சந்தேகமும்.. டரீயலும்…

 சந்தேகம் …

முன்பு என்னுடன் வேலை பார்த்த ஒரு Egyptian lady ஒரு நாள் என்னிடம் வந்து “நான் இன்று டால் சூப் செய்து கொண்டுவந்திருக்கிறேன். நீ கண்டிப்பாக அதை வந்து சாப்பிட்டு பார்க்கவேண்டும் ” என்று பாசமுடன் அழைத்தார். இதென்ன பிசாத்து வேலை என்று நானும் கிளம்பிவிட்டேன். எல்லாரும் சாப்பிட்டு விட்டு ஆகா ஓகோ என்று புகழ்ந்து தள்ளி விட்டார்கள். நிஜமாகவே சூப் ரெம்ப நன்றாகத்தான் இருந்தது. அதனால் நானும் ரெம்ப நன்றாக இருக்கின்றது என்று சொல்லிவிட்டு வந்தேன்.

இருந்தாலும் எனக்கு வந்த சந்தேகம் என்னன்னா நம்ம ஊர் சாம்பாரை டால் சூப் என்று அவங்க குடிக்கிறார்களா அல்லது அவங்க டால் சூப்பை நாம் சாம்பார் என்று சாப்பிடுகிறோமா ?

டரீயல் ….

Long long before நான் வாங்கி வைத்திருந்த car lisence ஐ தூசி தட்டி எடுத்து என் வீட்டுகாரரிடம் “அத்தான் எனக்கு கொஞ்சம் training  கொடுங்க நானும் கார் ஓட்டுகிறேன்” என்றேன்.

அவர் என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு “தாயே.. ஆ.. ஊன்னா கொடிபிடிச்சிருவாங்கன்னு பயந்தோ என்னமோ பாதி கம்பெனியையும் ஒழிச்சி கொண்டு வச்சிருக்காங்க.. ஆட்டோவும் போகாது பஸ்ஸும் போகாது. காரை ஒடச்சி எனக்கு ஆப்பு வைக்காம… ஒரு பத்து நாள் driving school க்கு போய் படிச்சிட்டு வா … அப்புறம் உனக்கு நான் training கொடுக்கிறேன்” என்றார்.

சரி தான் என்று போனால். அப்பப்பா அந்த வாத்தியார் பண்ணுன அளும்பு இருக்கே.. சின்ன சின்ன விஷயத்துக்கும் என்னை கடுகடுன்னு போட்டு கடிக்க.. நான் என் பல்லை நற நறன்னு கடிக்க என்று   எப்படியோ பத்து நாள் கழித்துவிட்டேன்.

சொன்ன படியே என்னை நேரு  ஸ்டேடியத்துக்கு கூட்டிகொண்டுபோய் ஒரு அரை மணி நேரம் கார் ஓட்டுவதற்க்கு என்னை அன்ன்ன்பாக 😦  guide பண்ணினார்.
அப்புறம் வீட்டிற்க்கு வரும்போது என் மனதில் தோன்றியது “ம்… பேசாமல் driving school லில்  வந்தனத்துக்குரிய வாத்தியாரிடமே இன்னும் ஒரு பத்து நாள் பொறுமையாக படித்திருக்கலாம்”.

ஒக்ரோபர் 17, 2012 at 2:03 பிப 28 பின்னூட்டங்கள்

கடவுள் தான் என்னை காப்பாத்தணும்.

திருச்சியில் நான் கண்மணியிடம் “நான் படித்த காலேஜ் கண்மணி இது”

“ம்… இப்ப உங்க டீச்சர் எல்லாரும் உள்ள இருப்பாங்களாம்மா”

“ஆமா”

“அப்ப நாம உள்ள போலாமா?”

“எதுக்குதும்மா?”

என்னை திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு ” நீங்க பண்ணுற சேட்டையெல்லாம் உங்க டீச்சர் கிட்ட சொல்லி கொடுக்கதான் “

 

**************************

 கண்மணி என்னிடம் தீவிரமாக வழக்கடித்து கொண்டிருந்தாள். சிறிது நேரம் கேட்டுவிட்டு “கொஞ்ச நேரம் அமைதியா வரம்மாட்டியா நீ. தக்னூண்டு இருந்து கொண்டு என்ன பேச்சு பேசிற ” என்று அதட்டினேன்.

“அப்ப நான் பேசக்கூடாதா? நீங்க மாத்திரம் தான் பேசலாமோ”

“ஆமா”

“ஏன் நீங்க மாத்திரம் என்ன பெரிய வீராங்கனையோ?”

“ஆமா”

திடுதிடுன்னு பக்கத்தில் நின்றுகொண்டிருந்த மரத்தின் பக்கத்தில் போய் உற்று பார்த்துவிட்டு , ” இங்க பாரும்மா… தக்னூண்டு இருக்கிற எறும்பு எப்படி குடுகுடுன்னு மரத்தில் ஏறுதுன்னு………. அது மாதிரி நீங்க ஏறுங்க பாப்பம்

கடவுள் தான் என்னை காப்பாத்தணும்.

