிருந்து கால்வரை எங்கேயும் குறையில்லாமல் அப்படியே தலையணை மாதிரி இருக்கா.”
” உன்னை மாதிரி ஒட்டக சிவிங்கியாட்டம் இல்லாம அவ ஒருத்திதான் பிள்ளை மாதிரி இருக்கா. போடா அண்ணன் உன்னை அப்பவே தேடிட்டு இருந்தான். போ. “
அம்மா அவனை விரட்டினாள்.
“ஆமா தெரியாமத்தான் கேக்கிறேன், தினமும் போடுற பவுடரையும், பொட்டையும் வைக்க இவ்ளோ நேரமாடீ ?”
“விதவிதமா முயற்சி பண்ணித்தான் பார்த்தா, ஆனா ஒண்ணுலையும் தேறல்ல, அதான் இப்படி வந்துட்டா” என்று நக்கலடித்தான்.
அம்மா முறைத்ததில் விறுவிறுவென்று கிளம்பிவிட்டான்.
“அம்மா, ஸ்கூலுக்கு நேரமாயிட்டுது, நான் சொன்னதை யோசிச்சீங்களா. எனக்கு நாளைக்கு 2500 ரூபாய் கண்டிப்பாக வேணும்“
அம்மா என்னை தயக்கத்துடன் பார்த்தார், “அடுத்த மாதம் தர்ரேனே. இந்த மாதம் கொஞ்சம் எதிர்பாராமல் செலவு வந்துவிட்டது. நம்ம தோட்டத்தில் வேலை செய்யற பொன்மணி , வேற பொண்ணுக்கு பீஸ் கட்டறதுக்கு கேட்டா…….. .”
“என்னம்மா நீ, எதை கேட்டாலும் ஒரு கதை சொல்லு, எனக்கு கண்டிப்பா வேணும் ” என்று எகிறினேன்.
கொஞ்சம் கோபத்துடன் ” ஆனாலும் உனக்கு கொஞ்சம் கை நீளம்தான், இப்படி செலவளித்து பழகாதேன்னு எத்தனை தடவை சொல்றது? எத்தனையோ பேர் சாப்பாட்டுக்கும், படிப்புக்கும் கஷ்டப்படுறாங்க……. எப்படி தான் இப்படி ஊதாரித்தனமா செலவளிக்க மனசு வருதோ” பதிலுக்கு அலுத்து கொண்டாள்.
அம்மா ஒற்றை ஆளாக நின்று எங்களை ஆளாக்கியவர். கஷ்டங்களையும், மனிதர்களின் குணங்களையும் பார்த்து பண்பட்டு பக்குவத்தை அடைந்தவர். நானு கொஞ்சம் ஷோக்கு பேர்வழி. மற்ற விஷையங்களில் நல்ல பிள்ளையாக இருக்கும் நான், காசை மாத்திரம் சக்கரை மாதிரி கரைத்து விடுவேன். இப்போதும் ஒரு தோழியின் கல்யாணத்திற்க்கு சேலை எடுக்கத்தான், பணம் தேவைபட்டது.
அதற்கு மேல் சண்டை போடமல் ஸ்கூலுக்கு கிளம்பினேன், இரண்டு பஸ் பிடிக்கவேண்டும். நெரிசலான பேருந்து நிலையத்தில் என்னுடைய பேருந்தை தேடும் போது தான் அந்த குரல் கேட்டது.
” பத்து ரூபாய்க்கு மூன்று ….பத்து ரூபாய்க்கு மூன்று ….
அக்கா வாங்குங்க… பத்து ரூபாய்க்கு மூன்று ….
சமையல் , கோலம் , இந்தி புக் எல்லாம் இருக்கு……
அக்கா வாங்க……..”
என்று படபடத்த சிறுவனின் குரல் எனக்கு ரெம்ப பழக்கமானது.
பஸ்ஸுக்கு அந்த பக்கம் போய் பார்த்தால், சங்கர்!
“ஏய் சங்கர் இங்க என்ன பண்ணுற, ஸ்கூலுக்கு வரல்லியா?”
