Archive for ஜூன், 2010

அவங்களுக்கும் ஆயிரத்தெட்டு கிலி இருக்கு

                           கண்மணிக்கு லீவு விட்டாச்சு. குட்டி போட்ட பூனையாட்டம் அதையும் இதையும் குடைந்து கொண்டிருக்கிறாங்க. வெளியே போலாம் என்றால் … அடுப்பே வேண்டாம் அப்படியே ஆம்லெட் போடலாம் என்கிற அளவுக்கு வெயில்.

                  சின்ன வயதில் கரப்பான் பூச்சியை கண்டமேனிக்கு கண்டம் போடுபவர்கள்… வளர்ந்த பிறகு கரப்பானை கண்டவுடன் காததூரம் ஓடுவதைப்போல… இரண்டு வருடங்களுக்கு முன்னால், யார் வீட்டுக்கு போகவேண்டும் என்றாலும் அவங்க வீட்டு வாசல் கதவு திறந்திருந்தால் போதும் என்று ஒரு condition தான் இருந்தது. இப்போது அவங்க வளர்ந்து பெரியவீராங்கனை ஆகிவிட்டதால்… நாமளும் கூட போனால் தான் பக்கத்து வீட்டுக்கு கூட போவேன் என்று கூடுதலாக ஒரு condition.  

                    சரி என்று பக்கத்து வீட்டுக்கு அழைத்து சென்றேன்.   அங்கு வசிப்பவர் ஒரு Dental Collegeயில் Professorஆக இருந்தவர். அவருடைய அனுபவங்களை கூறிக்கொண்டிருந்தார்.

                      இப்பவெல்லாம் பிள்ளைங்க நல்லாபடிக்கிறாங்க… நிறைய விஷயம் தெரிஞ்சி வச்சிருக்காங்களேன்னு ரெம்ப ஆச்சிரியமா இருக்கு. அதுக்காக அவங்கள பெரிய மனுஷங்கன்னு நம்ம்ம்ம்பி…. இன்னும் கொஞ்சம் நல்லாயிருக்கட்டுமேன்னு ஒரு வார்த்தை சொல்லிட்டா போச்சி… எங்க போய்… எப்ப ஓடி…. எத்தினாவது மாடியிலிருந்து  குதிப்பாங்கன்னு தெரியாது. எதுனாலும் பயந்து பவ்வியமா தான் சொல்லணும்.

                           சரி அதை விடுங்க… நமக்கெல்லாம் பொறுப்புன்னு ஒரு விஷயம் ஏழு கழுதை வயசானப்புறம் தான் வந்தது. இப்போது உள்ள பிள்ளைங்க என்னா பொறுப்பா இருக்கிறாங்க. எல்லாவற்றிற்கும் அம்மா அப்பவை பற்றிக்கொண்டு அலையாமல்… அவங்களாகவே… எதை படித்தால் நல்லது என்று ஓடி ஆடி படிப்பதிலும் சரி… வேலைத் தேடுவதிலும் சரி பயங்கர முன்னேற்றம் தான்.

                           ஆனாலும் பாருங்க…  திடீரென்று, சின்ன சின்ன விஷயங்களுக்கும் நம்ம கிட்ட நேரடியாக பேசாமல் அம்மா அப்பாவை ஆஜராக்கி…  நம்மை பேஜார்  பண்ணிடுவாங்க. அவங்க பெற்றோர்களோ…  Hitlerஐ  பாக்கிற மாதிரி… நம்மை பாத்து ஒரு lookவிடுறதுல….  நமக்கே நம்ம மேல பயம் வந்திடும்.

                      பயங்கர கஷ்டம்… இப்போது உள்ள பிள்ளைங்களை நினைத்தால்  என்று பயந்து நொந்த கதைகளை சொல்லிக்கொண்டிருந்தார்.  மாணவர்கள் ஆசிரியர்களுக்கு பயந்ததெல்லாம் பழைய காலம் போல. மாணவர்களே கொஞ்சம் கருணை காட்டுங்கப்பா…

    இது எனது 100 வது பதிவு… என்னாலே நம்ப முடியல..  🙂

ஜூன் 29, 2010 at 5:15 முப 28 பின்னூட்டங்கள்

பாயாசம்.