ஒக்ரோபர் 27, 2011 at 6:34 முப 32 பின்னூட்டங்கள்

சட்டி சுட்டதடா

                         வீட்டில் சமைக்கிறேனோ இல்லையோ வாரத்திற்க்கு ஒரு தடவை எனக்கு எப்படியாவது ஒரு தீக்காயம் இருக்கும்.  அதனால அடுப்பு கிட்ட போறதுன்னா எனக்கு இன்னமும் சின்னதா ஒரு பயம் உண்டு.  அதற்க்காக இப்படி பயந்து…. இந்த பொண்ணு என்னத்த சமச்சி…. என்னத்த சாப்பிடுகிறாரோ அந்த பாவப்பட்ட மனுஷன் என்று ஏடாகூடமாக யோசிக்க மாட்டீங்கன்னு எனக்கு தெரியும். ஏன்னா நீங்க எல்லாரும் ரெம்ப நல்லவைங்க. ( அதையும் மீறி கன்னா பின்னான்னு ஆராய்ச்சி செய்பவர்களுக்கு என் கையால் சமைத்த சாப்பாடு வீடு தேடி வரும் ).

     இப்படி ஒரு பயம் உள்ளே இருந்தாலும் அதை வெளிக்காட்டி கொள்ளாமல் அவர் மேலிருக்கும்  அளவு கடந்த பிரியத்தால்  அந்த பயத்தை துடப்பத்தை வைத்து துடைத்து எறிந்துவிட்டு  வெற்றிகரமா சமைத்து கொண்டிருக்கிரேன்னாக்கும்.  (இது மாதிரி சுய தம்பட்டம் எனக்கு பிடிக்காது என்றாலும் .. என்ன செய்ய சில நேரங்களில் இதை எல்லாம் எழுத வேண்டியது இருக்கிறது. ஏன்னா வரலாறு ரெம்ப முக்கியமாச்சே.)
 

                       சரி அதை விடுங்க விஷயத்துக்கு வருவோம். இப்படி தீக்காயம் பட்டுச்சுன்னா அவசரத்திற்க்கு ஒரு மருந்து வீட்டில் வைத்து கொள்வது மிகவும் அவசியம் தானே. என்னுடையா அக்கா ஒருத்தங்க சமீபத்தில் டூ வீலரில் இருந்து விழுந்து விட்டார்கள். காலில் சைலன்சர் சுட்டு காயம் ஏற்பட்டு சிகிச்சை எடுத்தார்கள். ஒரு வாரமாகியும் காயம் குறையவில்லை. நல்ல வீக்கமும் வலியும் இருந்ததால் பள்ளிக்கு செல்ல மிகவும் அவதிபட்டு கொண்டிருந்தார்கள்.

               அவங்க வேலை பார்க்கும் பள்ளி பக்கா கிராமம். அவங்ககிட்ட படிக்கும் ஒரு பெண்  ‘என்னா டீச்சர் இப்படி ஒரு சின்ன காயத்தை தூக்கிட்டு இத்தனை நாளா வர்ரீங்க நான் ஒரு மருந்தை கொண்டு வராட்டுமா? என்று கேட்டிருக்கிறாள். இவங்க முதலில் தயங்கினாலும் .. போட்டு தான் பார்ப்போமே என்று ஒரு சின்ன பாட்டிலில் வாங்கி போட்டால்……. ஒரே நாளில் வீக்கம் குறைந்து விட்டது.  அடுத்த நாள் புண் காய ஆரம்பித்துவிட்டது. நான்காவது நாள் புண் சுத்தமாக ஆறிவிட்டது. அவங்களுக்கு ஒரே ஆச்சரியம்.

                அடுத்த நாள், இது என்ன மருந்தும்மா என்று கேட்டால் அந்த பெண் சிரித்து விட்டு.. “டீச்சர் இது மருதாணி எண்ணை.  எங்கள் ஊரில் என்ன தீக்காயம் பட்டாலும் இதை தான் போடுவோம். உடனே ஆறிவிடும்” என்று கூறிவிட்டு அதன் செய்முறையும் விளக்கி இருக்கிறாள்.
 
              சரி அந்த மருதாணி எண்ணையை  எப்படி காய்ப்பார்கள் தெரியுமா? ரெம்ப ரெம்ப சுலபம் தானுங்கோ. தேவையான அளவு தேங்காய் எண்ணை ஒரு 100 மில்லி என்று வைத்து கொள்வோம், அதற்க்கு 1 கை அளவு மருதானி இலைகள் போதும். ( முடிந்தால் மருதாணியை கெட்டியாக அரைத்து கொள்ளலாம்).

                      அடுப்பில் சட்டியை காய வைத்து , அதில் எண்ணையை ஊற்றி நன்றாக காய்ந்தவுடன் மருதாணி இலைகளை (விழுதினை) போட்டு ,தீயை அணைத்து விடவும். அப்படியே இலைகளோடு ஆறவைத்து பாட்டிலில் ஊற்றி வைத்துவிட்டு தேவைப்படும் போது உபயோகபடுத்தலாம்.