ஒரு நிமிடம் சோக ரேகை படர்ந்தாலும், சமாளித்து விட்டு
“எங்கம்மாவுக்கு உடம்பு சரியில்லை, அதனால் ரெண்டு நாளா கூலி வேலைக்கு போகலை, இனிமேலும் போறது கஷ்டம் தான். வீட்டுல தம்பி, குட்டி தங்கச்சி வேற இருக்காங்க அதனால இனிமேல் ஸ்கூலுக்கு வரமாட்டேன் டீச்சர். பேசிட்டு நிக்கிறத பாத்தா ஓனர் திட்டுவாரு , போயிட்டு வற்றேன் டீச்சர்” என்று படபடவென்று பேசிவிட்டு , அடுத்த பஸ் பக்கம் விரைந்தான்.
நான் இடிச்ச புளியாட்டம் , பேருந்தில் ஏறி உட்கார்ந்தேன். தூரத்தில்
“ பத்து ரூபாய்க்கு மூன்று ….பத்து ரூபாய்க்கு மூன்று ….
அக்கா வாங்குங்க… பத்து ரூபாய்க்கு மூன்று …………” என்று கேட்டது.
சங்கர்! படிப்பிலும் பேச்சிலும் எல்லோரையும் கவர்ந்து இழுக்கும், ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுவன். வகுப்பே கலகலக்கும் அவனால். எப்போது சிரித்த முகத்துடன் வளைய வரும் துடிப்பான சங்கர் , இனிமேல் படிக்க வரமாட்டான் என்ற நினைப்பு மனதில் பாரமாக அழுத்தியது.
அடுத்த நாள், காலையில் புறப்படும் போது, ரூபாயை எண்ணி என் மேஜையின் மேல் வைத்துகொண்டு
” என்ன கலர் சேலை எடுக்கப்போற? கடைக்கு யார்கூட போக போற?” என்று கேள்விகளை அடுக்கிக்கொண்டே போன அம்மாவிடம்
“பொன்மணியோட பொண்ணு என்னம்மா படிக்கிறா? நல்லா படிப்பாளா? “
“Diploma பண்ணிட்டிருக்கா, நல்லாத்தான் படிப்பா. இப்ப இதென்ன கேள்வி? நான் கேட்டதுக்கு பதில் சொல்லாம? “
“ஆங்….பீஸ் கட்டறதுக்கு, பொன்மணிக்கிட்ட கொடுங்க…..
நான் சேலைவாங்க போகவில்லை“
“என்னாச்சு “
“சும்மாதான் ” என்ற பதிலில், என்னை வினோதமாக பார்த்தாள்.
(சங்கர், கதாபாத்திரமல்ல நிஜமானவன்)
விளையாட வெளியே போகணும்
வீட்டில் ரெம்ப போர் அடித்தது எனக்கு, ஒரே சுட்டி பையன் வாசு, அவனும் அவன் பங்குக்கு, சேட்டை பண்ணி என்னை வெறுப்பேற்றிகொண்டிருந்தான். பாவம் அவனும் தான் என்ன பண்ணுவான்.
நான் கொடுத்த சப்பாத்தி மாவை உருண்டு, புரண்டு பிசைந்து வீடெல்லாம் சப்பாத்தி சுட்டு வைத்தான். ஸ்கெட்ச் பென்னை வைத்து கை, கால், ஷோபா என்று பாரபட்சமில்லாமல் எல்லாவற்றிலும் படம் வரைந்து தள்ளினான்.படம் வரைய கொடுத்த தாளை தோரணங்களாக வீடு முளுக்க பறக்கவிட்டான்.
காலையில் வீட்டுக்காரரை அனுப்பிவிட்டு தினமும் இருவரும் மல்லுகட்டுவதிலேயெ பொழுது போகிறது. சில நேரம் கோபமாகவும், அழுகையாகவும் வரும், பேசாமல் இந்தியாவுக்கு ஓடிப்போய்விடலாம என்று தோன்றும். வெளிநாட்டு வாழ்க்கை இப்படி கொடுமையாக இருக்கும் என்று கனவிலும் நினைத்து பார்க்கவில்லை. சரி இன்றைக்கு அவர் வந்தவுடன் வாசுவை எப்படியாவது வெளியே அழைத்து போகவேண்டும் என்று வேலையை பார்க்க ஆரம்பித்தேன்.