   வில்லதனமான கேள்வி:

          நான் ஓரளவுக்கு தினமும் exercise பண்ண தான் செய்வேன், ஆனாலும் குறைவேனான்னு மல்லுகட்டி கொண்டு திரிகிற இந்த வெயிட் பிரச்சனையை என்ன தான் செய்ய? மெயிலை delete  பண்ணுகிற மாதிரி..  weightயும் delete பண்ணமுடிஞ்சா எவ்வளவு நல்லாயிருக்கும்.

                 இப்படி என் புலம்பல்ஸ்ஸை கேட்டு கேட்டு   , என் மேல் இரக்கப்பட்டு(கடுப்பாகி )  “நான் உனக்கு எப்படி exercise பண்ணுவதென்று சொல்லித் தருகிறேன்னு”, என்னிய நாலு மணிக்கே எந்திரிக்க வச்சி , அப்படி செய்…. இப்படி செய்ன்னு….. பயங்கரமா ட்ரில் எடுத்தாரு. இப்படி மூன்று நாள் செய்தபிறகு… எனக்கே நம்ப முடியவில்லைங்க… ஒரு சுற்று குறைந்துவிட்டது….   அவருக்கு.

            அதனால,  எப்ப பார்ட்டிக்கு போனாலும்.. வயிற்றை ஜொள்ளுவிட வைக்கும் ஐட்டங்களை பார்த்தால் போதும் உடனே எல்லாரும் அலர்ட்டா இருக்கிற சமையம் பாத்து,

                 என் வீட்டம்மா தீவிரமான டயட்டில் இருக்கிறாப்புல… (என்னை பாத்து) இதுல பாத்தா…. சாலட் ஒன்று தான் நீ சாப்பிடக்கூடிய ஐட்டமா தெரியுது இல்லம்மா?”

   ஒரு டெய்லர் கடையில் நடந்தது:

டெய்லர் ஒரு சிறு பென்ணுக்கு அளவு எடுக்கிறார். அந்த பென்ணுடைய அம்மா,

    “என்ன  கழுத்து வச்சிருக்கீங்க…   இன்னும் கொஞ்சம் இறக்கம் வச்சி தைங்க..”

 அந்த பெண், “அம்மா… வேண்டாம்… எனக்கு பிடிக்கல… இறக்கம் இவ்வளவு வேண்டாம்..”

அம்மா, “சும்ம இருடி.. உனக்கு ஒண்ணும் தெரியாது. இப்படி தைத்தால் தான் அழகாக இருக்கும்”

   சிறு வயதில் சிக்கனத்தின் அருமை பெருமை எல்லம் நமக்கு புரிவதில்லை. வளர வளர அதன் அருமை பெருமை எல்லாம் உனர்ந்து எப்படி சிக்கன பேர்வழிகளாக மாறி விடுகிறோம் பாருங்கள்.

சமையல் குறிப்பு : 
 

                     தினமும் சமையல் செய்யும் போது , காயின் நிறத்தையும் கவனத்தில் கொள்ளவும். நல்ல அடர் நிறத்தில் உள்ள காய் சேர்ப்பது நல்லது. உதாரணமாக பீட்ரூட், காரட், மஞ்ச்ள் பூசனிக்காய்.

       கலர் கலரா பார்ப்பது உடம்புக்கு சில நேரம் வகை தொகையில்லாமல் பக்க விளைவுகளை ஏற்படுத்திவிடும். ஆனா  கலர் கலரா சாப்பிட்டா எப்பவுமே உடம்புக்கு ரெம்ப நல்லது.

தலைப்புக்கும்.. பதிவிற்க்கும் என்ன சம்பந்தம் என்று குழப்பி கொள்பவர்களுக்கு:

  அவியல், குவியல்ன்னு எல்லாம் பெயர் வச்சிட்டாங்க அதனால பாயாசம்ன்னு வச்சிகிட்டேன்.