                                 தீக்காயம் மட்டும் இல்லைங்க… வென்னீர் கொட்டிருச்சி.. ஆவி அடிச்சிருச்சின்னு என்ன காயம் பட்டாலும் இதை உபயோகப்படுத்தலாம். (இந்த பதிவை படிப்பதற்க்கு வென்னீரே தேவலைன்னு  சொல்லக்கூடாது).

ஜூலை 13, 2011 at 5:26 பிப 31 பின்னூட்டங்கள்

இனி ஆரஞ்சு இல்ல… ஓரஞ்சாக்கும்

                                ஒருவழியா நாங்களும் குவைத்துக்கு குட்பை சொல்லிவிட்டு  இந்தியா வந்தாச்சி. நானும் செட்டில் ஆனப்பிறகு எழுத ஆரம்பிக்கலாம் என்று நினைத்தால்… அது ஆகிற கதையா தெரியவில்லை.. அதனால் நீங்க என்னை மறக்கிறதுக்கு (ஆமா நீங்க யாரு?) முன்னால ஒரு ஆஜர் போட்டுவிட்டு போகலாம்ன்னு வந்தேன்.
   

     அங்கு இருக்கும் போது எதற்கெடுத்தாலும் அவர் வாலை பிடித்து கொண்டு பின்னாடி திரிந்தே காலத்தை கடத்திவிட்டேன்,  இங்கோ… எல்லாம் தலை கீழ் வீடு பார்க்கணுமா .. பாப்பாவுக்கு அட்மிஷனா… எல்லாவற்றிர்க்கும் நான் தான் அலைய வேண்டியதாக இருக்கிறது :(.  இருந்தாலும்   இந்தியா இந்தியா தான் .

      இப்போது மலையாள நாட்டில் இருப்பதால் இனிமேல் ஆரஞ்சு இல்ல… ஓரஞ்சாக்கும்  . கண்மணி தான் பாவம் இங்கு மலையாளம் கட்டாயம் படிக்கவேண்டும் என்பதால்…மலையாள எழுதுக்களை(எழுத்தா அது? ஏதோ  படம் மாதிரி இருக்கு)  வரைந்து தள்ளிகொண்டிருக்கிறாள் அழுதபடி.

      குவைத்தை நான் மிஸ் பண்ணாவிட்டாலும் …  என்னை இத்தனை வருடங்களாக சகித்து கொண்டிருந்த நண்பர்களை  கண்டிப்பாக மிஸ் பண்ணுகிறேன்.  எனக்கு அங்கு ஒரு ராசி இருந்தது ..ஒருத்தருடன் நன்றாக பழகிவிட்டால் போதும் உடனே அவங்க ஊரை காலிபண்ணிவிடுவார்கள். அதையும் மீறி இரண்டு தெய்வபிறவிகள்   எனக்கு நல்ல தோழிகளாக இருந்து காப்பாத்தினாங்கண்ணா அவங்கள எப்படி மறக்க முடியும்.

கிரேஸ்  : குவைத்தில் காலடி வைத்த தினத்தில் இருந்து எனக்கு இவங்க பழக்கம். ரெம்பவும் கடவுள் பக்தி உள்ளவங்க. ரெம்ப நல்ல குணமும் , பாசமும் உள்ளவங்க .. இப்படி எனக்கு இல்லாத அத்தனை குணத்துடன் எப்படி எனக்கு தோழியா இருந்தாங்கன்னு எனக்கு இப்பவும் ஒரு சந்தேகம் தான். சந்தோஷாமோ துக்கமோ எதுனடந்தாலும் எனக்கு நல்ல moral supportஆ இருந்தவங்க.I miss you Akka.

Jeno : எனக்கு கால் வலி வந்து கஷ்டப்பட்ட காலத்தில் தான் இந்த அம்மா கூட பழக்கம் ஏற்ப்பட்டது. வலியாவது புலியாவது என்று என்னை மிரட்டி சிரி சிரி என்று சிரிக்க வைத்து என்னை பாடாய் படுத்தியவர்கள். முக்கியமாக எனக்கு ஒரு பதிவையும்   ( தியேட்டர் கலாட்டா  ) எழுதி தந்தவங்க  . சும்மாவே கெக்கே பிக்கேன்னு சிரித்து கொண்டிருக்கும் எனக்கு .. இப்படி ஒரு ஆள் கிடைத்தால் சொல்லவா வேண்டும். I miss your happy face Jeno.

மே 27, 2011 at 6:26 பிப 25 பின்னூட்டங்கள்

பாயாசம் 13/12/10

                                குளிர் காலம் ஆரம்பித்துவிட்டது இங்கு. எப்போதுமே climate change ஆகும்போது அழையா விருந்தாளியா சளி காய்ச்சல் எல்லாம் கூடவே வருவது வாடிக்கை. ஆனா அடிக்கடி antibiotic எடுத்து கொள்வதும் உடம்புக்கு நல்லதல்ல என்று எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். அதனால் கொஞ்சம் precaution எடுத்து கொண்டால் சளி காய்ச்சல் வருவதை நாம் ஓரளவுக்கு தடுக்கலாம்.