வாசுவை ரெடி பண்ணி, நானும் ரெடியாகி அவருடைய வருகைக்காக காத்திருக்க ஆரம்பித்தோம். இரவு எட்டு மணிக்கு சோர்வாக வந்தவரை பார்க்க பாவமாக இருந்தது, இனிமேல் வெளியே எங்கு போவது என்று கோபமும் வந்தது.
“ரெண்டு ஜீவன் வீட்டில் உங்களுக்காக உக்காந்திருக்கு என்று கொஞ்சமாச்சும் நினைப்பிருக்கா?” என்றேன் கடுப்புடன்.
“இருப்பதினால் தான் அம்மணி வீட்டிற்க்கு வந்தேன்” என்றார் அமைதியுடன்.
“வந்தா மட்டும் போதுமாக்கும். இவனிடம் நாள் முழுக்க மல்யுத்தம் செய்வது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?”
“கஷ்டமா….. அச்சச்சோ… மஸாஜ் ஏதாவது
பண்ணிவிடவேண்டுமா அம்மணி? கட்டளையிடுங்கள், காத்திருக்கிறேன்” என்று பவ்வியமாக குறுஞ்சிரிப்புடன் நின்றவரை பார்த்து சிரிப்பு வந்தாலும், இப்படியே இன்னும் எத்தனை நாள் ஏமாறுவது என்று, சிரிப்பை அடக்கி, முகத்தில் கஷ்டப்பட்டு கோபத்தை தங்கவைத்துகொண்டேன்.
முகத்தை இறுக்கி வைத்துகொண்டே வளைய வந்தேன். சாப்பாடு எல்லாம் முடித்து, வாசுவிடம் வழக்கம் போல் மல்லுக்கட்டி தூங்க வைத்த பிறகு, நானும் அவனுடன் படுத்துக்கொண்டேன்.
பக்கத்தில் வந்து படுத்தவர் ” என்னம்மா முகத்தை ஏன் இப்படி ரெண்டு அடிக்கு தூக்கி வைத்திருக்கின்றாய். கொஞ்சம் சிரியேன்“
“எனக்கு சிரிப்பு ஒன்றும் வரவில்லை“
முகத்தை சீரியஸாக வைத்து கொண்டு
“ஆங்… அப்படியா…. அப்படீனா கண்டிப்பாக சிரிக்ககூடாதுதான். “
“எதுக்குடா கல்யாணம் பண்ணிக்கொண்டேன் என்றிருக்கிறது“
சிரித்துவிட்டு “It’s too late”
இந்த நக்கல் விக்கலுக்கெல்லாம் ஒன்றும் குறைச்சலில்லை என்று மனதில் திட்டிக்கொண்டே
“எவ்வளவு நேரமா இந்த ரெண்டு ரூமுக்குள்ள நாங்க ரெண்டு பேரும் ஒடிப்பிடித்து விளையாடுவதாம், கொஞ்ச நேரம் வெளியே போனாததான் அவனுக்கும் நல்லாயிருக்கும் ….” என்று நான் என் உள்ள குமுறலை எல்லாம் அவரிடம் கொட்டித்தீர்த்தேன். “என்ன பதிலையே காணும் ” என்று எட்டிப்பார்த்தால் மனுஷன் அமைதியாக தூங்கிக்கொண்டிருக்கிறார்.
அடுத்த நாள் காலையில், வழக்கம் போல் ஆபீஸ் கிளம்புவதற்க்கு எல்லாவற்றையும் எடுத்து வைத்து கொண்டிருந்தேன். ஒன்றுமே நடக்காதது போல் ஆபீஸுக்கு கிளம்பியவரிடம் ,” இது உங்களுக்கே நல்லாயிருக்கா, நான் எவ்வளவு மனசு கஷ்டப்பட்டு நேற்றைக்கு உங்களிடம் பேசிக்கொண்டிருந்தேன், நீங்க என்னன்னா நல்ல குறட்டை விட்டு தூங்கிக்கொண்டுருந்தீய. எனக்கு எப்படி இருந்திச்சு தெரியுமா?” என்றேன்.
“ஓ.. ஆனா பாரும்மா , துங்கியதுக்கு என்னை குற்றம் சொல்லாதே அது உன்னுடைய தவறு ” என்று நமட்டு சிரிப்புடன் கூற, எனக்கு மறுபடியும் பி.பி எகிற தொடங்கியது.