ஜூன் 20, 2010 at 5:34 முப 57 பின்னூட்டங்கள்

அழகிய ராட்சஸி……..

                     இரவு மணி பத்தடித்து ஓய்ந்ததும் கடையை இழுத்து மூடிவிட்டு, ரெம்ப நாள் இழுத்தடித்த குமாரசாமி செட்டில் பண்ணிய பணத்தை எடுத்து கொண்டு,வீட்டை நோக்கி வண்டியை செலுத்தினேன்.

              அது பெரிய ஆரவாரத்துடன் கிளம்பியது. இந்த மாதம் கண்டிப்பாக , வண்டியை மாற்றிவிட வேண்டும். அது போடுற சத்தம் எனக்கே சகிக்கவில்லை, மற்றவர்களுக்கு சொல்லவேண்டுமா, ஏதோ கேட்கக்கூடாததை கேட்டுவிட்டவர்கள் போல் முகத்தை சுளித்து கொள்வார்கள். ஆள் அரவமே இல்லாத ரோட்டில் யமதர்மனை போல் கர்ஜித்துக் கொண்டு சென்றதை பார்த்து, ‘உனக்கு பாசக் கயிறு ரெடி பண்ணிட்டேன்’ என்று மனதிற்க்குள் நினைத்துகொண்டேன்.

                வண்டி திடீரென்று நின்றதால் என்னுடய சிந்தனையும் பட்டென்று நின்றது. எனக்கு இது பழக்கமான விஷயமானதால் அலட்டிக்கொள்ளாமல், வண்டியுடன் காலாற நடக்க ஆரம்பித்தேன். குறுக்கு வழியாக நடந்தால் போலீஸ் ஸ்டேஷனுக்கு பத்து நிமிடத்தில் போய்விடலாம். அங்கிருந்து சேகருடன் வீட்டுக்கு போகலாம்.

             அப்போது தான் அங்கே விறுவிறுவென்று என்னை நோக்கி நடந்து வந்த பெண்ணை கவனித்தேன். நிற்கவா…. அல்லது நடக்கவா என்று பட்டிமன்றம் நடத்திக் கொண்டு மெதுவாக ஊர்ந்து சென்ற என்னை சில நிமிடங்களில் நெருங்கி விட்டாள். தேவதை போல் இருந்ததால், ஒரு வேளை கதைகளில் வருவது போல் ஏதாவது முனிவரின் சாபத்தால் பூமிக்கு வந்த தேவதையாக இருக்குமோ என்று என் மனம் சம்பந்தமே இல்லாமல் கற்பனையில் கதை எழுதியது. இன்னும் நெருங்கி வந்த போது….. இந்த முகத்தை எங்கோ பார்த்திருக்கிறோமோ என்று தோன்றியது.

           “ Excuse me Sir. பழைய பஸ் ஸ்டாண்டுக்கு எப்படி போறதுன்னு சொல்ல முடியுமா? நான் ஊருக்கு புதுசு” என்றவளை நான் வியப்புடன் நோக்கினேன்.

        ஏதோ பக்கத்து தெருவுக்கு வழி கேட்பவளை போல் நின்றவளை பார்த்து பரிதாபமாக இருந்தது. நிஜமாகவே ஊருக்கு புதுசு தான் போல, “நடக்கிற தூரம் இல்லீங்க, ஆட்டோவில் தான் போகமுடியும், இந்த நேரத்தில் ரெம்ப அபூர்வமாகத்தான் இந்த ரோட்டில் பஸ் வரும்” என்றேன்.