   புதினா , மல்லி இலை, சிறிது இஞ்சி (குழந்தைக்களுக்கு ரெம்ப காரம் வேண்டாம்)  மூன்றையும் மிக்ஸியில் போட்டு அடித்து juice எடுத்து, தேவைக்கு சிறிது தேனும் கலந்து கொடுத்தால் , சளி காய்ச்சல் எல்லாம் கொஞ்சம் தூரமாக நிற்கும். சாதாரணமாக வாரத்தில் மூன்று நாட்கள் இந்த மாதிரி சீசனில் கொடுப்பது நலம்.

   தேன் என்று சொல்லும் போது ஒரு விஷயம் நியாபகத்திற்க்கு வருகிறது. விளம்பரம் எல்லாம் தேனாக தான் கொடுக்கிறார்கள். ஆனால் சில விஷயங்களை செய்தி தாள்களில் படிக்கும் போது பயமாக இருக்கிறது.
 
    நிறைய நல்ல பிராண்டு தேன்களில் அளவுக்கதிகமாக harmfull antibiotic கலந்திருக்கிறதாம். தேனீக்களின் வளர்ச்சிக்காகவும், தேன் உற்பத்தியை பெருக்குவதற்காகவும் இதை தேனீக்களுக்கு கொடுக்கபடுகிறது. இதை தொடர்ந்து அருந்தினால் லிவர் கிட்ணி எல்லம் பாதிக்கப்படும் என்று நிருபித்திருக்கிறார்கள்.  சுத்தமானதை தேர்வு செய்வதோடு அளவாகவும் உபயோகிப்பது நமக்கு நலம்.

************************

  அடிக்கடி சுற்றுலா செல்லும் மாணவர்கள் ஏரியிலோ, கடலிலோ அல்லது ஆற்றிலோ விழுந்துவிட்டார்கள் என்ற செய்தி வரும் போது மனதிற்க்கு ரெம்ப கஷ்டமாக இருக்கும். நல்லா நீச்சல் தெரிந்திருந்தாலும் பழக்கமில்லாத ஆற்றிலோ குளத்திலோ  குளிக்க நேர்ந்தால் , முதலில் அங்குள்ளவர்களிடம் அதை விசாரிப்பது நல்லது. டைவ் அடிகும் போது, அதன் ஆளத்தோடு அங்கு  பாறை, கல் அல்லது கான்கிரீட் ப்ளாக் என்று ஏதாவது இருக்கின்றதா என்று ஒரு தடவை உறுதி படுத்திகொள்வதும் நல்லது.

*****************************

எங்களுக்கு வருஷத்தில் நான்கு நாள் அவசர விடுப்பு எடுத்து கொள்ளலாம்.ஏற்கனவே மூன்று நாட்கள் எடுத்து விட்டதால் , ஒரு நாளை பத்திரமாக மூன்று மாதங்களாக பூதம் காப்பது போல் காத்து வைத்திருந்தேன். சரி இந்த வருஷம் தான் முடிய போகுதே.. அதை எடுக்கலாம் என்று போய் கேட்டால்.. என்னுடைய papersஐ பார்த்துவிட்டு ” உங்களுக்கு நான்கு நாட்கள் இருக்கிறதே… ஏன் ஒரு நாளும் எடுக்கவில்லையா? ” என்று கேள்வி பதிலாக வந்தது. ( இப்படி தான் வேலை பார்க்க வேண்டும் என்று மனதிற்க்குள் பாராட்டி கொண்டேன்) நோ பொறாமை please 🙂

திசெம்பர் 13, 2010 at 10:51 முப 44 பின்னூட்டங்கள்

யாருகிட்ட?

                            கண்மணி கொஞ்ச நாளாவே கொஞ்சம் ஓவரா சேட்டை பண்ணிட்டிருக்கா. அன்றும் அப்படித்தான் சாயங்காலமே பால் குடிப்பதிலிருந்து ஆரம்பித்து எதற்கெடுத்தாலும் ஒரே  அட்டகாசம்…. அப்புறமென்ன, இப்படி ரெண்டுபேரும் மல்லுக்கட்டிய சப்தத்தில் கடுப்பாகி …  கண்மணி அப்பா ரெண்டு அரட்டு போட்டபிறகு தான் அம்மையார் கொஞ்சம் நார்மலுக்கு வந்தாங்க..

                           திட்டிவிட்டோமேன்னு அவங்க அப்பாவுக்கு வருத்தம்,  திட்டிட்டாங்களேன்னு கண்மணிக்கு வருத்தம்,  வீடே திடீர்ன்னு அமைதியாயிடிச்சேன்னு எனக்கு வருத்தம். இப்படி ஆளுக்கொரு வருத்தத்தையும் தூக்க முடியாம தூக்கிட்டு தூங்க போனோம்.

                தூங்குவதற்க்கு முன்னால் கண்மணி ஒரு சின்ன செபத்தை பாவம் போல் சொல்லிமுடித்தவுடன், அவங்கப்பா,

 “கண்மணி… அம்மா அப்பா சொல் பேச்சையும்  கேட்கணும்ன்னு கொஞ்சம்  prayer பண்ணு ” என்று சொல்ல..