“ஆங்.. அதுக்குள்ள கோபப்பட்டா எப்படி. காரணத்தை சொல்றேன் , தேன் போன்ற உன்னுடய இனிய குரலில் நீ பேச ஆரம்பித்தாலே போதும் எனக்கு தாலாட்டு பாடுற மாதிரி இருக்குது, அதனால தூங்கி விடுகிறேன் இப்ப சொல்லு அது என்னுடைய குற்றமா” .
நான் என்னத்த சொல்லறது. நல்லா பேசப் படிச்சிருக்காங்கய்யா என்றபடி அங்கிருந்து சிரித்துக்கொண்டே நகர்ந்தேன் நான்.
***************
இந்த ஊருக்கு வந்து இரன்டு மாதம் ஆகிவிட்டது. இன்று காலையிலே எனக்கு தாங்கமுடியாத தலைவலியும், காய்ச்சலுமாக பொழுது ஆரம்பித்தது. நல்ல வேளை இன்று அவருக்கு விடுமுறை ஆகையால், அவரும் வழக்கம் போல் ஒரு டயலாக் அடித்துவிட்டு “இன்னைக்கு நீ கட்டிலை விட்டு எழுந்திருக்ககூடாதும்மா. யாம் இருக்க பயம் ஏன். நானே எல்லாவற்றையும் பார்த்துகொள்கிறேன்” என்று களத்தில் குதித்தார்.
நேற்றுள்ள சாம்பார், ரசம், பொரியல் இருந்ததால், வாசுவைத்தான் கொஞ்சம் கவனித்துகொள்ள வேண்டும் என்றேன். நீ கவலையே படமல் போய் படு என்று என்னை படுத்துக்க அனுப்பிவிட்டார்.
தூக்கம் வரவில்லை, ஆனால் கண்ணை மூடி படுத்திருந்தேன். சிறிது நேரத்தில் இருவரும் பிஸியாக விளையாட ஆரம்பித்தார்கள். பின் டி.வி. பார்க்கும் சப்தம் கேட்டது. எல்லாமுமாக ஒரு மணி நேரம் கழிந்தபிறகு , ரகளை ஆரம்பித்தது.
“ஏன்டா ஒயரை பிடிச்சி இழுகிறா. இங்க வந்து ஒக்காரு”
“டேபிள் மீது ஏறாத விழுந்திடுவாய்”
“பட் பட்” என்று அடிவிழும் சப்தம், தொடர்ந்து “அம்மா… அம்மா..” என்று அழும் சப்தமும் கேட்டது. கொஞ்சம் நேர தாஜாவிற்கு பின் அமைதி நிலவியது.
சிறிது நேரத்தில் திரும்பவும் ஹிஸ்டீரியா வந்த மாதிரி கத்த ஆரம்பித்தார்.
“இந்தா ஒன்னோட டாய்ஸ் வச்சு விளையாடு , டெலிபோனை எதுக்கு எடுக்கிற”
“ஏண்டா இப்படி என் உயிரை வாங்குற. கொஞ்சம் தண்ணி குடிச்சா என்னவாம்”
கத்துவதும், அடிவிழும் சப்தமும், அழும் சப்தமுமாக மாலை வரை தொடர்ந்தது. எனக்கு தலைவலி அதிகமாகியதே ஒழிய குறைந்தபாடில்லை.
மெள்ள எழும்பி ஹாலுக்கு வந்தேன் . காத்து போன பல்லூன் போல இருந்த அவருடைய முகத்தை பார்த்து பாவமாக இருந்தது.
“ வாசுவை முடிந்தால் கொஞ்சம் வெளியே கூட்டி செல்லுங்கள்”
அவ்வளவு தான் அவுத்து விட்ட கன்று குட்டியாட்டம் குதித்தான் வாசு. இரண்டு பேரும் இரண்டு மணி நேரம் கழித்து புத்துணர்ச்சியுடன் வந்தார்கள்.
*****************
இப்பயெல்லாம் தினமும் மாலையில் எங்களை பக்கத்தில் உள்ள பார்க்கில் காணலாம்.

அண்மைய மறுமொழிகள்