          “ நான் வந்த பஸ், புது பஸ் ஸ்டாண்டுக்குத்தான் போகுமென்றும், பாலம் ஸ்டாப்பில் இறங்கினால் பழைய பஸ்டாண்டுக்கு போகலாம் என்று கண்டக்டர் சொன்னதால் இறங்கினேன். எனக்கு ஆட்டோவில் இராத்திரி வேளையில் தனியாக செல்ல பயம், கடைத்தெருதானே ஆள் அரவம் இருக்கும் நடக்கலாம் என்று நடக்க ஆரம்பித்தேன். ஆனால் நேரம் ஆக ஆக ஆள் அரவம் குறைந்து கொண்டேயிருப்பதால்…

              “பரவாயில்லை இன்னும் கொஞ்சம் தூரம் நடந்தால் ஒரு ஆட்டோ ஸ்டாண்டு வரும் ,எனக்கு தெரிந்தவர்கள் தான்.. பயப்படவேண்டாம்… நான் கூட வருகிறேன்… அங்கேயிருந்து ஆட்டோவில் செல்லலாம் ” என்று அவளுடன் நடக்க ஆரம்பித்தேன்.

         அவள் தூரத்தில் வரும் போது சண்டித்தனம் செய்த மனது, இப்போது ஏதோ கடமை கண்ணியம் என்று நல்ல பிள்ளையாக வாலை சுருட்டி கொண்டது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.இது ஒரு பக்கம் இருந்தாலும்…ஒரு ஓரமாக என் மனதிற்க்குள் இந்த பெண்ணை எங்கு பார்த்திருக்கலாம் என்ற ஆராய்ச்சியை நடத்தி கொண்டிருந்தது. ம்…. ஒருவேளை கல்யாணத்திற்க்கு பொண்ணு பார்க்கிறேன் என்று அம்மா கண்டபடி கடைவிரித்திருக்கும் புகைப்படத்தை பார்த்ததால் வந்த பிரம்மையோ.

 “சார், இன்னுமொரு உதவி செய்ய முடியுமா? எனக்கு நூறு ரூபாய்க்கு சில்லரை வாங்கி தரமுடியுமா ?”

             என்னிடம் சில்லரை இல்லை. ரோட்டுக்கு அந்தப் பக்கம் , ஒரு கடை உயிருடன் இருப்பது தெரிந்தது. “அந்த கடையில் சில்லரை கேட்டு பார்க்கிறேன், நீங்கள் இங்கு பயமில்லாமல் நிற்பீர்களா? “

 “ஒன்றும் பயமில்லை சார்….

                   கடையில் சென்று சில்லரை வாங்கிகொடுத்துவிட்டு, இருவரும் நடந்தோம். என்னவெல்லாமோ என் மனம் அவளிடம் பேச ஆசைப்பட்டது…. ஆனால் ஒன்றுமே வெளியே வரவில்லை..

                அப்பப்ப ஓரக்கண்ணால் அவளை அளவிட்டபடியே மிதந்தேன். கலந்த தலை முடி எனக்கு கவிதை மாதிரியும் , மடிப்பு விழுத்த சேலையோ மாட்ர்ன் ஆர்ட் போலவும்  என்னை சொக்கவைத்தது.

                  அவளிடம் இருந்து வந்த மெல்லிய மணமும், ஒயிலான நடையும், சிணுங்கி கொண்டு வந்த கொலுசு சப்தமும் என்னை அளவுக்கதிமாக மயக்கி ஒரு மோகன நிலைக்கு தள்ளியது. பார்த்தவுடனே இப்படி ஒரு பெண் தன்னை பாதிப்புக்கு உள்ளாக்கியது எனக்கு ஆச்சர்யத்தை கொடுத்தாலும் அதை ரசிக்கவே செய்தேன்.

                                       சட்டென்று வந்த ஆட்டோ standடினை சபித்த படி, அவளை ஏற்றிவிட்டு…. பெயரை கேட்க மறந்துவிட்டேனே.. என்று நொந்து கொண்டாலும்.. இனிமையான அவள் நினைவுடன்… சேகரை பார்க்க சென்றேன்.