                         கண்மணியும் இன்னும் கொஞ்சம் பாவம் போல் முகத்தை வைத்து கொண்டு அதையும் கூறிவிட்டு படுத்து கொண்டாள்.

                       எனக்கே ரெம்ப பரிதாபமாக இருந்தது. அப்புறம் நாங்களும் சிறிது prayer பண்ணி முடித்தவுடன்,

                      என்னிடமும் “நீயும் ஒரு சொல் பேச்சையும் கேட்கிறது கிடையாது, அதனால நீயும் கண்மணி மாதிரி prayer பண்ணு. ” (கண்மணியை அரட்டுற மாதிரி)

                          நானும் ரெம்ப பாவம் போல் முகத்தை வைத்து கொண்டு , “கடவுளே நானும் எங்கம்மா, அப்பா பேச்சை கேட்டு ஒழுங்கா இருக்கணும்”  என்றேன் மகா சீரியஸாக .

                        தங்கபாண்டியர் (he…he… எல்லாம் ஒரு மரியாதை தான்) என்னை சிங்க பாண்டியர் மாதிரி ஒரு பார்வை பார்த்து முறைத்ததை பார்த்துவிட்டு,

                        “He..he… இப்ப எனக்கு நீங்க தானே அம்மாவும் அப்பாவும்.. அதான் அப்படி சொன்னேன்” ( paint அடிக்கிறதில நாங்க தான் பயங்கர expert  ஆச்சே)

                       “இந்த ஜால்ஜாப்பு எல்லாம் வேண்டாம் ஒழுங்கா நான் சொல்லறதை எல்லாம்  கேட்கணும்ன்னு prayer பண்ணு

                        நான் சிரிப்பை அடக்கிவிட்டு, மறுபடியும் முகத்தை அப்பாவியா வைத்துவிட்டு,

                  “கடவுளே  என் வீட்டுகாரர் நான் சொல்லறதை எல்லாம்  கேட்கணும்”  மகா சின்சியராக வேண்டிகொண்டேன்.

                      அவருக்கும் சிரிப்பு வந்துவிட்டது.. ஆனாலும் சிரிக்ககூடாது என்று சீரியஸாக ஏதோ பேச வாயெடுக்கும் போது, கண்மணி விசுக்கென்று படுக்கையில் இருந்து எழுந்தாள்.

                                        நான்…. என்னாச்சி தூங்கிட்டு தானே இருந்தாள் என்று யோசித்துகொண்டிருக்கும் போதே … கைகளை கூப்பி , கண்ணை மூடி “யேசப்பா நான் சொல்றபடியும் அப்பா கேட்கணும்” என்று சொல்ல…. வழக்கம் போல கலகலப்பாகி விட்டது வீடு.

நவம்பர் 22, 2010 at 6:55 முப 42 பின்னூட்டங்கள்

Teen…Teen… Teenage.

                                         என்னை ஒரு தொடர் பதிவுக்கு மந்திரன் தம்பி அழைப்புவிடுத்திருந்தார். டீன் ஏஜ் என்றால் எழுதுவதற்க்கு நிறைய உண்டு என்றாலும்… இரண்டு விஷயங்கள் மறக்கமுடியதவை. அதை எழுதலாம் என்று பார்த்தால் …கொஞ்சம் சோம்பேறித்தனம் ஒரு காரணம் என்றாலும் அதையும் தாண்டியும் காரணம் இருக்குது. அதத்தான் சொல்லப்போறேன். ….

                                       எப்பவும் ஏதாவது ஒரு பாட்டை பாடி கொண்டே அலைவது என்னுடைய பழக்கம்.  என்னுடைய பாசமலர்கள் என்னவெல்லாமோ செய்து பார்த்தார்கள் இந்த பழக்கத்தை ஒழிக்க. ம்…. ஒன்றுமே பலிக்கவில்லை. படிக்ககிற நேரத்தில் பாட்டு படிக்க முடியாதே என்று எப்பவும் என்னை படிக்க சொல்ல ஆரம்பித்தார்கள்.  படிக்கிறது எனக்கு பிடிக்காத விஷயமென்றாலும்,Maths எனக்கு ரெம்ப பிடிக்கும்.  அதனால எப்ப படிக்க சொன்னாலும், ஜாலியா பாட்டுபாடிக் கொண்டே maths போட ஆரம்பித்துவிடுவேன்.

                         கடைசியில் தீவிரமாக சதி ஆலோசனை நடத்தி வீட்டில் ஒரு எழுதப்படாத சட்டமே வந்திருச்சி.. என்னன்னா யாராவது வீட்டுல படிச்சிட்டு இருந்தாங்கன்னா.. மற்றயாரும் அவங்க disturb பண்ணுற மாதிரி சத்தம் போடக்கூடாது.  அப்படி மீறி சப்தம் போட்டா அவங்க தலையில ஒரு கொட்டு வைக்கலாம்.  ஏற்கனவே எல்லாரும் என் மேல கொலவெறியில இருக்கும் போது…. என் தலை கொடுத்தால் என்னவாகும் என்று உங்களுக்கே புரிந்திருக்கும் . Risk எடுக்க எனக்கு ரெம்பவே பயம் வந்துவிட்டது . அப்புறம் என்னாச்சி… நான் எப்ப பாட்டு பாட வாயை திறந்தாலும்… என்னக்கு ரெண்டு கொட்டு கொடுக்கவாது எங்கண்ணன் படிக்க ஆரம்பிச்சிடுவான்.

                               இப்படி ஒரு பாடகியை அநியாயமாக படாதபாடு படுத்தியதால்.. இவ்வையகம் ஒரு பொல்லாத பாடகியை இழந்துவிட்டது என்று இனிமேல் கவலைப்பட்டு என்ன புண்ணியம்?.

                              எனக்கு நினைவு தெரிந்து ஒரு பாட்டியும் தாத்தாவும் எனக்கு இல்லை.  அதனாலோ என்னவோ எனக்கு பாட்டி தாத்தா என்றால் ரெம்ப பிடிக்கும். எங்க தாத்தா வீட்டில் நாங்க இருந்தப்ப , பக்கத்து வீட்டில் எங்க சித்தி பாட்டி இருந்தாங்க.  எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் அங்க போய் பாட்டி கூட பல்லாங்குழி, தாயம் எல்லாம் விளையாடுவேன்.  அது போக வீடு கூட்டி குடுக்கிறது, அம்மியில் அரைத்து கொடுப்பது என்று சில பல எடுபிடி வேலைகளையும் செய்து கொடுப்பேன்.

                               அவங்களுக்கு நிறை பிள்ளைங்க உண்டு என்றாலும் அவங்க எப்பாவது தான் வந்து போவார்கள்.  ஆனால் பாட்டி ஒருத்தருக்க வீட்டிர்க்கும் போகமாட்டார்கள்.  கேட்டால், கடைசி வரைக்கும் யார் வீட்டிற்க்கும் போய் நிற்கும்படி கடவுள் என்னை விடமாட்டார், அதற்க்குள் என்னை யாருக்கும் எந்த கஷ்டமும் தராமல் எடுத்திருவாரு என்று ஒரு பதில் தருவாங்க.

                               சரி.. சரி அதனால என்னை பற்றி நல்ல கற்பனை எல்லாம் வளத்துக்காதீங்க ஏன்னா.. ஒரு பக்கம் இப்படி இருந்தாலும் இன்னொரு பக்கம் எலியும் பூனையுமா இரண்டு பேரும் எதுக்குத்தான் சண்டை போடவேண்டும் என்றில்லாமல் பொழுதன்னைக்கும் சண்டை போட்டுகொள்வோம்.

                            ஒரு நாள் இப்படி தான் என்னை கர்ணகொடூரமாக திட்டியதோடு நிற்காமல் கொஞ்சம் காப்பி கொண்டு வா என்று ஏவல் வேறு.  முனங்கி கொண்டே போய் காப்பி வைத்திருந்த பாத்திரத்தை பார்த்தால்…மே மாதவெயிலுக்கு சுகமாக ஜில்லென்று இருந்த கருப்பட்டி காப்பியில் ஜாலியா பிக்னிக் வந்த மாதிரி அவ்ளோ கடிஎறும்பும் மிதந்தும் நீச்சலடித்தும் விளையாடி கொண்டிருந்தது.

                              இருந்த கடுப்பில் அதை அப்படியே கப்பில் ஊற்றி பாட்டியிடம் கொடுத்துவிட்டேன்.  ஒரு வாய் வைத்தது தான் …..திடீரென்ற இடமாற்றத்தால் அந்த எறும்புகள் எல்லாம் பாட்டியின் நாவை பதம் பார்க்க..ஆ….. அம்புட்டுதான்… பாட்டியின் முகம் அஷ்டகோணலாக மாறி.. த்தூ…த்து.. என்று துப்பி என்னை பார்வையாலே எரித்துவிட்டார்கள்.  நான் ஒரு வேகத்தில் கொடுத்துவிட்டாலும்.. அவங்க முகத்தில் வேதனையை பார்த்தவுடன் ரெம்ப கஷ்டமா போச்சி.. அதையும் இதையும் கொடுத்து… கவனிக்கவேயில்லை என்று புழுகி… அப்பப்பா.

                               நிறைய நாள் நினைப்பேன் அவங்ககிட்ட உண்மையை சொல்லணும் என்று.. ஆனா கொஞ்சம் பயம் சொன்னால் குதறிவிவாங்க என்று.  இப்படி நான் நேரம் பார்த்துக்கொண்டிருக்கும் போது ஒரு நாள் அவங்க சொன்ன மாதிரியே தூங்கபோனவங்க நிரந்தரமா தூங்கிட்டாங்க.  இப்ப கூட அந்த பாட்டி நியாபகம் வந்தால் எனக்கு வருத்தமாக இருக்கும்… இப்ப வருத்தப்பட்டு என்ன புண்ணியம் நீங்களே சொல்லுங்க.

                          அதான் நான் இதை பற்றி எழுதவில்லை.