                வண்டியை தள்ளி கொண்டு சென்ற என்னை பார்த்த ஏட்டு  ,  இன்ஸ்பெக்டர் சேகருடைய நண்பன் என்ற ஒரே காரணத்திற்க்காக சிரிப்பை அடக்கியது வெளிப்படையாக தெரிந்தாலும்..சட்டை பண்ணாமல், என்னுடைய பையை எடுத்துக்கொண்டு சேகரிடம் சென்றேன் .

என்னடா மாப்பிள காளை…. கவுத்திடுச்சா?” என்று வழக்கமான கிண்டலுடன் வரவேற்ற நன்பனை பார்த்து சிரித்து விட்டு,

கிளம்புறியா இல்ல இன்னும் வேலை இருக்கா?”

 “இல்லடா.. முடிஞ்சாச்சு .. கொஞ்சம் வெயிட் பண்ணு … நான் இதோ வந்து விடுகிறேன்” .

          அவன் இருக்கை அருகே இருந்த புகைப்படங்களை நோட்டம் விட்டபடியே உக்கார்ந்து இருந்த நான், ” தேடப்படும் முக்கிய குற்றவாளிகள்”   என்று  ஒட்டப்பட்டிருந்த அந்த புகைப்படத்தை பார்த்து அதிர்ந்து , “அடப்பாவி……. உன்னை இங்கேயா பார்த்திருக்கேன்” என்று என்னை அறியாமல் என் வாய் முணுமுணுத்ததும் அல்லாமல், அனிச்சையாக என் பையையை திறந்து பார்த்ததும் என் தலையும் அதிவேகமாக சுற்ற ஆரம்பித்து.

ஜூன் 14, 2010 at 5:02 முப 27 பின்னூட்டங்கள்

புத்திசாலித்தனமான கேள்வி(!).

                   ஒரு குட்டி பையன் அவனுடைய அம்மாவிடம்

                 “அம்மா.. பாப்பா எப்படி வருது” என்று கேட்பான்.

அம்மா சற்று திகைப்புடன், “நீ இப்ப ரெம்ப சின்ன பையன்… கொஞ்சம் வளர்ந்த பிறகு சொல்கிறேன்” என்று பதில் தருவாங்க.

உடனே அந்த சிறுவன், பாலை எடுத்து மடமடவென்று குடிப்பதாக அந்த விளம்பரம் முடியும்.

அனேகமாக நிறைய பேர் இந்த விளம்பரத்தை பார்த்திருக்கலாம். என்னடா விளம்பரத்தை விளம்பரம் பண்ணுரா.. என்று கோச்சுக்காதீங்க. நான் சொல்ல வந்த விஷயமே வேற.

சமீபத்தில் ஒரு வார இதழில் இந்த விளம்பரத்தை விமர்சித்து ஒருத்தங்க எழுதியிருந்தாங்க. நான் அவங்கள குறை சொல்லவில்லை… ஆனால் அவங்க கேள்வி எனக்கு உடன்பாடில்லை அதனால உங்களிடம் கேட்கிறேன்.

என்னன்னா…

“நான் எப்போது எஞ்சினியர் ஆவேன் என்றோ அல்லது டாக்டர் ஆவேன் என்று கேள்வியை புத்திசாலித்தனமா கேட்கவைத்திருக்கலாமே” என்று ஆற்றாமையோடு கேள்வி கேட்டிருந்தார்.

புத்திசாலிப்பிள்ளைங்க இப்படித்தான் கேள்விகேட்கணுமா?

பிள்ளைங்களை.. இது தான் படிக்கணும் என்று ஏற்கனவே படுத்துகிற கொடுமைப் போதாதென்று இப்படித்தான் சிந்திக்க வேண்டும்… இப்படித்தான் சந்தேகம் வரவேண்டும்… என்று அவர்களுக்காக நாம் வரைமுறை வகுப்பது சரியா?

ஜூன் 6, 2010 at 6:53 முப 28 பின்னூட்டங்கள்


பக்கங்கள்

Blog Stats

  • 40,090 hits
ஜூன் 2010
தி செ பு விய வெ ஞா
 123456
78910111213
14151617181920
21222324252627
282930