 சரி இதில் யாரையாவது கோத்து விடவேண்டுமாமே,

                அன்பழகன், பர்வதபிரியா, கனகு…. மூன்று பேரையும் கோத்துவிடுகிறேன். என்னை மாதிரி ஏதாவது காரணம் சொல்லாம நீங்களாவது ஒழுங்கா எழுதுங்க. 🙂

ஒக்ரோபர் 28, 2010 at 7:23 முப 27 பின்னூட்டங்கள்

எந்திரனும் நானும்.

                                     தினமும் கண்மணியை தூங்கவைக்கிறேன் என்று எட்டு மணிக்கு அவளுடன் படுத்து.. அப்படியே தூங்கி அப்புறம் நடுனசியில் முழித்து பிசாசு மாதிரி அலைவது வழக்கமாயிற்று. அதனால் நேற்று அவள் தூங்கியவுடன் கஷ்டப்பட்டு எழுந்துவிட்டேன்.

                                       அப்புறம் என்ன செய்ய… பொழுதே போகவில்லை. கொஞ்சம் டி.வி. அப்புறம் புத்தகம் என்று நேரத்தை கடத்திவிட்டு… computerல் உக்காந்து ஏதாவது படம் பார்க்கலாம என்று பார்த்தால் அட.. நம்ம எந்திரன்.

                                        கண்மணியின் உபயத்தால் அடுத்த வாரம் போகலாம் என்று முடிவெடுத்திருந்தாலும்… அந்த படத்தை பார்ப்பதற்க்கு முன் நம்ம சன் டிவியின் வழியாக மக்கள் எல்லாரும் எவ்வளவு training எடுத்திருகாங்கன்னு எனக்கு தெரியும். எங்கள் வீட்டில் கேபிள் கிடையாது என்பதால் அதெல்லாம்(sun tv)  நான் பார்ப்பது கிடையாது.  Just கேள்வி ஞானம் தான்.

                                        நம்ம இப்படி ஒரு preparationனும் இல்லாம போனா நல்லாயிருக்காதுன்னு.. எந்திரனை பார்க்க ஆராம்பித்தேன். படத்தை எனக்கு ரெம்ப விமர்சனம் பண்ண தெரியாது…. அதற்க்கெல்லாம் கலை கண் வேண்டுமாமே?

                                    இருந்தாலும் படத்தில் ரஜினியை தவிர வேறு யாராவது நடித்திருந்தால் இப்படி படம் ஓடியிருக்குமா என்று தெரியவில்லை. படத்தில் ப்ளஸ் பாயின்ட் ரஜினி … அப்புறம் ரஜினி… அப்புறம் ரஜினிதான்.

                                      மைனஸ் பாயின்ட் ரஜினி படத்துக்கே உரிய charm இல்லை. ஒருவேளை தியேட்டரில் பார்த்தால் இன்னும் கொஞ்சம் நல்லாயிருக்குமோ?

                                  படத்தை பார்த்துவிட்டு தூங்க போனால்… தூக்கத்தில் ஒரே ரோபோ ரஜினியின் தலையும்… தகர டப்பாவின் சப்தமும்… ஏகத்துக்கு வந்து ரெம்ப நேரம் தூங்கமுடியவில்லை. dot.

ஒக்ரோபர் 13, 2010 at 10:34 முப 28 பின்னூட்டங்கள்

கொஞ்சம் சிரிப்பு.. கொஞ்சம் கோபம்….

                        என்னுடைய நீண்ட நாள் (நான்காம் வகுப்பிலிருந்தே) 
  தோழி என்னை பார்க்க வந்திருந்தாங்க. எப்போதும் போல் உற்சாகமாக எல்லா விஷயங்களையும் பற்றி மனசுவிட்டு பேசி மகிழ்ந்தாலும், வாழ்க்கையில் சில சமயங்களில் சில வருத்தமான சம்பவங்களும் கடந்துபோகத்தானே நேரிடும். அப்படி சில நிகழ்ச்சிகளையும் மிகவும் வருத்தப்பட்டு கூறிவிட்டு, ‘ஒரு சிலர் தான் சின்ன வயதில் எப்படி இருந்தார்களோ அதே குணனலன்களுடன் இருக்கிறார்கள். பலர் வளர்ந்த பிறகு முற்றிலுமாக மாறிவிடுகிறார்கள்’ என்று கூறினார்.

                       இதை என்னுடன் கேட்டு கொண்டிருந்த கண்மணி, ‘ Aunty…  சின்ன பிள்ளையா இருக்கும் போது  ரெம்ப fatஆ இருந்தேன். இப்ப பாருங்க நானு ஒல்லியாயிட்டேன்… நானும் மாறிவிட்டேன்’ என்று மகாகவலையுடன்  சொல்ல… கவலை எல்லாம் மறந்து கலகலவென்று சிரித்து விட்டாள் என் தோழி.  

****************************************************************
                ரெம்ப நாளா என் மனதில் இருந்த விஷயம் என்றாலும்…  முதன் முதலில் இதை வெறுக்க ஆரம்பித்தது ஈராக் போரின் போது தான். அதிலும் பிபிசி இருக்கின்றதே.. அப்பப்பா முழுநேரமும் அங்கு டென்ட் போட்டு உக்கார்ந்து கொண்டு … உலக வரலாற்றிலே முதன் முறையாக இவ்வளவு சக்தி வாய்ந்த… என்று ஏவுகணையை பற்றி ஒரு பெரிய புறாணத்தையே பாடுவதும்… அதன் பிறகு எங்கு… எப்படி… விழுந்தது என்றும், அதன் பாதிப்புகளை அக்கு வேறு ஆணி வேறாக ஆய்ந்து  வழங்குவதுமாக ஆரம்பித்தது.

              அங்கு நடக்கும் அவலங்களையும் கொடுமைகளையும் ஒரு உணர்ச்சியுமேயில்லாமல் ஒரு பரபரப்பை மக்களுக்கு அளிக்கவேண்டும் என்ற ஒரே காரணத்திற்க்காக விறுவிறுப்பாக   செய்திகளை  வழங்குவது ஒரு நோயாக மாறிவிட்டது. அந்த நோய் நம் நாட்டினர்க்கும் அதி வேகமாக பரவிவிட்டது அருவருப்பாக இருக்கிறது.

                 சும்மா பிரபலங்கள் பின்னாடி போய் அவர்களை துரத்தி துரத்தி புகைப்படம் எடுப்பதும், அவர்கள் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு கதை அளப்பதும்…மீடியாக்கள்  கோள் மூட்டி கொடுக்கும் குண்டணிகளின் வேலையைத்தான் செய்கிறது. அடுத்த வீட்டில் நடக்கு விஷயங்களை அரை குறையாக கேட்டு கதை  பரப்பும் வம்பர்களே இதற்க்கு பரவாயில்லை.

செப்ரெம்பர் 28, 2010 at 7:33 முப 32 பின்னூட்டங்கள்

வந்திட்டோம்ல….

“ஊரு எப்படி இருக்கு?”

 “நல்லாயிருக்கு”

 “ஊருல எல்லாரும் எப்படி இருக்காங்க?”

 “நல்லாயிருக்காங்க”

 “மழை எல்லாம் பெய்ததா? ”

“ம்”

                      ஊருக்கு போயிட்டு வந்ததுலேயிருந்து இந்த மூன்று கேள்விக்கு தான் பதில் சொல்லிட்டு இருக்கேன். (என்ன தான் ஊருக்கு தொலைபேசியில் பேசிக் சிரித்து கொண்டாலும் நேரில் பாத்து பல்பு வாங்குகிற மாதிரி வருமா என்ன.)

 —————————————————————

                               கோவில்பட்டிக்கு போனவுடனே கண்மணி தினமும் அவங்க பெரியம்மா கூட பள்ளிக்கூடத்துக்கு செல்ல ஆரம்பித்து விட்டாங்க. என்ன தான் டயர்டா இருந்தாலும் பள்ளிக்கூடத்தை மட்டம் போடமாட்டாங்க. எனக்கு அவங்க கடமை உணர்ச்சியை பார்த்து புல்லரித்துவிட்டது என்னமோ உண்மை.

 “கண்மணி பள்ளிக்கூடத்துக்கு எல்லாம் போற கொஞ்சம் அ, ஆ, இ, ஈயும் படிச்சிட்டு வாங்க” என்றேன்.

 “அம்மா  அதெல்லாம் uniform  போட்ட பிள்ளைங்க தான் படிக்கணும். நான் எல்லாம் படிக்க வேன்டாம்

என்ற பதிலை கேட்ட பிறகு தான் எனக்கு நிம்மதியா இருந்தது.

   இந்த பதிலாவது பரவாயில்லை. ஒரு வாரம் களித்து அவங்கப்பாவுடன் தொலை பேசியில் படு அமர்களமாக பள்ளிக்கூடத்தை பற்றி சொல்லிக்கொண்டிருந்தாங்க. திடீரென்று என்னிடம் “அம்மா… அப்பா பேசுறது என் காதுக்கு புரியவேயில்லை ” என்று சிணிங்கியபடியே ரிசீவரை என்னிடம் தந்து விட்டு ஓடிட்டாங்க.

நானும்  அவங்க அப்பாகிட்ட ” என்னப்பா சொன்னீங்க கண்மணிக்கு சரியா கேட்கலையாம்?”
 
   அவர் ” கண்மணி விளையாட்டும் இருக்கணும்.. ஆனா வரும்போது கொஞ்சம் தமிழையும் படிச்சிட்டு வரணும் சரியா? என்று கேட்டேன்” என்றார்.

   சரி அப்ப இந்தம்மா எதுக்கு இப்படி நாள் விடாம பள்ளிக்கூடத்துக்கு அடிச்சி புரண்டு போனாங்க தெரியுமா? கீழப்பாருங்க 

                  ஊருக்கு போயிட்டு வந்துட்டேன்னு சொல்றதுக்கு தான் இந்த பதிவு.

செப்ரெம்பர் 2, 2010 at 6:44 முப 40 பின்னூட்டங்கள்

Older Posts


பக்கங்கள்

Blog Stats

  • 39,965 hits
ஒக்ரோபர் 2021
தி செ பு விய வெ ஞா
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

%d bloggers like this: